ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனம் பலியாக்கப்படும் எழுதப்படாத சட்டத்திற்கு இலக்கானவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மலையக மக்கள் ஒன்றுதிரண்டால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் -அனந்தி சசிதரன்

573

அரசியல் பித்தலாட்டங்களால் ஏமாற்றப்பட்டு நாளைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என எண்ணி ஏங்கும் ஒரு குறுந்தமிழ் சமூகம் மலையகசமூகம். தொழிற்சங்கப்போட்டியும், வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி, வேலிபோட்டு மக்களை மந்தைகளாக நினைத்து கட்டிவைக்க முயல்கின்றன. இதுவே நடைமுறை உண்மையும் கூட. மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை, நலன்களை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. இவர்களது உழைப்பு கடுமையான வகையில் பிழியப்பட்டு வந்தாலும் மற்றைய இனங்கள் போல இவர்கள் இன்னும் தேசியப்படுத்தப்படவில்லை. மாறாக இம்மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுவதில் தவறவிடப்படவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும், வாழ்வையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளாத அரசியல் தலைமைகள் மலையக மக்கள் தொடர்பில் கொண்டிருக்கும் சிந்தனை அரசியல் அடிப்படையில் மிகவும் பிற்போக்கானதாக உள்ளது. 2012-01-03-MunnarTeaPlantationWorkerஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனம் பலியாக்கப்படும் எழுதப்படாத சட்டத்திற்கு இலக்கானவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாடுகடத்தல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கடத்தப்பட்ட இம்மக்கள் தமது தாய்நாடு எது என்று முடிவெடுப்பதில் கூட சிக்கலையே சந்தித்து வருகின்றனர். வந்தேறு குடிகளாக வந்தவர்கள் இலங்கையில் திட்டமிட்ட தொடர்ச்சியான இனவழிப்பு வரலாற்றுக்கு உட்படுத்தப்பட்டவர்களானார்கள். இன்றும் பல நெருக்கடிகளை அனுபவித்தே வருகின்றனர். வரலாற்றிலிருந்து இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரபட்சம் குறித்து இம்மக்களை நிர்வகித்து வருபவர்கள் இன்னும் அக்கறைப்படவில்லை. இன்று வரை இவர்களுக்காக எதையும் செய்துள்ளதாகவும் அறியமுடியவில்லை. இலங்கையில் தமிழ்மக்கள் பிரச்சினை என்று பேசப்படுகின்ற அனைத்து விடயங்களும் ஒருபுறம் வடக்கு கிழக்கு தமிழ்மக்களையும், மறுபுறம் முஸ்லீம் மக்களையும் மையப்படுத்தியுள்ளது. உண்மையில் வரலாற்றில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களுள் வடகிழக்கு தமிழ்மக்கள் பிரதான இடத்தைப் பெறுகின்றனர். அந்தவகையில் வடகிழக்கு தமிழ்மக்களது பிரச்சினைகளும், முஸ்லீம் மக்களது பிரச்சினைகளும் இரு தலைமைகளாலும் பேசுபொருளாக எடுத்தாளப்படுகிறது. ஆனால் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளில் மட்டும் தமிழ்த்தேசியத்தை புரிந்துகொள்வதில் இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் ஒருக்காலும் முழுமைபெறாது. காலனித்துவவாதிகள் உலகெங்கும் மனிதனை கடத்திச்சென்று சூறையாடி அவர்களது உழைப்பை பெற்று எப்படி செழிப்பான வாழ்க்கைக்கு தம்மைத் தயாராக்கிக் கொண்டனரோ அதுவே இலங்கைக்குள்ளும் நடக்கிறது. tea pluckerமேற்கத்தேயவாதிகள் தமது பொருளாதார நலனுக்காக மனிதவளங்களைப் பெற்றுக்கொள்ள இரண்டு வழிமுறைகளை அன்று கையாண்டனர். ஒன்று பலாத்காரமாக மனிதர்களை அடிமையாகக் கடத்துவது. மற்றையது வர்க்க, இன, மத, நிற, சாதி முரண்பாடுகளை பயன்படுத்தி ஆசை காட்டியும், நிர்ப்பந்தம் கொடுத்தும் ஓரிடத்திலிருந்து அகற்றுவது. இது அரையடிமை முறை எனப்பட்டது. இதற்கு மறுபுறம் சாதியம், வறுமை போன்றன உதவியிருந்தன. இதில் இரண்டாவது வகைப்பாட்டினடிப்படையிலேயே இலங்கைக்கு இம்மக்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இப்படியாக வரவழைக்கப்பட்ட இவர்களது வரலாறு 1823ஆம் ஆண்டு முதல் இலங்கை வரலாற்றில் உள்வாங்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி என அனைத்து துறையிலும் மலையக மக்களின் உழைப்பு படிந்து கிடக்கிறது. உலகெங்கும் பருகப்படும் தேநீரில் மலையக மக்களின் இரத்தமும், சுவையும் கலந்து கிடக்கிறது. இதை இன்னும் இவர்கள் உணராதபடியினால் இவர்கள் இன்னும் சுரண்டலுக்குள்ளேயே வாழ்க்கை நடத்திவருகிறார்கள். ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறையுள் போன்ற வசதிகள் கூட இன்றைய காலத்துக்கு ஏற்றவகையில் இன்னும் நிறைவு காணப்படவில்லை. ஆங்கிலேயரால் உருவாக்கித்தரப்பட்ட லயன்களில்தான் இன்றும் இம்மக்கள் வாழ்கின்றனர். உளவியல் ரீதியிலான வளர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை. அறியாமை, உலக அறிவின்மை, கல்வி வளர்ச்சியின்மை, கல்வித்தரத்தில் சீரான வளர்ச்சி வேகமின்மை, தகுந்த வேலைவாய்ப்பின்மை, செப்பனிடப்படாத சாலைகள், வசதிகளற்ற மருத்;துவமனைகள், மின்சாரமில்லாத குடிமனைகள் என இங்குள்ள பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இங்குள்ள பிரச்சினைகளை கண்டுகொண்டு அவற்றுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களுக்கும் போதிய ஆதரவு கிடைப்பதில்லை. மொத்தத்தில் பிரச்சினைகளை பட்டியலிடத் தெரிந்த மக்கள் அதை தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் இன்னும் பின்னிற்கின்றனர். இங்கு உருவாகிய, உருவாகியுள்ள தலைமைகள் குறித்துப் பார்த்தால் பரம்பரையாக உருவாக்கப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் தலைமைகள் ஒரு புறமும், அரசியல் தலைமைகள் மறுபுறமும் என மலையக மக்களைப் பிரித்து தத்தமது சுகபோக இலாபங்களுக்காக அவர்களைப் பலிக்கடா ஆக்கிக்கொண்டிருக்கின்றனர். அதேவேளை மலையகத்தை சார்ந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கீழ் மக்களும் பிரிந்தே செயற்பட்டு வருகின்றனர். இதனை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு தலைமையின் கீழும் கொள்கை, கோட்பாடு என செயற்பட்டு வருவதனால் தான் ஒட்டுமொத்த மக்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே இருந்து வருகின்றன. அத்துடன் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் இதை நன்கு புரிந்தவர்களாக இருந்தாலும் மௌனம் காத்து வாழ்வதே அவர்களது வரலாறாகிப் போயுள்ளது. ஏனெனில் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக வாழ்வதே இவர்களது கொள்கையாக உள்ளது. மறுக்கப்பட்டு வருகின்ற இம்மக்களது உரிமைகளை மூடிமறைப்பதில் ஒரே கொள்கையின் கீழ் செயற்படுவதில் மாத்திரம் ஒற்றுமையை கடைப்பிடிக்கின்றனர். இதனை உணரவேண்டிய மக்கள் மறுபுறம் இங்குள்ள அரசியல் தலைமைகளை மட்டுமே நம்பி தமது வருங்காலத்தை பலியிடும் எண்ணத்தை அடியோடு நிறுத்த வேண்டியது அவசியம். தொழிற்சங்கங்கள், கட்சிகள் என ஒன்றையொன்று சார்ந்து வாழாது பொதுமக்கள் என்ற தளத்தினூடாக இணைய முன்வரவேண்டும். இதற்கு அடிப்படையாக முதலில் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதுவே அடிப்படையான மாற்றமாகும். இதற்கு அடுத்தபடியாக கல்வியை எப்பாடுபட்டாவது வளர்த்து விடவேண்டும். கல்வி ஒன்றே மலையகத்துக்கு விடிவை கொண்டுவரும் கொள்கை. எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்பவைகளை பகுத்து அறிந்துகொள்ள முதலில் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தொழிற்சங்கங்கள் ஊடாக தமது தொழிற்சங்க உரிமைகள் காப்பாற்றப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டும். அரசியல்வாதிகளின் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்காது அவர்களின் கடந்த கால சேவை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனத்தில் எடுத்து மக்கள் வாக்களிக்க முன்வரவேண்டும். மக்கள் நலன் குறித்த திட்டங்களுக்கு அரசியல்வாதிகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்களின் சந்தாக்களிலேயே தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. மக்களின் வாக்குகளினாலேயே நாடாளுமன்ற மாகாண சபை, பிரதேச சபைகளுக்கு அரசியல்வாதிகள் செல்கின்றனர். இவை அனைத்துக்கும் காரணகர்த்தா தாமே என்ற நிலையில் நின்று சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும். தமக்கான சிறந்த அரசியல் தொழிற்சங்க தலைமையைத் தேர்ந்தெடுக்க முன்வரவேண்டும். ஊழல் நிறைந்த ஏமாற்றுப் பேர்வழிகளை தூக்கி எறிய முன்வரவேண்டும். மலையகத்துக்கு தேசிய அரசியல் தேவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். சிறுபான்மை இனமாகப் பிரிந்து கிடக்கும் தமிழினத்தின் மலையகம் சார் தமிழ்மக்கள் அனைவரும் ஒரே இயங்குதளத்தின் கீழ் செயற்பட முன்வரவேண்டும். அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் என்ற ரீதியில் மக்கள் ஒன்றிணைய வேண்டும். இவற்றுக்கு அப்பால் மலையக அரசியல் என்ற எல்லையைக் கடந்து மலையக மக்கள் வெளிவரவேண்டும். மலையகம்சார் தமிழர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, ஈழத்தமிழருடன் இணைந்து சர்வதேச மட்டம் வரை தமது பிரச்சினைகளை கொண்டுபோக முன்வரவேண்டும். இன்று சர்வதேச சமூகம் இலங்கைப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மலையக மக்கள் பக்கமும் பார்வையை செலுத்த முயற்சி எடுக்கவேண்டும். மொத்தத்தில் புதிய எதிர்காலம் குறித்து சிந்திக்கும் அரசியல் தெளிவுடனும், தூர நோக்குடன் செயற்பட முன்வரவேண்டும். இதன்மூலம் மலையக மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதென்பது சாத்தியமான ஒன்றாக மாறும். –  அநாமிக்கா  –

SHARE