மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

249

 

vicki-national-flagவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரின் லண்டன் பயணமே இந்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல் – அதன் அனுமதி பெறாமல் யாழ்ப்பாண மாநகரசபைக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைச்சாத்திடவுள்ளார்.

%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a

யாழ்ப்பாண மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டு தற்போது மாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழேயே இயங்கி வருகிறது. வடமாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் யாழ்ப்பாண மாநகரசபையின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும், கிங்ஸ்டன் நகரசபையின் சார்பில் அதன் முதல்வர் கெவின் டேவிஸ் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளனர்.

வடமாகாணசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை, இந்த ஒப்பந்தம் யாழ். மாநகரசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் தான் செய்யப்பட உள்ளது. எனவே வடமாகாணசபைக்கு இதனை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் கூறியிருப்பதாக அவருக்கு நெருங்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் வடமாகாண முதலமைச்சர் என்ற பதவி ரீதியாகவே அவர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதால் அதனை வடமாகாணசபைக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்து வடக்கு மாகாண சபைக்குத் தெரிவிக்கப்படவோ விளக்கம் அளிக்கப்படவோ இல்லை என்று அவைத் தலைவர் சி. வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை யாழ்ப்பாண மாநகரசபையோ வடமாகாணசபையோ அல்லது வடமாகாண முதலமைச்சரோ எந்த தகவலையும் வெளியிடவில்லை. அனைத்தும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லண்டன் கிங்ஸ்டன் நகரசபையில் இந்த ஒப்பந்தம் பற்றிய விபரம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கிங்ஸ்டன் நகரசபை அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் இந்த ஒப்பந்தம் பற்றிய தகவலை அறிவித்திருக்கிறது. கிங்ஸ்டன் நகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தென்மேற்கில் கிங்ஸ்டன் நகரசபை உள்ளது. 14.38 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பகுதியில் ஒரு லட்சத்து 69ஆயிரத்து 958 பேர் வாழ்கின்றனர்.

இவர்களில் 63.1வீதமானவர்கள் பிரித்தானிய பூர்வீக குடிகள். 1.7வீதமானவர்கள் வெள்ளைஇன ஐரிஸ் இனத்தவர்கள், 9.6வீதமானவர்கள் ஏனைய வெள்ளைஇனத்தவர்கள், 4வீதமானவர்கள் இந்தியர்கள், 1.9வீதமானவர்கள் பாகிஸ்தானியர்கள், 1.8வீதமானவர்கள் சீனர்கள், 1.6வீதமானவர்கள் கறுப்பின ஆபிரிக்கர்கள், 8.1வீதமானவர்கள் ஏனைய ஆசிய நாட்டவர்கள் என கிங்ஸ்டன் நகரசபையின் இனவிகிதாசார புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அந்நகரத்தில் 12ஆயிரம் தமிழர்கள் வாழ்வதாக கூறப்பட்டாலும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் இலங்கை தமிழர்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை.

நிர்வாகம், கல்வி, வர்த்தகம், சுகாதாரம், ஆகிய துறைகளில் இரு நகரங்களுக்கும் இடையில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் துறைசார் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றே கிங்ஸ்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது என கிங்ஸ்டன் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண நகரத்துடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று கிங்ஸ்டன் நகரசபை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கிங்ஸ்டன் நகரசபையின் மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளது.

பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரசபைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் நகரசபைகள் பல்கலைக்கழகங்கள் செய்வதுண்டு. ஏற்கனவே கொழும்பு, கண்டி போன்ற மாநகரசபைகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரசபைகளுடன் ஒப்பந்தங்களை புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கின்றன. அது போன்ற ஒப்பந்தம் ஒன்றையே யாழ். மாநகரசபையும் கிங்ஸ்டன் நகரசபையும் செய்து கொள்ள உள்ளன.

கிங்ஸ்டன் நகரசபை ஏற்கனவே இது போன்ற ஒப்பந்தங்களை ஜேர்மனியின் கூட்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள குவானக்கு ஆகிய நகரங்களுடனும் செய்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் இருவரும், வடமாகாணசபை அதிகாரிகளும் யாழ். மாநகரசபை அதிகாரிகள் சிலரும் லண்டனுக்கு செல்ல உள்ளனர் என கிங்ஸ்டன் நகரசபை அறிவித்திருக்கிறது. இந்த குழுவின் பயண செலவுகளுக்கான நிதியை அங்குள்ள மக்களிடம் இருந்து திரட்ட உள்ளதாகவும் கிங்ஸ்டன் நகரசபை அறிவித்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் பற்றியும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பயணம் பற்றியும் கிங்ஸ்டன் நகரசபை வெளிப்படை தன்மையோடு அனைத்தையும் பகிரங்கப்படுத்தியிருக்கின்ற போதிலும் வடமாகாணசபையோ அல்லது யாழ். மாநகரசபை நிர்வாகவோ இதுபற்றி எந்த அறிவிப்பையும் யாழ். நகர மக்களுக்கு வெளிப்படுத்த வில்லை.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் இருவர் லண்டனுக்கு செல்ல உள்ளனர் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் யார் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த லண்டன் பயணத்தின் ஏனைய ஏனைய சந்திப்புக்கள் கூட்டங்களை லண்டனில் உள்ள மாற்றத்திற்கான குரல், மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகிய விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களே ஏற்பாடு செய்வதால் இந்த பயண விபரங்களையும் தன்னுடன் யார் வருகிறார்கள் என்ற விபரங்களையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கலாம் என வடமாகாணசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் லண்டன் செல்லும் குழுவில் விக்னேஸ்வரனுக்கு நெருக்கமாக செயல்படும் இரு உறுப்பினர்களே செல்ல உள்ளனர் என்றும் நம்பபடுகிறது.

இந்தப் பயணத்தின்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு கிங்ஸ்டன் வைத்தியசாலைக்கும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்கும் நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.

அங்குள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழுவுடனும் பேச்சு நடத்த உள்ளனர். இதற்காக எதிர்வரும் 16ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு கொழும்பிலிருந்து லண்டன் புறப்பட உள்ளது.

வெளிநாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் அதிகாரம் மாகாணசபைகளுக்கோ அல்லது மாநகரசபைகளுக்கோ இல்லை என்றாலும் மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற்று மாகாணசபைகள் அல்லது மாநகரசபைகள் வெளிநாடுகளில் உள்ள சபைகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியும். நிதி சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் கூட மத்திய அரசாங்கத்தின் அனுமதியை பெற்றே இத்தகைய ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியும்.

இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம்தான், இதில் நிதி கொடுக்கல் வாங்கல்கள் எவையும் நடக்கவில்லை என்பதால் இந்த அனுமதியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்ரவன் நேரடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்பு கொண்டு பெற்றிருக்க கூடும் என்றும் வடமாகாணசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் கிங்ஸ்டன் நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி செய்து கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிங்ஸ்டன் நகரசபை பிரமாண்டமான அளவில் செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதன்மை உரையை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் கிங்ஸ்ரன் நகரசபை செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் யாழ். மாநகரசபைக்கோ அல்லது வடமாகாணசபைக்கோ நிதி உதவிகள் கிடைக்காவிட்டாலும் பயிற்சிகள் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் இரு சபைகளும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற விடயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும் என கிங்ஸ்டன் நகரசபையின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

கிங்ஸ்டன் நகரத்தில் கடந்த 20வருடகாலத்தில் பெருமளவிலான இலங்கை தமிழர்கள் குடியேறியுள்ளனர். அங்கு சுமார் 12ஆயிரம் தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

வடமாகாணசபையை வழிநடத்துபவர் என்ற வகையில் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை இன்னொரு நாட்டின் நகரசபையுடன் செய்து கொள்கின்ற போது அதனை வடமாகாணசபைக்கு அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கிங்ஸ்டன் நகரசபை தனது சபையில் இதனை சமர்ப்பித்து விவாதத்திற்கு விட்டு அனுமதியை பெற்ற பின்னரே நகரசபை முதல்வர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளார். அதேபோன்று வடமாகாணசபையில் இந்த ஒப்பந்தத்தை சமர்ப்பித்து விவாதத்திற்கு விட்டு சபையின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த விடயங்களை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் இரகசியமாக வைத்திருந்தார் என்ற கேள்வி எழுகிறது. இந்த விடயம் விரைவில் வடமாகாணசபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் லண்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் கிங்ஸ்டன் நகரசபையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக இருந்தாலும் இந்த பயணத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புகளும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்களும் முனைந்துள்ளன.

வட மாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் லண்டனில் விடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக லண்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழினத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தக் கூடிய பெருந்தலைவராக தற்போது விக்னேஸ்வரன் உள்ளதால் அவருடன் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆராய உள்ளதாகவும் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

அவருக்கான கௌரவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தாயகத்தில் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகவும் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார் என்றும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளுடனான சந்திப்பு முடிந்த பின்னர் மாண்புமிகு விக்னேஸ்வரன் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.

தமிழீழ தேசிய கொடி ஏற்றல் மற்றும் மாவீரர்களுக்கான அகவணக்கம் என்பனவற்றுடன் கூட்டம் ஆரம்பமாகும். தமிழீழ தேசியக்கொடியை முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைப்பார்கள்.

வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவித்த போது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. சிறிலங்கா அரசுக்கு ஆதரவான ஒருவரை அதுவும் கொழும்பை தளமாக கொண்ட ஒருவரை சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளார் என்று கடும் விமர்சனங்களை வெளியிட்டன. பின்னர் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக மகிந்த ராசபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த போதும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இதன் பின்னர் விக்னேஸ்வரன் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்காது ஒதுங்கியிருந்ததை அடுத்தும், அதன் பின்னர் தன்னை தீவிர தமிழ் தேசிய வாதியாக விக்னேஸ்வரன் காட்டிக்கொள்ள ஆரம்பித்ததை தொடர்ந்தும் விக்னேஸ்வரன் மீதான ஆதரவு புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களிடம் வளரத்தொடங்கியது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ வெற்றிடத்தை விக்னேஸ்வரன் நிரப்புவார் என்ற நம்பிக்கையே இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற அங்கீகாரத்தை பெற்றிருப்பது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களுக்கு பெரும் நெருடலை கொடுத்து வருகிறது. சர்வதேச நாடுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமிழர்களின் அரசியல் தலைமை என்ற அங்கீகாரத்தை கொடுத்து அவர்களுடன் உறவுகளை பேணி வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற நிலையை தகர்த்தெறிவதற்கு கிடைத்திருக்கும் ஆயுதமாகவே புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் விக்னேஸ்வரனை பாவிக்க தொடங்கியுள்ளன.

வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் அமெரிக்காவிற்கும் லண்டனுக்கும் விஜயம் செய்தார். இந்த பயணத்தின் பின்னரே தமிழரசுக்கட்சியுடனுக்கு முரண்பாடுகள் வளர ஆரம்பித்தது.

விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக்கட்சி தலைமைக்கும் இடையில் முரண்பாடுகள் முற்றிய நிலையில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டது. இன்று தமிழரசுக்கட்சிக்கும் பெரும் சவாலாக திகழ்பவர் விக்னேஸ்வரனாகும்.

இந்த முரண்பாட்டை புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்கள் தங்களுக்கு சாதாகமாக பயன்படுத்திக்கொள்வர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த காலத்திலும் தமிழீழ கோரிக்கையை ஆதாரிக்காத ஏற்றுக்கொள்ளாத விக்னேஸ்வரனை எந்த காலத்திலும் தமிழீழ கோரிக்கையை கைவிட தயாரில்லாத புலம்பெயர் தமிழர் சமூகம் தலைவராக ஏற்றுக்கொள்ள முற்படுவதுதான் முரண்நகையாகும்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் விரும்பியோ விரும்பாமலோ தான் ஏற்றுக்கொள்ளாத தமிழீழ கொள்கையை கைவிட தயார் இல்லாத புலம்பெயர் தமிழர் சமூகத்தின் மதிப்பையும் ஆதரவையும் பெற வேண்டிய நிலையில் உள்ளார்.

புலிவாலை பிடித்திருக்கும் விக்னேஸ்வரனால் இனி அதனை விடவும் முடியாது. விட்டால் ஏற்படப்போகும் ஆபத்தை விக்னேஸ்வரன் உணராதவரும் அல்ல.  –

இரா.துரைரத்தினம்

SHARE