வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் அல்லது வேறு ஒருவரின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்குமானால் நாம் ஆதரிக்கவும் – இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பிரேரணை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்ப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான தீர்மானத்தை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். இதற்காக முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். தமிழரின் அரசியலை முடக்க நினைக்கும் ஒரு சபையிலே, பெயருக்கு ஒரு தீர்வுத் திட்டம் என்ற நிலையில் இருந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எங்கள் தேசிய அரசிலை ஒற்றையாட்சி முறைக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி. நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இதனை முதலமைச்சர் எவரின் அழுத்தங்களும் இன்றி எடுத்திருக்கிறார் என்பதை அவரின் உரை மூலம் உணர முடிந்தது.
எனினும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் ஒரு சந்தேகமும் உள்ளது. இன்னமும் நான்கு மாத காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந் நிலையில் இத்தகைய இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை அரசியல் நாடகம் இல்லையென நிரூபிக்க வேண்டும். அதுவும் எம்மைப் போன்று அவர்களுடன் கூடவே இருந்து அனுபவப்பட்டவர்களுக்கு கூறுவதாக இருந்தால் கூட்டமைப்பில் இருந்து சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் நீக்கப்பட வேண்டும்.
இதேபோல அவாகளின் கருத்துக்களுக்குத் தாளம் போடுபவர்களும் கூட கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவது அவசியமாகும். இந்த அப்படையில் நேர்மையாக செயற்படுகிறார்களா என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது. இதனை புறம் தள்ளி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அல்லது வேறு ஒரு தலைமையின் கீழ் ஒரு செயற்பாடு இடம்பெறுமாக இருந்தால் நாமும் ஆதரப்போம் – இணைந்து செயற்படுவோம்.-
கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் –
*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன்.
*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.
*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.
*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.
*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.
*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.
*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.
*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.
*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.
*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.
*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.
*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.