முன்னாள்அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ரிச்சி பெனாட் காலமானார்!

358
முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் காலமானார்.84 வயதாகும் பெனாட் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவுற்று இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பெனாட், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 28 டெஸ்ட் போட்டிக்கு தலைமையேற்றுள்ளார் பெனாட். இவரது தலைமையில் அவுஸ்திரேலிய அணி எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1950-70களில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த பெனாட், டெஸ்ட் போட்டியில் 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கடந்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர். அவரது துடுப்பாட்டம், லெக் ஸ்பின் பவுலிங்யெல்லாம் மிகவும் நேர்த்தியானது.

அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் இங்கிலாந்தில் உள்ள பி.பி.சி. தொலைக்காட்சியில் வர்ணனையாளரானார். அதன்பின் அவரது சொந்த நாடான அவுஸ்திரேலியாவில் வர்ணனையாளரானார். அவரது ‘நோ நான்சென்ஸ்’ வர்ணனைக்கு பல ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.

அவர் வர்ணனை செய்யும் பாணியில் மயங்கிய பல கிரிக்கெட் ரசிகர்கள், தாங்கள் கிரிக்கெட் ஆடும் நாட்களில் ஆட்டத்தை அவர் வர்ணனை செய்யும் பாணியிலேயே கமெண்ட் அடித்து விளையாடிய காலமும் உண்டு.

பெனாட் மறைவுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இரங்கல் தெரிவித்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

SHARE