முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை தொடர்பில் மீண்டும் சந்தேகம்!

369
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை விடயத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாது என அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் ஜெயராஜ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொருளாளர். சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமான விசாரணையில் அரசாங்கத்தின் தலையீடுகள் போதுமானதாக இருக்கவில்லை என மன வருத்தம் இருந்தது.

அமைச்சர் ஜெயராஜிக்கு நியாயம் கி்டைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். அரசியல் சேறுபூசப்படாமல், கொலை குறித்து சரியான விசாரணை நடைபெறும் என நாங்க எண்ணுகிறோம் என்றார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர் பிரதமர் பதவி தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததுடன் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலர் கருதினர்.

இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆ ம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற புது வருட விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜெயராஜ் மரதன் ஓட்டப் போட்டியை ஆரம்பித்த போது நடந்த குண்டு வெடிப்பில் பலியானார்.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே விடுதலைப் புலிகளின் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் அதிகார போட்டியால் இந்த கொலை நடந்ததற்கான சாட்சியங்கள் இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

SHARE