முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை

258

 

முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

NJG74779jis

முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.விஜயகாந் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியுடன் எமது ஆயுத ரீதியான அரசியல் உரிமைப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

தமிழ் மக்களுக்காக போராளிகளாகப் போராடியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களையும், சரணடைந்தவர்களையும் புனர்வாழ்வளித்து காலத்துக்கேற்ற வகையில் இலங்கை அரசு விடுதலை செய்து வருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் துறைப் பொறுப்பாளர் தமிழினி உள்ளிட்ட 101 போராளிகள் மர்மமான முறையில் உயிரிழந்தார்கள் என்பது தமிழ் மக்களாகிய எங்களுக்கு கவலையையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணசபை இன்று நிறைவேற்றியிருக்கும் பிரேரணையை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம்.

ஆனால், கடந்த காலங்களில் வட மாகாண சபை பல்வேறுபட்ட பிரேரணைகளை நிறைவேற்றிய போதும் பல பிரேரணைகள் செயல் வடிவத்திற்கு இன்று வரை வராமல் கிடப்பிலேயே இருக்கின்றது.

அதேபோன்று இப்பிரேரணையும் அரசியலுக்காகவும், ஊடகங்களுக்காகவும் மட்டும் நிறைவேற்றி விட்டோம் என நின்று விடக்கூடாது.

மாறாக போராளிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும், பொறுப்பும், கடமையும் அனைவருக்குமிருக்கின்றது என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும்.

உடனடியாகப் புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைத்துப் போராளிகளையும் வெளிநாடுகளின் உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உடல் ஆய்வுப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

எனவே இவற்றிற்காக நாம் எமக்குள்ளே எதிர்ப்பு அரசியல் செய்யாமல் ஒத்த கருத்துடனும், ஒற்றுமையுடனும் செயற்படுவதன் மூலம் எஞ்சியிருக்கும் எமது போராளிகளைக் காப்பாற்றி அவர்களுக்கு, நிம்மதியான வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE