முன்னுக்கு பின் முரண்பட்ட பிரபாகரனின் மரணம் – அடுத்த புத்தகம் அவர் மரணிக்கவில்லை என்பதா?

259

 

விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளார்கள்” இந்த வார்த்தைகளேதற்போது அதிக அளவாக பேசப்பட்டு வருகின்றது. மஹிந்த மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகின்றன.

விடுதலைப்புலிகள் தொடர்பில் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு மத்தியில், புலிகளை முழுதாக நான் அழிக்கவில்லை என்று மஹிந்த தற்போது கூறிவரும் அதே சமயம் விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு காரணிகளாக கடந்தகால ஆட்சியாளர்கள் அனைவருக்கும் விகிதாசார அடிப்படையில் வெற்றிகளும் பிரித்து கொடுக்கப்படுகின்றன.

இந்த நிலையிலே விடுதலைப்புலிகள் முற்று முழுதாக அழிக்கப்பட வில்லை அவர்கள் மறைந்து வாழ்கின்றார்கள் என்ற கருத்து ஒரு பக்கம் வலுப்பெற்று கொண்டிருக்கும் இத்தகைய சரியான தருணத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளதோடு புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில்,

2009 மே 19ஆம் திகதி சண்டையில் தான், பிரபாகரன் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவினால் கொல்லப்பட்டார். நந்திக்கடலில், 2009 மே 19ஆம் திகதி பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முதல் நாள், பொட்டம்மான் கொல்லப்பட்டார். இதனை நான் நிச்சயமாக கூறுகிறேன்.

அவர்போன்ற ஒருவர் உயிர் தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்தால் நிச்சயம் வெளியே வந்திருப்பார். இவை அவர் செவ்வியில் கூறப்பட்டவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே கொல்லப்பட்டது நிச்சயம் என்றவர் தப்பியிருந்தால்? என்று மீண்டும் ஒரு தொக்கி நிற்கும் சந்தேகத்தை வெளிப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது நியாமமே.

அதே சமயம் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி, கெமுனுவோச் படைப்பிரிவுடனான சண்டையில், 2009 மே 18ஆம் நாள் கொல்லப்பட்டார். ஆனால், பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் என்ன ஆனார் என்பது எனக்குத் தெரியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை மேஜர் ஜெனரல் தெரிவித்த கருத்துகள், ஆனால் இறுதி யுத்த கால கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா, “இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்படவில்லை அவர் தப்பிச் சென்று விட்டார்.

புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என்பதை அறிந்திருந்தும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்த வெற்றியை உத்தியோக பூர்வமாக அறிவித்து விட்டார்” இவை சரத் பொன்சேகா பாராளுமன்றத்திலேயே கூறிய கருத்துகள்.

யுத்த கால இராணுவ தளபதி விடுதலை புலிகளின் தலைவர் கொல்லப்பட வில்லை என்றார் மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டார் என்கின்றார். ஏன் இவ்வாறான முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.

இதேவேளை போர்காலங்களில் பயங்கர தீவிரவாதிகளாக வர்ணிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தற்போது புகழப்படுகின்றார்கள். இராணுவத்தினர் மற்றும் அப்போதைய இப்போதைய தலைவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் தொடர்பில் நற்கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர் இன வாதிகளைத் தவிர.

அதே சமயம் சரத்பொன்சேகாவும் புத்தகம் ஒன்றினை வெளியிடவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. அவரும் வெளிப்படையாக விடுதலைபுலிகளின் இயக்கத்தைபுகழ்ந்தவரே.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என என புத்தகம் வெளியிட்டார், சரத் பொன்சேகா அவர் சாகவில்லை என்று வெளியிடப்போகின்றாரா? கடந்த காலத்தில் அவர் வெளியிட்ட கருத்துகளை வைத்து பார்க்கும் போது இவ்வாறான கருத்தினையே அவர் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இவற்றை தொகுத்து நோக்கும் போது தனிப்பட்டவர்கள் தனது நற்பெயர்களுக்காகவும் அரசியல் தலையீடுகள் அல்லது இலாபங்களுக்காக விடுதலைப் புலிகளின் பெயர்கள் உள்வாங்கப்படுகின்றது என்ற கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

அல்லது முக்கியமான குற்றங்களில் இருந்து தனிப்பட்டவர்களை காப்பாற்றிக் கொள்ளவும் மக்களை திசைதிருப்பவும் வெளிப்படுத்தப்படுத்தப்படும் திசை திருப்பும் நாடகக் கருவிகளாகவும் இவற்றை பார்ப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் முக்கிய தகவல்கள் அடுத்த தேர்லுக்கு முன்னர் வெளிவரும் என்றும் கூறப்படுகின்றது.

SHARE