1,50,000 க்கு மேற்பட்ட பௌத்த, இந்து மக்கள் மதமாற்றம்: முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள்மீது பொதுபலசேனா பாய்ச்சல்:-
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆயர்களுக்கும் எதிராகவே எமது எதிர்ப்பு: பொதுபல சேனா:-
அப்பாவி இந்துக்களை மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். அப்பாவி பௌத்த மற்றும் இந்துக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டினையும் நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்தது.
பௌத்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அடிபணிய நாம் தயாராக இல்லை. ஒரு சொட்டு இரத்தம் உடலில் இருக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் அவ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது பௌத்த சிங்கள மற்றும் இந்து மதத்தவர்களுக்கே அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லிம் மதத்தீவிரவாதிகள் தற்போது இலங்கையிலும் பாரிய அளவில் செயற்பட்டு வருகின்றனர்.
அது மாத்திரமின்றி கிறிஸ்தவ இனவாத அமைப்புகளும் நாட்டில் பாரிய அளவில் மதமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை தற்போதைய நிலைமையில் கொழும்பில் மாத்திரம் 1 இலட்சத்திற்கும் அதிகமான இந்துக்களும், பௌத்தர்களும் கட்டாயத்தின் பெயரில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் உள்ள தமிழ், சிங்கள மக்களை மத மாற்றும் செயற்பாடுகளை முஸ்லிம் மதத் தீவிரவாத அமைப்புகள் செய்து வருகின்றன. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் செல்லும் பௌத்த, தமிழ் இன மக்களில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் தீவிரவாதிகளால் மத மாற்றப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் போராடவே எந்தவொரு அமைச்சர்களும் முன் வருவதில்லை.
நாம் மட்டுமே இன்று மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாம் மற்ற மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கின்றோம். ஆனால், சில மதத் தீவிரவாத அமைப்புகளும், அவற்றை ஊக்குவித்து பிரிவினையினை வளர்க்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆயர்களுக்கும் எதிராகவே எமது எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத விவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளமை நல்ல விடயமே. ஆனால், இது நிரந்தரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு இது தொடர்ச்சியாக செயற்படுமாயின் நாட்டில் ஏற்பட்டுள்ள மத மாற்று நடவடிக்கைகளும் குழப்பங்களும் தீர்க்கப்பட்டுவிடும்.
அத்தோடு பௌத்த, இந்து சமயத்தவர்களது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் உள்ள இளம் பெண்களை கட்டாயப்படுத்தியும், பிரசாரங்கள் மூலமும் பொய்யான கட்டுக்கதைகளையும் கூறியும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு வலியுறுத்தியுள்ளன.
இவை சட்டவிரோதமான செயல் என்பது ஏன் முஸ்லிம் அமைச்சர்களுக்கு தெரியவில்லை. முஸ்லிம்கள் இனவாத செயற்பாடுகளை செய்வதும் சட்டவிரோத குடியேற்றங்களையும், பள்ளிவாசல்களையும் அமைப்பது எவருக்கும் குற்றமாகத் தெரியாது. ஆனால், இதையே பௌத்த தேரர்கள் செய்தால் அதை தேசத்துரோகமான செயல் எனவும் அடக்குமுறைச் செயற்பாடெனவும் சர்வதேச அளவில் முறையிட்டு விபரிக்கின்றனர்.
இலங்கையில் முஸ்லிம், கிறிஸ்தவ இனத்திற்கு எதிராக இடம்பெறுவது மாத்திரம்தான் குற்றமா? தமிழ், சிங்கள மக்களுக்கு எதிராக இடம்பெறுவது தவறில்லையா?இலங்கை பௌத்த நாடு. இங்கு பௌத்தர்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. 9 வீதமாக உள்ள நிலையிலேயே முஸ்லிம்கள் இவ்வளவு சட்டவிரோத செயற்பாடுகளை நாட்டில் செய்கின்றனர் என்றார்.
20வீதமாகவோ அல்லது அதை விட அதிகளவில் அதிகரிக்கப்படும் போதோ நாட்டின் நிலை என்னவாக அமையும். எனவே எமது இறுதி இரத்தத் துளி உடலில் இருக்கும் வரையில் முஸ்லிம், கிறிஸ்தவ இனவாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
1,50,000 க்கு மேற்பட்ட பௌத்த, இந்து மக்கள் மதமாற்றம்: முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள்மீது பொதுபலசேனா பாய்ச்சல்
மத அலுவல்கள் தொடர்பிலான புதிய பொலிஸ் பிரிவொன்றினை அமைத்தமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். ஆனால் அப்பொலிஸ் பிரிவை நீண்டகாலத்துக்கு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு மதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சட்டமூலத்தினை நிறைவேற்றினால் மத அலுவல்கள் தொடர்பான பொலிஸ் பிரிவிற்கு தேவை ஏற்படாது எனவும் தெரிவித்தது.
கிருலப்பனை போதி பௌத்த நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிட்டபோதே பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;
இலங்கையில் பௌத்த மற்றும் இந்து மதத்தவர்களை மதம் மாற்றுவதற்கான தீவிரமான செயற்பாடுகள் சில முஸ்லிம் மாற்று கிறிஸ்தவ அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். அப்பாவி மக்களை ஆசை காட்டி மதம் மாற்றும் நடவடிக்கைகள் கிராமப் புறங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பிலுள்ள இந்து மற்றும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களில் 1 ,50,000 திக்கும் அதிகமானோர் இதுவரை மதம் மாற்றப்பட்டுள்ளதுடன் , மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வரும் பௌத்த மற்றும் இந்து மக்களில் 80 , 000 க்கும் அதிகமானோர் முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நாட்டில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமவுரிமை உண்டு. ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களின் போர்வையில் இலங்கைக்குள் நுழையும் சர்வதேச மதவாத அமைப்புகள் இலங்கையில் மதப்பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கின்றன.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதமாற்ற நடவடிக்கையை இலங்கையில் ஊக்குவித்து வருகின்றன. அதேவேளை பௌத்த மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதத்தினைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை இதே நாடுகள் முன்னெடுத்து வருகின்றன.
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் உட்பட முஸ்லிம் சமூகத்துக்கு பௌத்த சாசனத்தைப் பற்றி பேசவோ , விமர்சிக்கவோ எந்தத் தகுதியும் கிடையாது. அத்துடன் , புதிதாக அமைக்கப்பட்ட மத அலுவல்கள் தொடர்பிலான பொலிஸ் பிரிவு பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் குறைக்கும் என்பதால் நாம் இதனை வரவேற்கின்றோம். ஆனால் இப்பொலிஸ் பிரிவு நீண்டகாலம் செயற்பட வேண்டிய அவசியமில்லை. 3 அல்லது 4 வருடங்கள் நடைமுறையில் இருந்தால் போதுமானதாகும்.
நீண்டகாலத்துக்கு இப்பொலிஸ் பிரிவினை செயற்படுத்தினால் அது மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மத ரீதியான பொலிஸ் திணைக்களத்துக்கு பாதை வகுக்கும். அதேவேளை மத ரீதியான பொலிஸ் பிரிவு அவசியமல்ல என்று கூறுவதற்கு ரவூப் ஹக்கீமிற்கு எந்த அருகதையும் கிடையாது என்றார்.