முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூக இன விழிப்புணர்வுகள் தமிழர்களிடம் அறவே கிடையாது- இரா.துரைரத்தினம்

292

 

இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளும் அந்த அரசுகளை வழிநடத்தி வரும் பௌத்த மகாசங்கங்களும் தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறைகளும் பாரபட்டங்களினால் தமிழர் சமூகம் கடந்த 60வருட காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் சமூகம் அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டங்களை நடத்தினர்.

ms-sam-ran-656556

images-1

வடக்கு கிழக்கில் தங்களின் பூர்வீக நிலங்களை காப்பாற்றி தக்க வைத்து கொள்வதற்காக போராடி வந்தனர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடிய தமிழ் மக்கள் இன்று தங்கள் நிலங்களையும் வளங்களையும் காப்பாற்றி கொள்வதற்காக தன்னுடைய சகோதர இனமாக கருதி வாழ்ந்த முஸ்லீம் இனத்துடனும் மோத வேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் மிக சாதுரியமாக தமிழர்களை தள்ளியுள்ளது

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கு இணைப்பும் அவசியமாகும். ஆனால் இப்போது சிங்கள தரப்பை விட வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து நிற்பவர்கள் முஸ்லீம் தரப்பு தான்.

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு கிழக்கில் உள்ள சிங்கள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சம்மதித்தால் இணைப்பு சாத்தியமாகும். இதனை நன்கு உணர்ந்து கொண்ட சிங்கள பேரினவாத தரப்பு சிங்கள தரப்பு மக்களை அமைதி காக்க வைத்து இணைப்புக்கு எதிராக முஸ்லீம் தரப்பை தூண்டி விட்டுள்ளது

இலங்கையின் மாகாண எல்லைகளை மறுசீரமைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இது இன்னும் 14ஆண்டுகளில் 2030ஆம் ஆண்டளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பு திட்டம் சனத்தொகை, இனப்பரம்பல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் வகையில் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் எல்லை மறுசீரமைப்பை வகுத்து வருகிறார்கள்.
இந்த எல்லை மறு சீரமைப்பு நிறைவடையும் போது தமிழர் தாயகம் என கூறப்படும் வடக்கு கிழக்கு தமிழர்களின் கைளில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடைகிடைக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் 1990ல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் சுமார் 30க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழர்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா குடியேற்றத்திடடத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. 1956 யூலை மாதம் 5ஆம் திகதி இங்கினியாகல என்ற இடத்தில் கல்லோயா ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபைக்கு சொந்தமான கரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 தமிழ் தொழிலாளர்கள் மீது குடியேற்றப்பட்ட சிங்கள தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் முதன் முதலில் பெருந்தொகையான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இச்சம்பவத்தை அடுத்து அக்கிராமத்திலிருந்த தமிழ் மக்கள் அனைவரும் வெளியேறினர்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழர்கள் மீது சிங்களவர்களும் முஸ்லீம்களும் தாக்குதல் நடத்தி வந்தனர். இதன் உச்சக்கட்டமாக 1990ஆம் ஆண்டு தாக்குதல்கள் இடம்பெற்றன. மீனோடைக்கட்டு , சம்மாந்துறை தமிழ் குறிச்சி, பாலமுனை, ஒலுவில், அட்டப்பள்ளம், திராய்கேணி உடும்பன்குளம், என உட்பட 30க்கும் மேற்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

மீனோடைக்கட்டு தமிழ் வித்தியாலயத்தின் பெயர் தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னர் 1995ஆம் ஆண்டளவிலேயே மாற்றப்பட்டுள்ளதுத . அம்பாறை மாவட்டத்தில் 1971ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 22.85வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 18.30வீதமாக குறைந்துள்ளனர். 30வீதமாக இருந்த சிங்களவர்கள் 37.40வீதமாக உயர்ந்துள்ளனர்.
அதேபோல திருகோணமலை மாவட்டத்தில் 1971ஆம் ஆண்டு 38வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 33வீதமாக குறைந்துள்ளனர். 1971ஆம் ஆண்டு 32வீதமாக இருந்த முஸ்லீம்கள் தற்போது 41.52வீதமாக உயர்ந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, காரைதீவு, ஆலையடிவேம்பு, திருக்கோவில், கல்முனை தமிழ்பிரிவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் தற்போது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களாக உள்ளன. ஏனைய முஸ்லீம், சிங்கள கிராமங்களின் அபிவிருத்தியும் தமிழ் கிராமங்களின் அபிவிருத்தியும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசமாகும்.

மீள்குடியேற்றம் பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் அம்பாறையில் சில கிராமங்களில் தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். அக்கிராமங்களில் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள், வன்முறைகளால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என யாராவது பேசினால் அங்கு தமிழர்கள் வாழ்ந்தார்களா என கேட்கும் அளவிற்கு நிலமை மாறியிருக்கிறது.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் மீனோடைக்கட்டு கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள், அவர்களின் வீடுகள், ஆலயங்கள் அழிக்கப்பட்டன என்ற விபரத்தை மட்டக்களப்பை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறிய போது மீனோடைக்கட்டு தமிழ் கிராமமா என கேட்டவர்களும் உண்டு.

1990ஆம் ஆண்டின் பின் கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட போது அக்கிராமங்களில் தமிழ் மக்கள் மீண்டும் வந்து குடியேறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அக்கிராமங்களில் வேறு இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர். அதற்கு உதாரணமாக மீனோடைக்கட்டு, சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஆகியவற்றை சொல்லலாம்.

1990ஆம் ஆண்டு தொடக்கம் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு பதவி முஸ்லீம் காங்கிரஷ் கட்சி உட்பட முஸ்லீம் அமைச்சர்களின் கைகளிலேயே இருந்து வந்துள்ளது. யுத்தம் நடைபெறுகிறது என காரணம் காட்டி அபிவிருத்திகள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சிங்கள கிராமங்களிலேயே நடைபெற்றன.

தற்போதைய புதிய அரசாங்கத்தில் மட்டுமே தேசிய பட்டியல் ஊடாக வந்த கொழும்பை சேர்ந்த தமிழர் ஒருவர் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேவேளை பிரதியமைச்சராக மட்டக்களப்பை சேர்ந்த ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் இன விழிப்புணர்வுகள் தமிழர்களிடம் அறவே கிடையாது.

உரிமையை பெறும் வரை அபிவிருத்தியில் அக்கறை காட்டத்தேவையில்லை என்ற கொள்கையில் தமிழ் அரசியல் தரப்பு செயல்படுகிறது. தமிழர் தரப்பின் இந்த போக்கு தமிழ் மக்களுக்கு எவ்வளவு பின்னடைவை கொடுக்கும் என்பதை முஸ்லீம் சமூகத்தை பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.

புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு உட்பட பலம் வாய்ந்த அமைச்சுக்களை தம்வசம் வைத்திருப்பதன் மூலம் றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்றவர்கள் தமது அமைச்சு ஊடாகவும் பொதுவாக மாவட்டத்திற்கு கிடைக்கும் நிதிகளையும் தமது அரசியல் பலத்தை வைத்தும் தமது பிரதேசங்களுக்கே திரும்பி விடுகின்றனர். அதற்கு அப்பால் அரபு நாடுகளின் உதவிகளை நேரடியாக பெற்று வடக்கு கிழக்கில் முஸ்லீம் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

மட்டக்களப்பு எல்லைப்பகுதியில் அரபு நாடு ஒன்றின் உதவியுடன் பற்றிக்கலோ கம்பஸ் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைச்சர் ஹிஸ்புல்லா அமைத்து வருகிறார். இது முஸ்லீம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார வேலைவாய்ப்புக்களில் பாரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வல்லது.

இவ்வாறான ஆற்றலோ செயல்திறனோ அற்ற நிலையில் வெறும் பாராளுமன்ற ஆசனத்திற்கான அரசியலிலேயே தமிழர் தரப்பு உள்ளது.

தமிழர்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வுகள் உரிமைகள் அனைத்தும் முஸ்லீம் மக்களுக்கும் கிடைத்தே தீரும். ஆனால் தமிழர்கள் உரிமைதான் வேண்டும், அபிவிருத்தி பற்றி இப்போது பேச முடியாது என செயல்படுவதால் பொருளாதார, கல்வி, அபிவிருத்திகளில் தமிழ் பிரதேசங்கள் மிகவும் பின்னங்கிய நிலையிலேயே உள்ளன. இந்நிலை தொடருமானால் இன்னும் இரண்டு மூன்று தமிழர்களின் தலைமுறைகள் உரிமையும் இன்றி அபிவிருத்தியும் இன்றி அழிந்து போகும் கட்டத்திலேயே உள்ளனர்.

முஸ்லீம் மக்கள் தமது இன அடையாளத்துடன் அரசியலை செய்து ஆட்சியிலும் பங்குபற்றுகிறார்கள். தமது உரிமைகளை பெறுவதற்காக உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
அரசியல் ஆட்சி அதிகாரப்பலங்களை வைத்து கொண்டு அபிவிருத்திகளையும் குடியேற்றங்களையும் செய்து வருகின்றனர்.

கிழக்கில் அனைத்து மாவட்டங்களின் அதிகாரங்களும் முஸ்லீம் அரசியல் வாதிகளின் கைகளில் தான் உள்ளது. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறு வீதம் தமிழர்கள் வாழும் பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்றவர்கள் தான் உள்ளனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 70வீதம் தமிழர்களும் 23வீதம் முஸ்லீம்களும் வாழ்கின்றனர். அம்மாவட்டத்தின் முழு நிர்வாகமும் அரசியல் அதிகாரம் கொண்ட ஹிஸ்புல்லா, அமிர்அலி ஆகியோரின் கைகளில் தான் உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர்களாகவும் அவர்களே உள்ளனர். இன்று அம்மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உட்பட பெரும்பாலான திணைக்களங்களின் தலைவர்களாக முஸ்லீம்களே உள்ளனர்.
இது ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்றவர்களின் தவறல்ல, தவறு தமிழ் அரசியல் தலைவர்களின் பக்கமே இருக்கிறது.

அபிவிருத்தி, சொத்து, மூலதனதிரட்சி, சனத்தொகை அதிகரிப்பு, முஸ்லீம் கிராமங்களை விரிவாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் அவர்களின் செயல்பாடுகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாத அளவிற்கு தமிழர்கள் உள்ளனர்.

முஸ்லீம் கிராமங்களுக்கு அயலில் உள்ள தமிழ் கிராமங்களின் காணிகள் சொத்துக்களை வாங்குதல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள காணிகள் வர்த்தக நிலையங்களை கூடுதல் விலை கொடுத்து வாங்குதல் போன்ற நடவடிக்கைகளிலும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் கூர்மையுடன் செயல்பட்டு வருகிறது.

அரபு நாடுகளின் நிதி உதவியுடன் சில நிறுவனங்களை உருவாக்கி காணிகள் வர்த்தக நிலையங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 72வீதமானவர்கள் உள்ளனர் என பெருமையாக கூறினாலும் மட்டக்களப்பின் வர்த்தக வாணிபம் அனைத்தும் முஸ்லீம்களிடமே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நகரங்களாக மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி நகரம், ஏறாவூர் நகரம் ஓட்டமாவடி நகரம், வாழைச்சேனை நகரம் காணப்படுகிறது. இவை அனைத்தும் முஸ்லீம்களின் கைகளிலேயே உள்ளன.

முன்னர் மட்டக்களப்பு நகரத்தில் கணிசமான தமிழர்களின் வர்த்தகம் காணப்பட்டது. விடுதலைப்புலிகள் உட்பட தமிழ் ஆயுதக்குழுக்கள் கப்பம் உட்பட பல்வேறு தொல்லை கொடுத்ததால் தமிழர்கள் தமது கடைகளை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

2004ஆம் ஆண்டு கருணா குழு மட்டக்களப்பிலிருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் வர்த்தகர்களை அவர்களின் சொத்துக்களை பறித்து விட்டு வெளியேற்றினார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முஸ்லீம் வர்த்தகர்கள் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் வாங்கினார்கள். இன்று மட்டக்களப்பு நகரத்தின் வர்த்தகம் முழுமையாக முஸ்லீம் வர்த்தகர்களிடமே உள்ளது.

மட்டக்களப்பு நகரின் வர்த்தகம் தமிழர்களிடம் இருந்து கைமாறியதற்கு பிரதான காரணம் தமிழ் ஆயுதக்குழுக்களே ஆகும்.

1960ஆம் ஆண்டுக்கு முன்னர் வெருகல் தொடக்கம் பாணமை வரை மட்டக்களப்பு மாவட்டமாகவே இருந்தது. மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை வர்த்தக நிலையங்களும் காணிகளும் தர்மரத்தினம் வன்னியனார் என்ற முன்னாள் செனட்சபை உறுப்பினரின் கைகளிலேயே இருந்தது. இன்று ஒலுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஆகியன தர்மரத்தினம் வன்னியனார் பரம்பரையினரின் காணியை சுவீகரித்தே கட்டப்பட்டது.
ஆனால் இன்றும் தமிழர் தரப்பு கப்பல் ஓட்டிய தமிழன் என்றும் ஆண்டபரம்பரை என்றும் பெருமை பேசிக்கொண்டு இருந்த நிலங்களையும் பொருளாதார வளங்களையும் இழந்து வருகிறது.
1970ல் அமைச்சர் பதியுதீன் கல்வி அமைச்சராக பதவி ஏற்றபின் முஸ்லீம் சமூகத்தை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகள் அஷ்ரப், ஹக்கீம், ஹிஸ்புல்லா, அமிர்அலி, றிசாத் பதியுதீன் என நீட்சி பெற்று வருகிறது.
முஸ்லீம் தலைவர்கள் அரசிலும் இணைந்து கொண்டு அபிவிருத்தியையும் செய்கிறார்கள். அரபு நாடுகளின் உதவிகளையும் பெறுகிறார்கள், அதேசமகாலத்தில் தமது உரிமையை பெறுவதற்காகவும் பேசுகிறார்கள்.
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தின் பலனாகவே மாகாணசபை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த மாகாணசபையினால் பலன் பெற்றவர்கள் சிங்களவர்களும் முஸ்லீம்களுமே ஆகும். கிடைப்பதை கூட சரியாக பயன்படுத்த தெரியாமல் கூத்தாடி போட்டு உடைக்கும் நிலையில் தான் தமிழ் அரசியல் தலைமைகள் உள்ளன.
தமிழ் அரசியல் தலைமைகளால் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை தான் செய்ய முடியாவிட்டாலும் தமிழ்நாட்டிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருள்களையோ அல்லது குடா நாட்டில் இடம் பெறும் குற்றச்செயல்கள், காடைத்தனங்கள், வாள் வெட்டுக் கலாசாரம் போன்றவைகளை கட்டுப்படுத்த கூட எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
வடக்கின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கடற்தொழில் தமிழக மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள முஸ்லீம் மீனவர்களின் அத்துமீறல்களாலும் சட்டவிரோத மீன்பிடியாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் காலடியில் கிடக்கும் தமிழ் அரசியல் தலைவர்களால் இந்திய அரசை கொண்டு தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க முடியாமல் இருப்பதேன்?
முஸ்லீம் அரசியல் தலைவர்கள், ஆட்சி அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டு தமது சமூகத்தின் அபிவிருத்திக்காகவும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் உழைத்து வருகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற மாகாண பதவிகளை மட்டுமே இலக்கு வைத்து தமது அரசியலை செய்து வருகின்றனர்.
இணைந்த வடகிழக்கு மாநிலத்தில் தீர்வு என பேசி வரும் தமிழ் தலைவர்களுக்கு மின்னாமல் முழங்காமல் கிழக்கு மட்டுமல்ல வடக்கும் பறிபோய் கொண்டிருக்கிறது என தெரியாதது ஏன்?
இரா.துரைரத்தினம்

SHARE