மேக்ஸ்வெல்ஸ் சரவெடியில் மீண்டும் புஸ் ஆனது இலங்கை! தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா!

249

 

இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழத்தி 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் டி20 போட்டியில் சாதனை ஓட்டங்களுடன் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடைப்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக டில்ஷான், குஷால் பெரேரா களமிறங்கினர். தனது கடைசிப் போட்டியில் ஆடிய டில்ஷான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

நிதானமாக ஆடி வந்த குஷால் பெரேரா 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

அணித்தலைவர் சந்திமால் (4), மெண்டிஸ் (5), கபுகெதரா (7), திசர பெரேரா (0) என மொத்தம் 6 வீரர்கள் ஓரிலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசிவரை பொறுமையாக ஆடிய தனன்ஜெய டி சில்வா (62) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இவரது நிதான ஆட்டத்தால் இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், பால்க்னர், ஆடம் சம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய அவுஸ்திரேலியா, 17.5 ஓவரில் 130 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், மேக்ஸ்வெல்ஸ் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இலங்கை அணி சார்பில் பத்திரண, டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என அவுஸ்திரேலிய முழுமையாக கைப்பற்றியது.

SHARE