தமிழக சஞ்சிகையில் வெளியான கட்டுரை மாற்றம் இன்றி மீள் பிரசுரம் செய்யபட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தனி இறையாண்மையுடன் சுதந்திரமான அரசு நடத்தி வந்த ஈழத் தமிழ் இனம், ஐரோப்பியரின் படையெடுப்புகளால் அதிகாரம் இழந்து, 1948 பிப்ரவரி 4 முதல், சிங்கள இனத்தின் வல்லாதிக்க அரசின் கீழ் உரிமை இழந்தது.
மானத்தோடும் கண்ணியத்தோடும், சிங்களவர்களுக்குச் சமமான உரிமைகளோடும் வாழ்வதற்காகத் தொடர்ந்து தமிழர்கள் அறப்போராட்டங்களை நடத்தியபோது, சிங்கள அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.
‘ஈழத்துக் காந்தி’ எனப் போற்றப்பட்ட தந்தை செல்வா தலைமையில் அனைத்துத் தமிழ் இயக்கங்களும் வட்டுக்கோட்டையில் ஒன்றுகூடி, 1976 மே 14 இல் சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தன. அதனையே இலக்காகக் கொண்டு உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்ததைப் போலவே இழந்த சுதந்திரத்தைப் பெற இளைய தலைமுறை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.
தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தியாகமும் வீரமும் நிறைந்த மகத்தான போர் நடத்தி தமிழ் ஈழத்தின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உன்னதமான நிர்வாகத்தைத் தந்தனர்.
இந்திய அரசின் துரோகத்தாலும், வழங்கிய ஆயுத பலத்தாலும், மகிந்த ராஜபக்சேவின் சிங்கள அரசு போரில் விடுதலைப்புலிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதோடு, இலட்சக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்தது. நடந்தது அப்பட்டமான தமிழ் இனப் படுகொலை ஆகும்.
ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய, சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழுவினரை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்ததோடு, குற்றவாளியே நீதிபதியான கதையாக ‘இலங்கை அரசே விசாரித்துக் கொள்ளும்’ என்று ராஜபக்சே அறிவித்தான்.
இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,மனித உரிமைகள் சாசனத்திற்கு எதிராக. கொலைகாரச் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
2014 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பு ஏற்ற பின்னரும். ஈழத்தமிழர் பிரச்சினையில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அநீதியான போக்கையே பின்பற்றி ஈழத்தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யத் தொடங்கி விட்டது.
வருகின்ற மார்ச் மாதம், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கின்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபர் மைத்திரி சிறிபால சேனா ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதைப் போல ஒரு பொய் முகத்தை வெளி உலகுக்குக் காட்டிக் கொண்டே நடைமுறையில் முன்னைய அரசின் இனவாத வெறிப் போக்கை அப்படியே பின்பற்றுகிறார்.
‘சிங்களப் பேரினவாதம் என்ற நாணயத்தின் மற்றொரு பக்கம்தான் சிறிபால சேனா’ என, தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதே நான் அறிக்கை விடுத்தேன்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதை சிறிபாலசேனா ஏற்கவில்லை; அங்கிருந்து சிங்கள ராணுவத்தையும், காவல்துறையையும் ஒருபோதும் அகற்ற மாட்டோம் என்றும் கூறி விட்டார்; ஐ.நா. விசாரணையை ஏற்க மறுத்து விட்டார்; சிங்கள அரசே விசாரித்துக் கொள்ளும் என அறிவித்து விட்டார். இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கையில் என்றுமே ஒற்றையாட்சி முறைதான், கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஆணவத்தோடு அறிவித்துவிட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்று இங்குள்ள சில மேதாவிகள் இனியும் ஏமாற்றுகிற வேலையில் ஈடுபட வேண்டாம்.
புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
இவர் 1968 ஆம் ஆண்டு இலங்கை சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின் இவர் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) எனும் இந்தியாவுக்கு எதிரான, தமிழ் இனத்துக்கு கொடூர வைரியான கட்சியில் இணைந்தார். 1971 ஆம் ஆண்டு ஜெ.வி.பி.யின் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். 1973 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். கொலைகார ராஜபக்சே அரசாங்கத்தில் இரண்டாம் நிலைத் தலைவராகவும், தற்காலிக பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட கடைசி நாட்களில் ராணுவத்துக்கு கட்டளையிடும் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
இன்று சிங்கள கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பண்டார நாயக, ராஜபக்சே குடும்பங்களுக்கு இடையில் நடந்த ஆதிக்கப் போட்டியில் அதிபர் பதவி ஆசையினால் ராஜபக்சேவிடம் இருந்து பிரிந்து வேட்பாளராகி வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூட்டம் முழு மூச்சாக வேலை செய்தது. இந்தப் பின்னணியைக் கொண்ட புதிய அதிபர்தான் புதுடெல்லிக்கு வருகிறார்.
2009 இல் மனிதாபிமானம் உள்ளவர்களின் மனதை உலுக்கும் கோரமான தமிழ் இனப் படுகொலையைச் சிங்கள ராணுவம் நடத்தியபோது, ராணுவ அமைச்சராக இருந்தவர்தான் இந்த மைத்திரி பால சிறிசேன என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இவரது கரங்களும் தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரங்கள்தான்.
மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமை கவுன்சில் அமர்வில், இலங்கையில் நிலைமை சீராகி விட்டது என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்திய- இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. அதனுடைய முதல் கட்ட அரங்கேற்றம்தான், சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேனவின் இந்திய வருகை ஆகும்.
இலங்கைச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற தமிழர்களை விடுவிக்காமல், தமிழர் தாயகத்தில் இருந்து ராணுவத்தை வெளியேற்றாமல், போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த எந்த உண்மையையும் வெளியிடாமல், சிங்களக் குடியேற்றத்திற்காகப் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களைத் திருப்பிக் கொடுக்காமல், உலகத்தை ஏமாற்றுவதற்காக தமிழர்களுக்கு நாங்கள் வீடு கட்டித் தரப்போகிறோம் என்று டமாரம் அடித்துக் கொண்டு, ஒரு மோசடி நாடகத்தைச் சிங்கள அதிபர் நடத்துகிறார் என்பதைத் தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதோடு மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்துக்கு வந்து கோயிலுக்கும், சங்கர மடத்துக்கும் மைத்திரி பால சிறிசேன செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை மத்திய அரசு மிக ரகசியமாக வைத்து இருப்பதாகவும் நான் அறிகிறேன்.
சிங்கள அரசால் கொலையுண்டு மடிந்த எங்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்காக நெருப்புக்குத் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்த முத்துக்குமார்களின் பூமிதான் தமிழ்நாடு என்பதை புதிய சிங்கள அதிபரும், நரேந்திர மோடியும் மறந்து விட வேண்டாம். விபரீத வேலையில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கின்றேன்.
தமிழகத்து எல்லைக்குள் சிங்கள அதிபர் மைத்திரி பால சிறிசேன அடியெடுத்து வைத்தால், அதனை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கருப்புக் கொடி அறப்போர் நடத்தும். ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இளைஞர்களும், மாணவர்களும் இந்த அறப்போரில் பெருந்திரளாகப் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.