லசந்த விக்ரமதுங்க கொலையில் மூடிமறைப்பட்ட தகவல்கள்

267

 

அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான மூடிமறைக்கப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த வழக்கு கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அன்று பிரேதப் பரிசோதனை நடத்திய, களுபோவில வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சுனில் குமார அறிக்கையில் துப்பாக்கிச் சூடு பட்டத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேரா மற்றும் பொலிஸ் பரிசோதகர் சுகத் குமார ஆகியோர் தெரிவித்தனர்.

களுபோவில வைத்தியசாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார தற்போது மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் சட்ட வைத்திய விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

லசந்த கொலை வழக்கில் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தி வரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் வைத்திய அதிகாரி சுனில் குமாரவுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை கண்டறிந்துள்ளனர்.

விசாரணைகளில் இவர்கள் இருவரும் தகவல்களை மறைக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாணயக்கார மற்றும் சுனில் குமார இடையில் சட்ட வைத்திய அறிக்கை தொடர்பில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் நடந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் உரிய முறையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறதா என்பதை அறிய தான் தொலைபேசி அழைப்பை எடுத்ததாக நாணயக்கார கூறியுள்ளார்.

ஆனால், அப்படியான நடைமுறை ஒன்று சட்ட விசாரணைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரியவருகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கையை திரிபுப்பத்தி விசாரணைகளை தவறாக வழிநடத்தும் நோக்கில் தகவல்களை உள்ளடக்குமாறு சட்டவைத்திய அதிகாரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

SHARE