வங்காளதேசம் பாகிஸ்தானை வென்று ஒயிட் வாஷ் செய்தது..

371
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அசத்திய வங்கதேச அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.வங்கதேச வீரர் சவுமியா சர்கார் சதம் அடித்து அசத்தினார்.

வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் வென்ற வங்கதேச அணி, 2–0 என, தொடரை வென்றது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு அறிமுக வீரர் சமி அஸ்லாம் (45) ஆறுதல் தந்தார். முகமது ஹபீஸ், ரிஜ்வான், பவத் ஆலம் தலா 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ஹாரிஸ் சோகைல் அரைசதம் (52) அடித்தார். ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசார் அலி, 101 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

சுமார் 5 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் ஒருநாள் அணி தலைவர் ஒருவர், இப்போது தான் சதம் அடித்தார். இதன்படி பாகிஸ்தான் அணி 49 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வங்காளதேச அணிக்கு சவுமியா சர்கார், தமிம் இக்பால் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்த நிலையில், தமிம் இக்பால் (64) ஆட்டமிழந்தார். மகமதுல்லா (4) ஏமாற்றிய போதும், சர்கார் சதம் கடந்து அசத்தினார்.

தொடந்து சர்காருக்கு, முஷ்பிகுர் ரகிமும் கைகொடுக்க, 39.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, ஏற்கனவே முதல் இரு போட்டிகளில் அசத்திய வங்காளதேசம்  ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று அசத்தியது.

சதம் அடித்த சர்கார் ஆட்ட நாயகனாகவும், தமீம் இக்பால் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

SHARE