வடக்கில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்கும்!

753

 

 சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்,’  (ஜூன் 12) உலக நாடுகள் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும். பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1956ம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995ல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14-16 என்றும் வரையறுத்துள்ளது.

1989ன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள். எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும் மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை.. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.சிறுவர் உரிமையில் சில அம்சங்களை கீழ்வருமாறு சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 – இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.2007ல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள “சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்” (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,2004ல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.2000ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.2002ல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.

unnamed-15

வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண் பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம். மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற

PICT0012
PICT0012

அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. ‘குழந்தைத் தொழிலாளர் அவலம்’ குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 1986ல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997ல் ‘abolision act’ என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் ‘விவசாயம்’. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லைஎடுத்துக்காட்டாய், ஒரு ‘குழந்தைத் தொழிலாளி’ பற்றிய புகாரை சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன. பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம். இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

வடக்கில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்கும்!

சிறுவர்களை பாதுகாப்பதற்காகவும் சிறுவர் தம்மை பாதுகாத்து கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளில் சிறுவர் உரிமைகள் சட்டம் உருவாக்கப்பட்டு அது 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

unnamed-9-copy

 

இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் சிறுவர்கள் அதிகமான பாதிப்புக்களை எதிர் கொண்டனர். இந்த உள்நாட்டு யுத்தம் சிறுவர்களின் உரிமைகளை மாத்திரமல்ல உயிர்களையும் கொத்துக் கொத்தாக பறித்தெறிந்திருந்தது. வடகிழக்க்pல் தமிழீழ கோரிக்கையோடு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களிலும் சிறுவர்கள் போராளிகளாக இணைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான கல்வி உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நடந்த காலப்பகுதியில் சிறுவர்கள் பற்றியோ அவர்களின் உரிமைகள் குறித்தோ எந்த அரச நிறுவனங்களும் கவலைப்பட்டதில்லை அத்துடன் சிறுவர் நலன் பேணும் அரச சார்பற்ற ‘யுனிசெப்’ நிறுவனமானது யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளால் சிறுவர் உரிமைகள் மறுக்கப்படுகிறது என குற்றஞ்சாட்டி திரிந்ததுடன் யுத்தத்தின் பின் தனது பணியையும் முடித்துக்கொண்டுள்ளது.
ஆனால் அரசாங்க நிறுவனங்கள் சிறுவர் தினமான அன்றைய தினம் மாத்திரம் சிறுவர்களை மீட்க வந்த மீட்பர்கள் என்கிற வகையில் அறிக்கைகளை விடுவதும் சிறுவர் உரிமைகளையும் அவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களை பற்றி பேசுவதும், விவாதிப்பதும்; அறிக்கைவிடுவதோடும் அவர்கள் கடமை முடிந்துவிடும்.
1452531712-e343d6ddffcb1669209d9d1ffc99369d
அந்த வகையில் வடக்கில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் கொலைகள் போன்றவற்றில் அரச இயந்திரம் அசமந்த போக்கில் செயல்ப்படுவதையே கடந்த காலங்களில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக வடக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் இடுத்துரைத்து நிற்கின்றன. இவ்வார்ப்பாட்டங்களின் பின்னணியை ஆராய்ந்தோமானால் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய கோரியும் குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் (பொலி;ஸ் உட்பட) தப்பிக்க வைக்க எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் தாங்களாக எழுச்சிகொண்டிருந்ததையும் அதன் பின் அரச இயந்திரம் சுறுசுறுப்பாக இயங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.
PICT0007
PICT0007

இன்று வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக இருக்கும் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் காவல்துறையினரால் தடுக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலமையே காணப்படுவதுடன் கடந்த காலங்களில் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட புங்குதீவைச் சேர்ந்த வித்தியா மற்றும் வவுனியாவைச் சேர்ந்த கருஸ்ணவி போன்றவர்களின் கொலைகளில் பொலிசார் தடயங்களை தவற விட்டமையும் அதன் காரணமாக குற்றவாழிகளை கைது செய்ய தாமதம் செய்த காரணத்தினால் மக்கள் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் எழுச்சி கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
அந்தவகையில் வவுனியா மாவட்டம் நெடுங்கெணியில் வௌ;வேறு காலப்பகுதியில் நடைபெற்ற இரண்டு சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களை நேரடியாக சென்று செய்திகளை சேகரித்தவன் என்கிற வகையில் இக்கட்டுரையில் அரசதரப்பின் அசமந்தத்தையும் அதன் விழைவாக மக்கள் எழுச்சிகொண்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நெடுங்கெணி சேனைப்புலவு ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோக சம்பவம்
இறுதி யுத்தம் முடிவடைந்து 2013-05-15 ஆண்டு வடக்கில் மகிந்தராஜபக்ச அரசின் தலமையிலான இராணுவ அடக்கு முறை ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதி நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் பாடசாலை சென்று கொண்டிருந்த ஏழு வயதுச்சிறுமி இலங்கை இராணுவத்தை சேர்ந்த காம வெறி பிடித்த கயவன் ஒருவனால் இழுத்துச்செல்லப்பட்டு கைவிப்பட்ட காணி ஒன்றுக்குள் பாலியல் வன்புணர்வின் பின் காமுகனால் சிறுமியின் தலையை நிலத்தில் அடித்து கொலை செய்ய முயற்சித்த வேளை சிறுமி மயக்கமடைந்த நிலையில் சிறுமி இறந்து விட்டதாக கருதிய கயவன் தன் முயற்சியை கைவிட்டு சென்றதன் பின் பொது மகன் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமைய சிறுமியை தேடி வந்த உறவுகள்; சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்திருந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிறுமி சிகிச்சைபெற்று தேறிவரும் நிலையில் ஒரு வாரகாலமாகியும் நெடுங்கெணி பொலிசாரால் குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இராணுவத்தினரால் நேரடியாக அச்சுறுத்தப்பட்டிருந்தனர். அக்காலப்பகுதியில் அன்று கடமையாற்றிய நெடுங்கேணி சிறுவர் நன்நடத்தை அதிகார சபையின் அதிகாரியை சந்தித்த நான் குற்றவாளியை கைது செய்ய ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள் என கேட்டபோது குற்றவாளி யார் என்று தெரியவில்லை நீங்கள் குற்றவாளியை காட்டினால் நாங்கள் கைது செய்ய தயாராய் இருக்கிறோம் என அலட்சியமாக பதிலளித்திருந்தார்.
வவுனியாவில் செயற்பட்டுவரும் பொது அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நெடுங்கெணி மக்களை ஒன்று திரட்டி அரச அதிகாரிகள். இராணுவத்தினர் மற்றும் பொலிசாருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் குற்றவாளியை கைது செய்யக் கோரி பிரதேச செயலாளர் மற்றும் ஜனாதிபதிக்கு பொது அமைப்புக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிசாரால் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் பாலியல் குற்றவாளி பணியாற்றிய இராணுவ முகாம் பொறுப்பதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
நெடுங்கேணி ஒலுமடு பத்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம்
ஒலுமடு பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு கல்வி கற்றுவரும்; சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகத்தின் போது சிறுமியின் சமயோகிதத்தால் உயிர்ச்சேதமின்றி தப்பித்தள்ளார். 24-05-2015 அன்று வழமைபோல் பாடசாலை முடிந்தவுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சைக்கான மேலதிக வகுப்பிற்காக காத்திருந்த சிறுமி பாடசாலையின் முன்னாள் உள்ள தேநீர் கடையில் டொபி வாங்குவதற்காக சென்றுள்ளார். குறித்த கடையை நடத்தி வந்த காமுகன் சிறுமிக்கு டொபிக்கு பதிலாக போதை கலந்த இனிப்பை வழங்கியுள்ளான். இனிப்பை சாப்பிட்ட சிறுமி தன்னிலை மறந்த வேளையில் கடைக்குள் இழுத்துச் சென்று அச்சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளான் அந்த மிருகம் தனது தேவை முடிந்தபின் சிறுமியை பார்த்து இந்தவிடயத்தை நீ யாரிடமாவது சொல்வாயானால் உன் அம்மா மற்றும் அப்பாவின் கழுத்தை நெரித்து கொன்று உங்கள் காணிக்குள் வீசிவிடுவேன் என்று எச்சரித்ததுடன் அக் காமுகன் தேநீர் கடையின் முன்னால் யாராவது வருகிறார்களா? என பார்க்க சென்ற வேளை தேநீர் கடையின் பின் பக்க வாசல் வழியாக தப்பித்த சிறுமி பாடசாலை வளாகத்திற்குள் ஓடி விட்டதால் சிறுமி உயிருடன் தப்பித்துள்ளார்.
பெற்றோரை கொன்று போடுவேன் என மிரட்டிய குற்றவாழி சிறுமியை கொலைசெய்ய எண்ணியிருக்க வேண்டும். காரணம் சிறுமியை தேநீர் கடையின் பின் பகுpயில் இருக்க வைத்துவிட்டு கடையின் முன் யாராவது வருகிறார்களா? என குற்றவாளி பார்க்கச் சென்ற வேளையிலேயே சிறுமி தப்பித்திருக்கிறாள். கடந்த காலத்தில் பாடசாலை மாணவிகளான புங்குடுதீவில் வித்தியா, வவுனியாவில் கருஸ்ணவி மற்றும் தென்நிலங்கையில் சேயா போன்றவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டபின் காமுகர்களால் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
பாடசாலையில் வகுப்பறைக்கு சென்ற சிறுமியின் அலங்கோல நிலைகண்ட ஆசிரியை சிறுமியிடம் விடயத்தை அறிந்துகொண்டு உடனடியாக சிறுமியின் தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பாடசாலைக்கு சென்ற சிறுமியின் தாய் தன் மகளுக்கு நடந்த கொடுமையறிந்தவுடன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் பொலிசார் கடமைக்கே தங்கள் கடமையை செய்துள்ளனர். சந்தேகநபரை கைது செய்த பொலிசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மாலை 5.00 மணிக்கு பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணையின் பின் நள்ளிரவு 2.00 மணிக்கே வவுனியா பொது வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்திருந்தனர்.
இவ்வாறான சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களில் தடயங்கள் முக்கிய சாட்சியங்களாக இருக்கும் நிலையில் சிறுமியின் ஆடையை பொலிசார் கைப்பற்றியிருக்கவில்லை அத்துடன் சிறுமி போதை மருந்து கலந்த இனிப்பு வழங்கப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்த விசாரணைகள் நெடுங்கேணி பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போதை மருந்து கலந்த டொபி எனது குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது என பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதும் அந்த விடயத்தை பொலிசார் உதாசினம் செய்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற குறித்த தேநீர் கடையை மூடுமாறு கோரிய சிறுமியின் தாயார் முறைப்பாடொன்றையும் நெடுங்கெணி பொலிசாரிடம் கொடுத்துள்ளார் அம் முறைப்பாடும் பொலிசாரால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
குற்றம் புரிந்தவர் என சந்தேகிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிசார் கைது செய்தபோது தேநீர்க்கடையிலிருந்த குளிரூட்டியின் கீழ் போதைப்பொருள் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்திருந்தனர். பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து சிறுமியின் தாயாரை பார்த்து நான் வெளியில் வந்து உன்னை என்ன செய்கிறேன் பார் என எச்சரித்துள்ளான். குறிப்பிட்ட சந்தேக நபர் யுத்த காலப்பகுதியில் வவுனியாவில் சுத்தானந்தா இந்து இளைஞர் சேவைகள் மன்றத்தில் தங்கியிருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறை சென்றவர் என்பதுடன் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கிலிருந்து ஒரு காலத்தில் மிளகாய், வெங்காயம் மற்றும் புகையிலை போன்ற விவசாயப்பொருட்கள் தென்நிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நிலமை தலைகீழாக மாறி வடக்கிலிருந்து கஞ்சா. கெரோயின் போன்ற போதைப்பொருட்களின் இறக்குமதி தளங்களாகவும் வினியோக பாதையாகவும் மாறிவிட்ட நிலையில் கலாச்சாரம் சீரழிந்து கல்வியில் யாழ்ப்பாணம் இலங்கையின் கடைசி மாவட்டம் என்ற நிலையை அடைந்தள்ளது. யுத்தத்தின் பின்னரான போதைப்பொருள் பாவனையே அனைத்து பாலியல் துஸ்பிரயோக குற்றங்களுக்கும் ஆணிவேராக இருந்துள்ளது.
நெடுங்கேணி ஒலுமடு சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயாரிடம் கிராம உத்தியோகத்தர் ஒருவர் நஸ்ட ஈடாக துஸ்பிரயோகம் செய்தவரிடமிருந்து கணிசமான பணம் பெற்றுத்தருவதாக பேரம் பேசியதுடன் உங்களுக்கு கலியாண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் மற்றது துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளை வளர்ந்த பின் இப்பிரச்சனை வெளியில் தெரிந்தால் அவளுக்கும் பிரச்சனை தானே என அறிவுரை வழங்கியுள்ளார். குற்றத்தை மூடி மறைக்க துணை போயுள்ளனர்.

unnamed-14
வவுனியாவில் இயங்கும் வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பொறுப்புள்ள அதிகாரி சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னரே ஒலுமடுவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துள்ளார். ஒரு மாதமாக அவர் என்ன வேலை செய்தாரோ? எங்கு செய்தாரோ? அல்லது அந்த அதிகாரிக்கு ஒரு மாதத்தின் பின்னர்தான் தகவல் கிடைக்கப்பெற்றதா? என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகங்களின் பின் விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதுடன் தடயங்களை தவறவிடும் அல்லது அலட்சியப்படுத்தப்படும் நிலைமையே விசாரணை அதிகாரிகளிடம் காணப்படுகிறது பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அல்லது ஆற்றுப்படுத்த முற்சிக்காத பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதுடன் தங்கள் பணியினை நிறுத்திக்கொள்கின்றனர்.
தேன்னிலங்கையில் சேயா என்ற சிறுமி பாலியல் வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் பொலிசாரின் பொறுப்பற்ற நடவடிக்கை ஒரு பாடசாலை மாணவனை கைது செய்யும் அளவிற்கு இருந்தள்ளது. இன்று அந்த மாணவனின் எதிர்காலம் என்ன? அவன் எவ்வாறு இந்த சமூகத்தை எப்படிப்பட்ட நிலையில் எதிர்கொள்ள போகிறான் என்கிற கேள்விகள் தொக்கி நிக்கிறது.
வவுனியாவில் பாடசாலை மாணவி கருஸ்ணவி பாலியல் துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களின் பின்பே மொப்பநாயுடன் சென்ற பொலிசார் எந்தவிதமான தடயங்களையும் கைப்பற்றியிருக்கவில்லை குற்றவாழியையும் கைது செய்திருக்கவில்லை வாரங்கள் கடந்த நிலையில் மக்களின் போராட்டங்களின் பின்னரே சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பொலிசாரின் அசமந்தம் மக்களை வெகுசன போராட்டத்திற்கு தள்ளியதுடன் பொலிசார் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அது மாத்திரமல்ல புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமல் போய்விட்டார் என கார்நகர் பொலிஸ் நிலையத்தில் வித்தியாவின் தாயார் முறையிட்டபோது உங்கள் மகள் யாருடனாவது ஓடியிருப்பாள் என கூறிய பொலிசாரின் பொறுப்பற்ற அலட்சியம் உடனடியாக நடவடிக்கை எடுக்காமை போன்றன புங்குடுதீவில் ஒரு பாலியல் கொலைக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக வடக்கில் மாங்குளத்தில் ஒகஸ்ட் 23-2015 அன்று பாடசாலை முடிந்து வீடு வந்து கொண்டிருந்த 14 வயது சிறுமியை பாதுகாப்புத் தரப்பை சேர்ந்த இருவர்(இருவரும் பொலிஸார் என சந்தேகிக்கப்படுகிறது) துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த வேளை சிறுமி கூக்குரலிட்டதை தொடர்ந்து அயலவர்களால் சிறுமி காப்பாற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட இருவரும் பொது மக்களால் நைய புடைக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் வடக்கை பொறுத்தவரை அதிகாரத்தரப்பு மாற்றாத்தாய் மனப்பான்மையுடன் செயற்படுவதையும் தங்கள் வசம் அதிகாரம் இருக்கும் காரணத்தால் தங்களை எவரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற சர்வதிகார போக்குமே காணப்படுகிறது. இறுதி யுத்தத்தின் பின் அனைத்தையும் முள்ளிவாய்க்காலில் இழந்து எதுவுமே இல்லாமல் மூச்சை இழுத்து பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் பாதிக்கப்பட்டவர்களை மாத்திரமல்லாமல் அவர்களின் உறவுகளையும் மனநோயாளிகளாக மாற்றும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த நான்கு வருடத்தில் 2 இலட்சத்து பத்தாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இதில் 25 ஆயிரம் முறைப்பாடுகளே விசாரிக்கப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 300 முறைப்பாடுகள் வந்தால் 30 முறைப்பாடுகளே விசாரிக்கப்படுகின்றன அரச இயந்திரம் மந்த கதியிலே செயல்ப்படுகின்றது என்பதற்கு இதை விட ஒரு முன்னுதாரணம் தேவையில்லை.
சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் காரணமாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதுடன் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. எமது சமூகத்தின் கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் சிதைவடைந்திருக்கும் நிலையில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை எமது எதிர்கால சந்ததியினரை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எந்த இனத்தை சேர்ந்த அதிகாரிகளாக இருந்தாலும் தங்கள் மூலப்பதிவிலிருந்து விடுபட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழும் அதிகாரிகள் தங்களை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதுடன் மக்கள் சேவை மகேசன் சேவை என்பதனை மனதில்க்கொண்டு நாட்டையும் நாட்டின் எதிர்காலத்தையும் ஆரோக்கியமான சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும், பாலியல் குற்றவாழிகளின் வழக்குகள் நீதிமன்றங்கள் விரைவுபடுத்த வேண்டும் என்பதுடன் குற்றவாழிகள் எக்காரணம் கொண்டும் சமூகத்தில் நடமாட அனுமதிக்க கூடாது என்பதனை பொது அமைப்புக்கள்,மகளிர் அமைப்புக்கள் மற்றும் சிறுவர் அமைப்புக்கள் என்பன அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
  • unnamed-8
    சிறுவர்களை துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்புள்ளது என்பதனை அவர்கள் மறந்துவிடக்கூடாது.
    இறுதியாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை சிறுமி (18-09-2016) அன்று நான்கு காமுகர்களால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் பருத்தித்துறை பொலிசார் போதிய ஆதாரம் இல்லை என கூறி குற்றவாழிகளை தப்பிக்க விட்ட நிலையில் சமூக ஆர்வலர் ஒருவரால் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்ட விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து குற்றவாழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    சமூகத்தில் மிகப்பெரும் பாதுகாப்பு நிறுவனங்களாக அரசும்;, நீதிமன்றமும், காவல்த் துறையும், இராணுவமும் சிறைச்சாலைகளும் விளங்குகின்றன அவை சமூகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலைகளையும் தடுப்பதில் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது? என்கிற கேள்விகள் சமூகத்தில் தொடரும் சிறுவர் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் காட்டப்படும் தாமதம் என்பன அரச நிறுவனங்களின்; மீது மக்கள் சந்தேகம் கொள்ளவே வைக்கிறது.
    மைக்கல்
SHARE