வடமாகாணசபையில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம்!

404

 

unnamed
வடக்கு மாகாணசபை அமைச்சு பொறுப்புகளில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து இலங்கை தமிழரசுக்கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​இதன்பிரகாரம், தமிழரசுக்கட்சியை வன்னி மாவட்டத்தில் பலப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு முதலமைச்சரின் பொறுப்பிலிருக்கும் வலுவான அமைச்சாகிய உள்ளுராட்சி அமைச்சும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏற்கனவே சுகாதார அமைச்சருக்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர் பெண்கள் விவகார விடையமும் இரகசியமாக கையளிக்கப்பட்டு, அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த அனந்தி சசிதரனை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கீழ் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.
வடக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலும் ஏனைய உறுப்பு கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையிலும் திட்டமிட்டு தமிழரசுக்கட்சியால் அமைச்சரவை உருவாக்கப்பட்டமையும், கூட்டமைப்பின் பெயரால் விதைக்கப்பட்டதை தனி ஒரு கட்சியாக அக்கட்சி அறுவடை செய்து கொண்டிருப்பதும் உலகறிந்த விடையமே.
கூட்டமைப்பின் எல்லாக்கட்சிகளும் இணைந்து வந்து கேட்டால் மாத்திரமே முதலமைச்சர் வேட்பாளராக வருவேன் என்று கூறிய விக்கினேஸ்வரன், நீதி பிறண்டு தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதற்கான அமைச்சரவை ஏற்பாட்டுக்கு அவர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்துள்ளமையும் வெளிப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தியவர்களோடு இணைந்து வேலை செய்வது சங்கடமானது என்று அண்மையில் அவர் தெரிவித்த கருத்து அமைச்சரவை உருவாக்கத்தில் இவரின் பங்களிப்பும் இருந்துள்ளது என்பதை புலப்படுத்துகின்றது.

​அமைச்சரவை தெரிவுகளை அறிவிக்கும் போது, மாகாணசபைக்கு உரித்தான உள்ளுராட்சி கூட்டுறவு போன்ற வலுவான அமைச்சுகள் உட்பட 15க்கும் மேற்பட்ட அமைச்சு பொறுப்புகளை தமிழரசுக்கட்சி முதலமைச்சரிடம் விட்டு வைத்திருந்தது. வலுவான இந்த அமைச்சுகளை அன்றே பகிர்ந்தளித்திருந்தால் கட்சியை வளர்க்கும் திட்டம் அம்பலமாகி ஒரு கொதிப்பு நிலை ஏற்படும் என்பதால் அப்போது முதலமைச்சரிடம் விட்டு வைத்து விட்டு, இப்போது மக்களையும், ஏனைய உறுப்பினர்களையும் திசை திருப்பி விட்டு அந்த அமைச்சுகளையும் இப்போது அக்கட்சி எடுத்துக்கொண்டுள்ளது.

அமைச்சர்கள் அல்லாத ஏனைய 24 உறுப்பினர்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது போன்ற தோற்றத்தை முன்னர் ஏற்படுத்திவிட்டு இப்போது மக்கள் மன்றத்திலிருந்து அதை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொறுப்புகள் 24 உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று அன்று சொல்லப்பட்ட விடையங்கள் இன்று ஏமாற்றுக்களே! அதுதொடர்பில் இன்றுவரை முதலமைச்சரும் தமிழரசுக்கட்சியும் வாய் மூடி மௌனியாக இருக்கின்றனர்.
அமைச்சரவையில் என்ன பேசப்படுகின்றது? என்ன முடிவு எடுக்கப்படுகின்றது? அமைச்சர்கள் யார் யாருக்கு வேலை கொடுக்கின்றார்கள்? எந்த அடிப்படையில் அந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? போன்ற தகவல்கள் எந்த உறுப்பினர்களுக்கும் இதுவரையில் தெரியாது.

​இதனால் உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்கொதிப்பின் வெளிப்பாடே முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் உட்பட பலர் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் பகிரங்கமாக விமர்சித்தமையும், கடந்த சபை அமர்வில் சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சரவையை தோற்கடிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தமையும் இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த ஒரு வருடமாக மாகாண அரசு செயல்படாமல் தூங்கி வழிகிறது என்ற பரவலான விமர்சனத்தையும் தடைகளையும் தகர்த்து செயல்படும் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு அமைச்சர்கள் எந்த முன்னெடுப்புகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்பதையும் வைத்து பார்க்கும்போது, அமைச்சு பொறுப்பு மாற்றமா? அமைச்சர்கள் மாற்றமா? எது தேவை என்ற கேள்வி எழுகின்றது.
மாகாண அமைச்சரவை என்ற முடமான கழுதை மீது பாரங்களை மாற்றுவதால் மட்டும் ஆகிவிடப்போவது எதுவுமில்லை.
 TPN NEWS
SHARE