வடமாகாண பேருந்து சேவை இணைந்த நேர அட்டவணை செப்ரம்பர் 7 இல் அமுல்

313

 

வடமாகாண பேருந்து சேவை இணைந்த நேர அட்டவணை  செப்ரம்பர்  7 இல் அமுல்

வடமாகாண பேருந்து சேவைகளுக்கிடையிலான இணைந்த நேர அட்டவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச்சட்டம், இணைந்த நேர அட்டவணை அமுலாக்கம், மற்றும் போக்குவரத்து ஒழுங்கு தொடர்பான விசேட ஒன்றுகூடல் யாழ் குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 26-08-2016 வெள்ளி காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இவ்விசேட ஒன்றுகூடலில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் நீக்கிலாப்பிள்ளை, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரதிநிதியாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அனைத்து மாவட்டங்களினதும் பிரதம கணக்காளர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் பிரதம பிராந்திய முகாமையாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் வடமாகாண பொறுப்பதிகாரி, ஐந்து மாவட்டங்களினதும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் தனியார் போக்குவரத்து வட மாகாண ஒன்றியத்தின் தலைவர், போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த விசேட ஒன்றுகூடலில் உரையாற்றிய அமைச்சர், மது மாகாணத்தில் பொதுமக்களுக்கான பாதுகாப்பானதும் தரமானதுமான போக்குவரத்து சேவையை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்.

வடமாகாணத்தின் போக்குவரத்து தொடர்பாக பாரிய பிரச்சனைகள் நீண்டகாலமாக நிலவி வருகிறது இதை நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு தரப்பினருடனும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனடிப்படையில் தற்போது போக்குவரத்து தொடர்பில் ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்துவதற்காக வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கான நியதிச்சட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
குறிப்பாக வடமாகாண சபை ஆரம்பித்த பின்னர் அதிகார சபை ஊடாக ஒரு நியதிச்சட்டத்தினை உருவாக்கியுள்ளமையும், அதன் ஊடாக பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கப்போகிறோம் என்பது பெருமைக்குரியதாகவுள்ளது.

கடந்த காலங்களில் வடமாகாண போக்குவரத்தில் உள்ள பிரச்சனைகளில் முக்கியமாக இணைந்த நேர அட்டவணை பின்பற்றப்படாமையால் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இலங்கை போக்குவரத்துச்சபையினருக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கான அதிகமான சேவைகளை வழங்கி வருவதால் அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்து இணக்கப்பாட்டுக்கு கொண்டுவருவது அவசியமாகிறது. இரு தரப்பினரும் வெளிப்படையாகதமது பிரச்சனைகளை தெரிவித்து இணைந்த நேர அட்டவணைக்கு இரு தரப்பினரும் சம்மதித்துள்ளார்கள்.
அத்துடன் கடந்த ஒருவருடத்தில் இயற்கை மரணத்தால் இறந்தவர்களை விட விபத்துக்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாகவுள்ளது. ஆகவே இதை நிவர்த்திசெய்ய வேண்டும்.
எம்மால் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டத்தில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிகாரசபைக்கான ஆளணிகளை உள்ளவாங்கவிருக்கிறோம். அத்துடன் 11 பேர் கொண்ட சபையை ஆரம்பிக்கவுள்ளோம்.இக்குழுவினரே எதிர்காலத்தில் போக்குவரத்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சீர்செய்யப்போகிறார்கள்.

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து வடமாகாண மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த அட்டவணையை செயற்படுத்துவதற்கு பல நேரக்கணிப்பாளர்கள் தேவைப்படுகின்றார்கள். எனவே குறிப்பாக ஆளணி உள்வாங்கப்படும்வரை அதாவது ஒருமாதகாலத்துக்க இலங்கைப்போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளார்கள், தனியார் துறையின் நேரக்கணிப்பாளார்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குளுவின் நேரக்கணிப்பாளர்களுடன் பொலிஸாரும் இணைந்து கடமையில் ஈடுபடவுள்ளார்கள். அதாவது ஐந்து மாவட்டங்களிலும் இனங்காணப்பட்ட 15 பேருந்து தரிப்பிடங்களிலும் நேரக்கணிப்பாளர்கள் அமர்தப்பட்டு பொலிஸாருடன் இவர்கள் அனைவரும் தொடர்சியான கள விஜயம் மேற்கொண்டு போக்குவரத்து சேவைகள் சீர்படுத்தப்படும்.

7 ஆம் திகதிக்கு பின்னர் போக்குவரத்து விதிமுறைகளில் சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் நீதிமன்றினூடாக தண்டிக்கப்படுவார்கள். அதாவது 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அல்லது 6 மாத கால சிறைத்தண்டனை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துசெய்தல், நீதிபதி விரும்பும் இடத்து இவை அனைத்தையும் சேர்த்து தண்டம் விதிப்பதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. எனவே சாரதிகள், நடத்துனர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுககொள்கிறேன்.

எமது மாகாண போக்குவரத்து சேவையை பின்பற்றி ஏனைய மாவட்டங்கள் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது விருப்பம். சில விடயங்கள் நடைமுறைக்கு வரும் போது மக்கள் அதன் நன்மையை அறிந்து கொள்ளவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.14088443_10210212508578298_4460386679490096277_n14088571_10210212504578198_7724701545680816265_n14199498_10210212504738202_6840939012048007814_n

SHARE