வட்டுக்கோட்டை பிரகடனமும் பாலமுனை களியாட்டமும்!!!

302

 

tamilmission.com

நவீன ஆட்சி முறை அறிமுகத்துக்கு பின் பல நாடுகளில் சிறுபான்மையினர் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதை அல்லது அந்நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளதைக் காணலாம்.

Cd61u8LWEAEABIw

இது ஒரு விதி விலக்கு என்ற அடிப்படையில் அமைந்தாலும், பல்லின, பல்கலாச்சார தன்மை கொண்ட நாடுகளின் அரசியலில் சிறுபான்மை சமூகத்தினர் தம் அரசியல் இருப்புக்காக இணக்க  அரசியல் நடத்துவதையும் இது சாத்தியமாகாத நிலையில் அல்லது சிறுபான்மை என்ற ஒரே காரணத்துக்காக அரசியலில் ஓரங்கட்டப்படுவதை உணரும் போது அதிலிருந்து மீள எதிர்பரசியலை நாடுவதும் கண்கூடு. ஆக சிறுபான்மை என்ற வரையறைக்குள் வரும் மக்கள் தம் அரசியல் அதிகாரம் என்ற ஒரு இலக்கை கொண்டிருக்காவிட்டாலும் பிரச்சினை இல்லாத அரசியல் இருப்புக்காகவேணும் தம்மை அரசியல் ரீதியில் தயார் படுத்துவது அது நோக்கிய வேலைபாடுகளில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட முடியாத அம்சமாகும் என்பதோடு இது அத்தகைய தன்மை கொண்ட நாடுகளின் அரசியல் வரலாற்றின் ஒரு அம்சமாகவும் ஆகிவிடுகின்றது.

இப்படி அரசியல் வரலாற்றின் கடந்தகாலம் பற்றிய அந்நாட்டு சமூகங்களின் அறிவு அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வடிவமைப்பதாக அல்லது வழி காட்டுவதாக அமையும். அரசியலின் கடந்தகாலம் தெரியாத சமூகம் தமது எதிர் காலத்தை அரசியல் ரீதியாக தீர்மானிப்பதென்பது கஸ்டமான காரியமாகும்.

இந்த வகையில் ஸ்ரீலங்காவின் அரசியலைப் பார்ப்போபமேயானால் சிறுபான்மையினரின் இணக்க அரசியல் எதிர்ப்பரசியல் என்ற இரண்டு வடிவங்களையும் சுதந்திர காலத்தில் இருந்தே நாம் கண்டுவந்துள்ளோம்.

ஐரோப்பிய முற்றுகைக்கு இலங்கை முதன் முதலில் முகங்கொடுத்த போது, அதாவது போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோர பகுதிகளை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த போது இலங்கையின் வடபகுதி தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டதும், ஏனைய பகுதிகள் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டதும் வரலாறு. ஆனால் காலணித்துவத்தின் கடைசி பிரிவினரான ஆங்கிலேயர் இலங்கையின் வேறுபட்ட ஆட்சி பிரிவுகளை ஒன்றை ஆட்சி முறைமைக்குள் இணைத்த போது  இதுவரை  எதை தமது உரிமை (சுயாட்சி) யாக எண்ணியிருந்தார்களோ  அதை இப்போது இழந்துவிட்டதாக வடபகுதி தமிழ் மக்கள் உணர்ந்தனர். இதன் பிரதிபலிப்பாகவே 1976 மே மாதம் 14ம் திகதிய  நிகழ்வு அமைந்தது. அதுதான் “வட்டுக் கோட்டை பிரகடனம்”. அதாவது ஆண்ட இனம் (தம் நில புலத்தை) மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்ற கேள்வியில் எழுந்த அவர்களின் தனி நாட்டுக்கான அரசியல்(ஆட்சி) உரிமைப் பிரகடனம்.

இந்த வட்டுக்கோட்டை பிரகடனத்தின் நியாயங்கள், பிரகடன இலக்கின் நிகழ்வு சாத்தியங்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள். அவை தமிழ் மக்களை கொண்டு சேர்த்த தற்காலிக தரிப்பிடம்  என்பவை பற்றி ஆராய்வதல்ல இக்கட்டுரையின் நோக்கம். ஏனெனில் இவை தொடர்பான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் பல சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, அதன் சரி பிழைகள் விவாதிக்கப்பட்டு; ஓர் அளவு தெளிவும்பட்டு தமிழ் அரசியல் இன்று சூழல் மாற்றத்தோடு ஆனால் அடிப்படை குறிக்கோளில்(சுய நிர்ணய உரிமை கோரிக்ககையில்) மாற்றமில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அது தொடர்பான மேலதிக ஆய்வு இங்கு தேவையும் இல்லை.

ஆனால் ஒரு நாட்டின் அரசியலில் சிறுபான்மையினரின் பங்குபற்றலின் தேவையும் விளைவும் என்ற அம்சத்தை கவனத்தில் எடுக்கும் போது படிப்பினை பெறுவதற்கான ஒரு ஒப்புநோக்கு தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

இந்த அடிப்படையில் தமிழரின் 1976 வட்டுக்கோட்டை பிரகடனத்துடன் சோனகரின் 2003ம் ஆண்டின் ஒலுவில் பிரகடன ஒப்பீடே சரி என்ற ஒரு தோற்றப்பாடு, அதாவது இரண்டு வேறுபட்ட சிறுபான்மை இனங்களின் இரண்டு வேறுபட்ட பிரகடனங்களுக்குமிடையிலான ஒரு ஒப்பு நோக்கு என்பது இந்த கட்டுரையின் நோக்கத்தை சிதைத்துவிடும் என்பதோடு பன்மைத்துவ அரசியல் சூழலில் இனத்துவ அரசியல் உரிமை(?) க்கா ” அல்லாஹு அக்பர்” என்ற பெருத்த வான்முட்டும் கோஷங்களோடு பாலமுனையில் இருந்து ஒலுவில் வரை சென்ற மக்கள் பேரணி அதில் கலந்து கொண்டவர்களுக்கு உணர்த்த முயலாத விடயம் என்னவெனில் இது ” அல்லாஹ்” வை “அக்பர்” என்று நிறுவ ஒழுங்கு செய்யப்பட்ட சமய ஊர்வலம் அல்ல என்ற அம்சமாகும். ஆகவே இது வட்டுக்கோட்டையில் தமிழ் இளைஞர்கள் இரத்த திலகமிட்டு செய்து கொண்ட  அரசியல்(சுய நிர்ணய) உறுதி மொழியுடன் ஒப்பிட முடியாத அம்சமாகும்.

ஒலுவில் பிரகடனம் தொடர்பான பாலமுனை பேரணியின்  இந்த அடிப்படை குறைபாடு அல்லது இந்த ஒலுவில் பிரகடனத்துக்கு வழி சமைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “குர்-ஆன்”, “ஹதீஸ்” அடிப்படை கொண்ட “யாப்பு” என்ற அர்த்தமற்ற கருத்து திணிப்பு மக்கள் மனங்களில் வேறூன்றி இருந்ததால் (இப்போதும் இருப்பதால்) இது அரசியல் தெளிவற்ற வெறும் (சமய)உணர்ச்சிகொண்ட மக்கள் திரட்சியாகக் காணப்பட அதுவே  அங்கு சரியான அரசியல் உரிமை(?) பிரகடனம் ஒன்றை செய்ய முடியாமல் போனதாக தெரிகின்றது. இந்த அடிப்படையில் வட்டுக்கோட்டையையும் ஒலுவிலையும் ஒப்பிட முயற்சிப்பது வித்தியாசமான அங்கக்குறைவீனர்களை ஒப்பிடுவது போன்றதாகும்.

ஆகவேதான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(TULF)யின் வட்டுக்கோட்டை தேசிய மாநாட்டையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC)சின் பாலமுனை தேசிய மாநாட்டையும்(?) ஒப்பிடவேண்டியுள்ளது. வட்டுக்கோட்டை தேசிய மாநாடு 40 ஆண்டுகளை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு மாதமே இருந்தாலும், இந்த 40 ஆண்டு நீண்ட காலப்பகுதிக்குள் பிராந்திய, உலக அரசியலில் பல்வேறுபட்ட மாறுதல்கள் இடம் பெற்றாலும், பல நாடுகள் ஒன்றுக்கு மேட்பட்டதாக பிரிந்தாலும், பிரிந்திருந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்தாலும் தமிழ் தரப்பு இன்றும் விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை கோரி நிற்கும் விடயம்தான் இழந்த “சுய நிர்ணய உரிமை” யை மீளப் பெறுதல் என்ற அதி உச்ச அரசியல் நிலைப்பாடாகும்.  அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் 19ம் தேசிய மாநாடு என்று சொல்லப்படும் நிகழ்வானது 19.03.2016ல் நடத்தப்பட்ட பல கட்சிகளின் பாலமுனை (அரசியல்) கூட்டமும் அது சார்ந்த களியாட்ட நிகழ்வுகளாகவுமே அமைந்துள்ளது.

ஆகவேதான், அதில் நல்லாட்சியின் பிரதான பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பிரதரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக ஜானாதிபதியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஸ்ரீலங்கா எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்களும், இன்னும் இதர அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பலகட்சி அரசியல் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்,

அதிலே மேடையேற்றப்பட்ட கலை நிகழ்சிகளை  மக்களும் அரசியல் தலைவர்களும் கண்டுகளித்தனர். இந்த களியாட்ட நிகழ்வுக்கு பங்களிப்பு செய்த அனைவருக்குமான நன்றி நவிலலும், விருந்துபசாரமும் சென்ற கிழமை நடந்தேறியதும் அனைவரும் அறிந்த விடயமே. ஆக உரிமை பிரச்சினை என்று அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  27 ஆண்டுகளின் பின் அதன் போராளி(?)களையும், அவர்கள் சார்ந்த சமூகத்தையும் வெறும் சோற்றை கொடுத்து வயிற்றுப் பசியாறுவதே உரிமை பிரச்சினைக்கான தீர்வு என்று காட்டியுள்ளதாகத் தெரிகின்றது..

சராசரி அரசியல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சி ஒன்றின் தேசிய மாநாடென்பது முக்கியமான ஒரு அரசியல் நிகழ்வு. அதுவும் கடந்த ஆட்சியில் விரக்தியின் விளிம்புவரை விரட்டப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் என்ன? அவை எப்படி செயல் உருவம் பெறவேண்டும்? என்ற அம்சம் இன்னும் நிலுவையில் இருக்க,  இந்நாட்டு முஸ்லீம்களின் ஒட்டுமொத்த “அரசியல் குரல்” என்று தன்னை காட்ட முயற்சிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இந் நிகழ்வில் அம்மக்களை முதன்மைபடுத்தவில்லை.  இதுவரை தீர்க்கப்படாத அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று பட்டியலிடவில்லை. அவர்களின் அரசியல் உரிமையாக (?) சொல்லப்படும் எதையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை.

முஸ்லீம்களின் அரசியல் உரிமை என்று இவர்கள் 1989ம் ஆண்டில் இருந்து சொல்லிவரும் விடயம் பற்றி, அங்கு கதைக்கப்படவில்லை. அப்படி கதைக்கப்படாததால் அதை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்ற கேள்விக்கு இடமில்லாதவாறு கிழக்கின் முஸ்லீம்கள் நாளாந்தம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை, இவற்றில் அனேகமானவை இலங்கையின் அனைத்து இன மக்களும் ஏதோ ஒருவகையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும்,  (மூக்கால் அழுது) ஜனாதிபதியின் கவனத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் இந்த மாநாட்டில் கொண்டுவந்ததாக அக்கட்சியின் ஊடக பொறுப்பாளரும், தேசிய பட்டியலின் மூலம் தற்காலிக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவருமான, தலைவரின் சகோதரர், தமிழ் ஊடகங்களுக்கு எழுத்து மூலமான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதுவும் கூட ஆங்கில, சிங்கள ஊடகங்களில் ஏலவே இவை பதியப்பட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்துவிட்டன என்ற அடிப்படையிலேயே, இதை தாம் முன்வந்து வெளிக்கொணர்வதாக ஒரு குற்றச்சாட்டுடன் இதை முன்வைத்துள்ளார்.

ஆக அந்தளவுக்கு இந்த தேசிய மாநாடு(?) முக்கியமில்லாத விடயம் என்ற நிலையில் தமிழ் ஊடகங்கள் இந்த விடயத்தை தவிர்த்திருக்கின்றன, அதே நேரத்தில்  சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த பல்கட்சி அரசியல் பொதுக் கூட்டத்தை விமர்சிக்கும் வகையில் அதை வெளியிட்டிருக்கின்றன. இதுவும் கூட இங்கு முக்கியமற்ற விடயம்.  ஏனெனில் மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவர அதுவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான அமைச்சார் ஒருவரால் அப்பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட ஒரு தேசிய மாநாடு(?) கூட்டப்பட்டதுதான் ஏன் என்ற கேள்வியாக எல்லார் மனதிலும் தொக்கி நிற்கின்றது.

கூடவே கட்சி தலைவர் றவூப் ஹகீம் அவர்களின் பின்வரும் கூற்று அதாவது: ” நான் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்தும் எம்மக்கள் சார்பான பிரச்சினைகளை கதைக்க முற்பட்டபோது பாராளுமன்றத்தில் எவ்வாறு மோசமாக நடத்தப்பட்டேன் என்பதை இன்றைய ஜனாதிபதி அனுதாபத்துடன் பார்த்திருந்ததையும்,  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து எந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி விடக்கூடாது, அனைவரையும் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே, தேர்தலுக்கு மிக அண்மைக்காலம் வரை பழைய அரசாங்கத்துடன் இருந்து இறுதியில் இன்றைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தம் நிலைப்பாட்டை அறிவித்ததாகவும், (இது தனது அரசியல் ராஜதந்திர நடவடிக்கையாய தனக்கே ஒரு தகுதியை தான் சூடிக் கொண்டு) அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தின் பங்காளியாக மாறி தம் கட்சி ஆதரவாளர்களின் அமோக ஆதரவை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார்” என்பதை சொல்ல தலைவரால் ஒரு தேசிய மாநாடு(?) கூட்டப்படதென்பது புரிந்துகொள்ள முடியாத ஒரு விடயமே.

தம் சமூகத்தின் பிரச்சினையை கதைக்க பாராளுமன்றம் சென்று, அங்கு அவர் மோசமாக நடத்தப்பட்டார். ஆகவே அவர் மெளனியாக இருந்தார் என்றால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருந்திருக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் தலைவன் என்பவனிடம் மக்கள் எதிர்பார்ப்பது துடிப்பு, மக்களுக்காக எதையும் முகங்கொடுக்கும் துணிவு , சிறை செல்வது, உயிரிழப்பது அடங்கலாக, இதை விட்டு விட்டு எனக்கு முட்டுக் கடையிட்டார்கள் நான் மெளனியாக இருந்தேன், நான் நீதியமைச்சராக இருந்தும் என் மக்களுக்கு நீதி வழங்க முடியாதவனாக இருந்தேன், அதற்காக வெட்கப்படுகின்றேன் என்று சொன்னாரே தவிர அவர் எப்போதுமே அந்த அரசாங்கத்தில் ஒட்டி இருப்பதில் வெட்கப்பட்டதாக தெரியவில்லை.

முஸ்லீம்களின் அரசியல் நடவடிக்கை தெரிவு இணக்க அரசியல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆனால் இந்த தலைவர் செய்த அரசியல் இணக்க அரசியல் என்ற போர்வையில் வெறும் சரணாகதி அரசியல். அதை மறைக்க, தான் வீரமுள்ள தலைவன் என்பதை காட்ட கடந்த தேர்தல் காலத்தில் சக கட்சியையும் அதன் தலைமையையும் அழித்தே தீர்வேன் என்று மேடைகளில் முழக்கமிட்ட அருவருப்பான விடயங்களால்  தனக்கும், குர்-ஆன், ஹதீஸ் அடிப்படை கொண்ட யாப்புக்கும்(?), தான் சார்ந்த சமூகத்துக்கும் இழிவை ஏற்படுத்தியதை தவிர இவர் இன்னும் தான் மக்களின்  நம்பிக்கைகுறிய ஒரு தலைவன் என்பதையோ அல்லது தான் எல்லா சந்தர்பத்திலும் சமூகத்துக்காகவே முன் நிற்பேன் என்பதையோ இன்னும் நிரூபிக்கவில்லை, ஆகவே இனிமேல் இவரால் அதை நிரூபிக்கவும் முடியாது.

அதேநேரத்தில் என்றுமே தமது இனத்தின் அரசியல் குறிக்கோளில் உறுதியாக இருக்கும் எதிர்கட்சி தலவர் சம்பந்தன் அவர்கள், இந்த பாலமுனை சந்தர்ப்பத்தையும் சரியாக பாவித்து தமது பூர்வீக பூமியாக அவர்கள் கருதும் வடக்கிலும் கிழக்கிலும் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்பதை கோடிட்டுக் காட்டினார். அதாவது 40 வருடங்களுக்கு முன் தம் இனத்தின் அரசியல் அபிலாசை என்ன என்றார்களோ, அதையே இன்றும் தமது இறுதி அபிலாசையாக முன்வைத்தது அந்த இனத்தின் அரசியல் தேவையில் அவர்களின் தலைவர்களுக்கு இருக்கும் பற்றுதியை வெளிக்காட்ட முஸ்லீம் காங்கிரஸ் தேசிய மாநாடு(?) உதவியுள்ளது.

ஆனால் 1989ல் “முஸ்லீம்களின் உரிமை” களை வென்றெடுக்கவென சட்டபூர்வமாக அரசிலில் பிரவேசித்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கடந்த சுமார்  27 வருடங்களாக “உரிமை”, “உரிமை” என்று கூப்பாடு போடுகின்றதே தவிர அந்த “உரிமை” என்னவென்று இன்னும் சரியாக வரையறுக்கவில்லை. ஆகவேதான் அண்மையில் கூட  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மகன் “தன் தந்தை முஸ்லீம்களுக்கான தனியான ஆட்சி அலகை கோரியது, தமிழர்களுக்கு “தனி நாடு” கிடைதால் என்ற நிபந்தையின் அடிப்படையில்” என்ற விடயத்தை கூறிச்சென்றார், ஆகவே இன்றைய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் (ஒரு பிரிவினரின்) கோரிக்கையான முஸ்லீம் கரையோர மாகாணம்” என்பது சாதியமற்றது என்று காலங்கடந்த (ஒரு புதிய) கண்டுபிடிப்பை தேசிய மாநாட்டுகாரருக்கு ஞாபகப்படுத்தியுள்ளார்.

இல்லை,  இந்த கரையோர மாகாணம் தான் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை பிரச்சினை என்றால், அது ஏன் இந்த தேசிய மாநாட்டில்(?) மக்கள் முன்வைக்கப்படவில்லை?  இதற்கு தலைவரிடம் ஒரு பதிலும், கட்சி செயலாளரிடம் ஒரு பதிலும், கட்சி தவிசாளரிடம் ஒரு பதிலும், கிழக்கு போராளி(?)களிடம் ஒரு பதிலும், கிழக்கை தவிர்ந்த போராளி(?)களிடம் இன்னொரு பதிலுமாக இருக்கும் சூழ் நிலையை சிக்கலாக்குவதால் பொதுமக்கள் வடக்கு வடக்காகவும், கிழக்கு கிழக்குமாக இருக்கட்டும் இதை கிழித்து கரையோர மாகாணம் அதுவும் “முஸ்லீம் மாகாணம்” என்ற பெயர் அட்டையுடன் புதிதாக ஒன்றும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

அதாவது இணக்க அரசியலில் முஸ்லீம்கள் பற்றுதியாக இருக்கின்றனர்.  இதைவிடவும் ஏதோ ஒரு காலத்தில் வடக்கு- கிழக்கு இணைவு என்ற பிரச்சினை வரும் போது ஒரு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் இரு மாகாண மக்களும் விரும்பினால் அத்தகைய இணைவுக்கும் இணங்க தயாராகவுள்ளனர் பொதுமக்கள். இது இணக்க அரசியலின் அடுத்த கட்டம்.

ஒரு பல்கலாச்சார சூழலில் எல்லாவற்றுக்கும் “முஸ்லீம் ” என்ற அடைமொழி கொடுப்பது  அரசியல் ரீதியில் எவ்வளவு பின்னடைவுகளை கொண்டுவரும் என்பதை இத்தனை அனுபவங்களுக்குப் பின்பும் உணராவிட்டால் அல்லது “முஸ்லீம்” என்ற ஒரு பதத்தை தேவையோ, தேவையில்லையோ கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாவிப்பது நமது சமய கடமை என்ற நிலைப்பாட்டில் இருக்கும், இக்கட்சியின் தொண்டர்கள் இதை சரியாக விளங்கிக் கொள்ளாதவரை இக்கட்சி இப்படியான கூட்டங்களை கூட்டி அதற்கு பல்வகை பெயர்கள் சூட்டி, தனிப்பட்டவர்களின் அரசியல் இருப்பை பாதுகாத்து கொள்ள முயற்சிப்பதை தொடர்ந்தும் நடத்திக் கொண்டே இருக்கும்.

முஸ்லீம் மக்களின் முதுகில் சவாரி செய்து நடத்தப்படும் இந்த அரசியல் மாதிரியை கட்சி தொண்டர்கள்  தடுக்காவிட்டால் சிவில் அமைப்புக்கள் முன்வந்து இப்படியான அரசியல் துஸ்பிரயோகங்களை மக்களுக்கு அம்பலப்படுத்தவேண்டும். ஆனால் நம் சமூகத்தில் எல்லாம் எதிர்மாறாக நடைபெறுகின்றது போல்தான் தெரிகின்றது. காரணம் சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்களின் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட  “தேசிய சூரா சபை” இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்களுக்கு அறிவூட்டுவதாக இல்லை.

தமது அமைப்பு சமூக பிரச்சினைகளுக்காக அமைக்கப்பட்டதால் அரசியல் பிரச்சினையில் தலையிட முடியாது என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை. அரசியல் பிரச்சினை சமூகத்தின் பிரச்சினையின் ஒரு அங்கம் என்பது, ஏன் அவர்களுக்கு புரியாமல் இருகின்றது. அல்லது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் “குர்-ஆன்”, “ஹதீஸ்” மூலங்களைக் கொண்ட யாப்பை கொண்டுள்ளது,  தாமும் தம் அமைப்பை “இஸ்லாம்” மயப்படுத்த “சூரா சபை” என்ற பெயர் சூட்டியுள்ளோம் ஆகவே இரண்டு முஸ்லீம்(?) அமைப்புக்கள் ஒன்றை ஒன்று குறை கூற முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்களோ என்னவோ?

இந்த புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த பிறகு அனைத்து முஸ்லீம் பாரளுமன்ற உறுப்பினருக்குமான ஒரு “சமய” விழிப்புணர்வு கூட்டம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவால் கூட்டப்பட்டது, அங்கு இந்த தலைவர்களுக்கு  அந்த உலமா(?)க்கள் என்ன போதித்தார்கள்?  அதே உலமாக்கள் ஏன் இந்த பாலமுனை களியாட்ட நிகழ்வு பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை? இந்த உலமாக்கள் தங்களின் சமூகம் நோக்கிய கடமை என்ன என்பதை எந்த சந்தர்பங்களில் எப்படி தீர்மானிக்கின்றார்கள்? எல்லாமே இருட்டறைக்குள் நடைபெறும் விடயங்களாகவே இருக்கின்றன.

ஆக, இந்த முக்கூட்டு, அதாவது முஸ்லீம் காங்கிரஸ், சூரா சபை, மத ஸ்தாபனங்கள் எல்லாம் ஒரு வகையான புரிதலுடன் பொதுமக்களை ஏமாற்றும் அமைப்புக்கள் என்பது மாத்திரம், மேலும் மேலும் நிரூபனமாகிவரும் விடயமாக உள்ளது. முஸ்லீம்களின் அரசியல் என்பது இணக்க அரசியல் மாதிரியை தவிர வேறு எதையும் தம் தேர்வாகக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளதால், தமிழர்களின் எதிர்ப்பரசியலில் கற்றுக் கொள்ள ஆயிரம் விடயங்கள் தெளிவாக இருப்பதால், இந்த “முஸ்லீம்” அடையாளத்துடன் சரணாகதி அரசியலில் வீழ்ந்துவிடாமல், நாம் ஸ்ரீலங்காவின் சக பிரஜைகள் என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் நம் அரசியல் பங்களிப்பை நம் நாட்டுக்காவும் நம் மக்களுக்காகவும் செய்யவேண்டுமென்றால் பாலமுனை போன்ற களியாட்டங்கள் எமக்கு இனி தேவையில்லை.

அதை நடத்தி முடித்த கட்சியும் கூட நமக்கு தேவையில்லை. காரணம் அக்கட்சியால் பொதுமக்களுக்கு அரசியல் விமோசனம் இல்லை. ஆகவே நாம் தேசிய கட்சிகளில் இணைவோம், நாட்டின் எல்லாருக்குமான பொதுக் கட்சிகளில் இணைவோம். நாடின் பிரச்சினைகளை நாட்டின் பிரசினைகளாக, அந்நாட்டின் பிரஜைகளின் பிரச்சினையாக பார்ப்போம். பிரச்சினைகளுக்கும் “சமய” சாயம் பூசி புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.

முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார். 
SHARE