தொடர் தோல்விகளால் துவண்டு வந்த மும்பை அணி, துடுப்பாட்டத்தையும், பந்து வீச்சையும் சரிசெய்து வெற்றிப்படியை நோக்கி பயணம் செய்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ’பிளே-ஆப்’ சுற்றுக்கு செல்ல ராஜஸ்தான் அணிக்கு தான் அதிக வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த விதியையும் மாற்றி எழுதியது மும்பை.
ராஜஸ்தான் றொயல்ஸ் அணியுடனான வாழ்வா சாவா போட்டியில் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்றதோடு, ’பிளே –ஆப்’ சுற்றுக்குள்ளும் நுழைந்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் இந்த போட்டி புதிய வரலாற்றை எழுதி விட்டது.
மும்பை அணி தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை 14.3 ஓவர்களில் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. ஒரு பந்து தவறினாலும் கூட மும்பை வெளியேறிவிடும்.
14.3 ஓவரின்போது இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாகி விட்டன. இதனால் மும்பை ’பிளே-ஆப்’ பிரிவுக்குத் தகுதி பெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தால் மும்பை அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் என்று நடுவர்கள் அறிவித்தனர். கடைசி நேரத்தில் தரே சிக்சர் அடித்து ’பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்தார்.
இதுவரை எந்த ஒரு டி 20 போட்டியிலும் 14.4 ஓவர்களில் 195 ஓட்டங்கள் எடுக்கப்பட்டதில்லை. அந்த வகையில் இது ஒரு புதிய சாதனையாக பதிவாகி விட்டது