வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?

549

 

வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தற்போது போரற்ற சூழ்நிலையில் ஏ9 உடனான சீரான போக்குவரத்து ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதும் போன்ற பத்து நிபந்தனைகளை சொன்னாராம். தமிழர்களின் அன்றாட வாழ்வாதார உரிமைகளையே கேட்டு பெறவேண்டிய தேவை எழுந்துள்ளதை மறந்த அமைச்சர்ளும் அவரைப் போன்றவர்களும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பார்களா என்பதை மீளவும் இன்றைய நிலையில் நாம் சிந்தித்துபார்க்கவேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மைதானத்திற்கு வெளிச்சமூட்ட மின்சாரம் வழங்கப்பட்டால் கூட அதனை ஆரம்பித்துவைக்கவும் டக்ளஸ்தான் செல்கின்றார் என்ற நிலையில் மீளவும் சில விடயங்களை நினைவூட்டுவது பொருத்தமாகவிருக்கும் என கருதுகின்றோம்.

ஈழவிடுதலை என்ற கொள்கையுடன் போராட புறப்பட்டவரும் இன்று சிங்கள தேசத்தின் இனவாத அரசியலில் சரணாகதி அடைந்து தனது கொள்கையை அவர்களிடம் அடகுவைத்துள்ள “பெருந்தகையுமான” ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மாவீரர் தினம் தொடர்பாக விடுத்த அறிக்கையில், இது கொலைகாரர்களின் தினம் என்று கூறி தனது அரசியல் கொள்கையில் ஆத்ம திருப்தி கண்டுள்ளார்.

உண்மையில் டக்ளஸ் தேவானந்தா போன்ற “தமிழ்பேசும் சிங்கள அரசியல்வாதிகளின்” வழித்தடம் என்ன? இவர்களின் எதிர்காலம் நோக்கம்தான் என்ன?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரகாரம் தனித்தமிழீழமே தமிழ்மக்களுக்கான அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என தமிழ்மக்கள் 70 களில் வாக்களித்தனர். அதன் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் முனைப்புப்பெற்றது. அந்தகாலப்பகுதியில் பல விடுதலை இயக்கங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு ஆயுதப்போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர்.

ஆரம்பத்தில் தமிழீழம் என்ற கொள்கைக்காக ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பிலிருந்து போராடிய அவர், இந்தியாவிலிருந்த காலப்பகுதியில் தனிமனித சச்சரவிற்காக துப்பாக்கி பிரயோகம் செய்ததால் இந்தியத்தமிழ் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைமை இவரை தமது அமைப்பிலிருந்து நீக்கியது. கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், புலனாய்வு முகவர்களினுடாக சிறிலங்காவின் முன்னாள் ஐனாதிபதி பிரேமதாசாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டதன் பேரில் ஐனாதிபதி பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியப்புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் விடுவிக்கப்பட்டு (தற்போதும் இந்தியச்சட்டத்தின் பிரகாரம் தேடப்படும் ஒருநபர்) இரகசியமாக இலங்கை வந்து ஈ.பி.டி.பி. என்ற இயக்கத்தை ஸ்தாபித்து அதன் செயலாளர் நாயகமாகினார்.

இலங்கை அரசு இவரை விடுதலைப்புலிகளிற்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் செயற்பாடுகளிற்கு பயன்படுத்தியது. இவரது ஆரம்ப செயற்பாடானது யாழ்குடாநாட்டின் தீவகத்திலிந்து ஆரம்பிக்கப்பட்டது. தீவகத்தில் இராணுவத்தின் துணைக்குழுவாக செயற்பட்டு, பல தமிழ் இளைஞர்களை கொன்றொழிக்க, கைதுசெய்யப்பட்ட காரணமாக இருந்தவர் இவர். பல தமிழ் பெண்களை இராணுவத்தின் பாலியல் தேவைகளிற்காக கடத்திக்கொடுத்த பெருமைகளைப் பெற்றவராவர். பின்னர், தமிழ் மக்களை மிரட்டி பிரதிநிதித்துவம் பெற்றார். சிங்கள அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு ஆதரவாக இருக்கும் தமிழ்மக்கள் பிரதிநிதியாக சர்வதேசத்திற்கு தன்னை காட்டி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலியாக செயற்பட்டுவந்தவர் இவராவார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய “கொலை அரசியல்”

ஆரம்பத்தில் தீவகத்திலிருந்து செயற்பட்ட இவர், 1996 காலப்பகுதியில் யாழ்குடாநாடு சிங்களப்படைகளிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் குடாநாட்டில் தனது காலைப்பதித்தார். 1996 ம் ஆண்டு தொடக்கம் 2002 வரை இவரது கட்சியினர் மேற்கொண்ட அடாவத்தனங்கள் சொல்லி மாளாதவை. குறிப்பாக யாழ்மக்களின் துயரங்களை வெளிப்படுத்திய யாழ் பி.பி.சி செய்தியாளர் நிமலராஐன் படுகொலை, தினமுரசு பத்திரிக்கை ஆசிரியர் அற்புதனை கொலைசெய்ததனுடாக தமிழ்மக்களின் அவலங்களை சாவதேச அளவில் வெளிப்படுத்தி சிங்கள அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்தவர். இவர் மேற்கொண்ட தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டிற்கு உதாரணமாக இது போன்ற பல சம்பவங்களை எடுத்துக்கூறலாம்;.

தென்னிலங்கைச் சிங்களத்தின் வாழ்வரசியல் அடிமையான இவர் தமிழின அடையாளத்துடன் மக்களை மிரட்டி தனது குறுகிய சுயநல அரசியல் நோக்கத்திற்காக தமிழ் மக்களை சொல்லொணாத் துயரங்களிற்கு உள்ளாக்கியதில் முக்கியமானவர். தமிழர்களைக் கொண்டே தமிழ்மக்களை அழிக்க சிங்களம் பயன்படுத்திய முக்கிய துரும்புச்சீட்டுத்தான் இந்த டக்ளஸ் தேவானந்தா.

ஆரம்பத்தில் தமிழீழம் என்ற கோரிக்கையுடன் புறப்பட்ட அவர் பின்னர் அதிலிருந்து விலகி “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” (அதிகாரமற்ற) என்ற கோசத்துடன் வலம்வந்தார். குறிப்பாக 2002 ஏற்பட்ட சமாதான நடவடிக்கையை கடுமையாக சாடிய இவர் இலங்கையில் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் தமிழ் மக்களிற்கு பொருத்தமான தீர்வு எடுக்கலாம் என தென்னிலங்கை சக்திகளிற்கு ஊதுகுழலாக இருந்து கருத்துத் தெரிவித்து வந்தவர்.

ஆட்சியிலுள்ளவர்களை சார்ந்து நீண்டகாலம் தனது அரசியல் இருப்பை நகர்த்திக்கொண்டு செல்வதற்காக தமிழ் மக்களின் அரசியல் ஆபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் இவர்களைப்போன்ற தமிழ் ஒட்டுண்ணிகளால் அரசியல் பலமற்றிருக்கும் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப்போகின்றது.

விடுதலைப்புலிகளின் தமிழீழக்கொள்கையை விமர்சித்து வந்த இவர், அரசியல் விடுதலைக்கான மூலோபாயத்தைக் கொண்ட விடுதலைப்புலிகளை சிங்களனுடன் சேர்ந்து அழித்துவிட்டு, சிங்கள ஆளும் வர்க்கத்துடன் இணைந்து தமிழ்மக்களிற்கு சிறந்த அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்ற சரணாகதி அடிப்படையிலேயே தற்போது அரசியலை நடத்திவருகின்றார்.

தனது கட்சியையே அடகுவைத்த “திருப்பணி”

டக்ளஸ்சின் சுயநல அரசியல் சுகபோக வாழ்க்கைக்காக நீண்டகாலமாக பல லட்சம் மக்களைப்பறிகொடுத்து, சொல்லெணாத்துன்பங்களைத்தாங்கிய மக்கள் சமூகத்தின் வேதனைகளை சுயமூலதனமாக்கி இறுதியில், தமிழ்மக்களை தென்னிலங்கைச் சிங்களத்தின் அடிமையாக்கி தமிழனின் அரசியல் அபிலாசைகளை படுகுழிக்குள் புதைத்துவிடும் நோக்குடன் இறுதி நகர்வுகளையும் செய்யத்தெடங்கிவிட்டார். தனது கட்சிச்சின்னத்தில் போட்டி போட முடியாத இயலாமை இவரின் தற்போதைய முக்கிய அரசியல் அடைவு.
விடுதலைப்புலிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் களங்கம் ஏற்படுத்த சிங்களத்துடன் செயற்பட்ட இவரால் சிறையகதி முகாமிற்குள் சென்று மக்களைக்கூட பார்க்க முடியவில்லை. வடக்கில் பாரிய சிங்களக்குடியேற்றங்கள் பௌத்தமத அடையாளங்களை தமிழர்பகுதிக்குள் அமைத்து தமிழர்தாயகம் என்ற கோட்பாட்டை சிதைக்கும் நகர்வை தடுக்கமுடியாமை, தேர்தலில் தமிழ் மக்களை மிரட்டி அல்லது கள்ள வாக்கு போட்டு தமிழ் மக்களின் தனித்த அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை சிங்களத்தின் காலில் போட முற்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன செய்தாலும் தனது கொள்கையில் வழுவாது கொள்கைக்காக மட்டும் போராடி தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரைத்தவிர வேறு தலைவர்கள் யாராவது கொள்கையில் உறுதியாக விலைபோகாது நின்று செயற்பட்டார்களா? பிரபாகரனை அழிப்பதற்கு துணைபோன தமிழின விரோத சக்திகள் தமிழ் மக்களுக்காக என உயிரைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு களமமைத்து செயற்படுவார்களா?

இலங்கைத்தீவில் தமிழ்மக்களிற்கான தீர்வை பெறுவதில் பிரபாகரன் தான் இடைஞ்சல் என விமர்சித்த, செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் புலமையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் தற்போது விடுதலைப்புலிகள் வலுவிழந்த சூழலில் தமிழ்மக்களிற்கு என்ன செய்யப்போகின்றார்கள்? பிரபாகரனை வைத்து அரசியல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த – இருப்பை தக்கவைத்த – அனைவரும் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?

விடுதலைப்புலிகள் இல்லாத இலங்கையில் தமிழ் மக்களிற்கான எந்த தீர்வும் கிடைக்காது என்பதை தமிழ்மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதேவேளை சிங்களத்துடன் சேர்ந்து ஐனநாயக வழியில் தமிழ்மக்களிற்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என சிங்களத்திடம் ஒட்டியிருந்தவர்கள் தமது மூலோபாயத்தினுடாக தமிழ் மக்களை சிங்களத்திடம் அடிமைப்படுத்துதலை தவிர எதையும் செய்யப்போதில்லை. அதற்கு டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் எந்த விதிவிலக்குமில்லை.

இவ்வளவு காலமும் சிங்களத்துடன் ஒட்டியிருந்து அவர்களின் அரசியலேயே புரியாதவர்கள் தமிழ்மக்களின் அரசியலையா புரிந்துகொள்ளப்போகிறார்கள்?

நன்றி: ஈழநேஷன்

SHARE