வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன்

230

 வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன் எதிர்வரும் 23-10-2016 தேக்கவத்தையில் அடிக்கல் நாட்டு விழா

 

 வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது.

பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு மீள்குடியேற்ற செயலணி என அது நீண்டு கொண்டே செல்கிறது.

ஆட்சி மாற்றத்தின் பின் அமைதியான சூழல், அச்சமின்றி வாழக்கூடிய நிலமை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி என்பது மந்தமாகவே உள்ளது. அதிலும் வடக்கின் நிலை இன்னும் மோசம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் மத்திய மற்றும் மகாண அரசுகளின் கயிறு இழுத்தல் போட்டிக்குள் சிக்கியுள்ளது வடக்கின் பொருளாதார மத்திய நிலைய விவகாரம். இது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும், தமிழ் மக்களுக்குள்ளும் குத்துவெட்டுக்களையும் உருவாக்கியுள்ளது.

2010ம் ஆண்டு வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான றிசாட் பதியுதீன் மற்றும் வடமாகாண முன்னாள் ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிபர், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என 82 பேரின் பங்கு பற்றுதலுடன் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஓமந்தைப் பகுதியில் ஏக்கர் காணியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு செய்யப்படாததால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கான ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைக்க 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இன்று 7 மாதங்கள் கடந்த நிலையில் கூட அதனை எங்கு அமைப்பது என்ற இழுபறி முடிந்தபாடில்லை. மக்கள் நலன்களையும், அவர்களது விருப்பங்களையும் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் திட்டங்கள் வெற்றியளித்தாக வரலாறு இல்லை.

கடந்த அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பாந்தோட்டை விமான நிலையம் தொடக்கம் சில உள்ளூர் வீதிகள் வரை பல சான்றுகள் கண்முண்னே உள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தக் கூடியதும், தென்னிலங்கை மற்றும் வடபகுதி உற்பத்தியாளர்களை இணைக்கக் கூடிய ஒரு உறவுப்பாலமாகவும், பொருளாதார மேம்பாட்டிற்கான தளமாகவும் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பயன்படுத்த வேண்டும். அதுவே பயன்னுள்ளது.

அவ்வாறான நிலையில் அதனை பொருத்தமான இடத்தில் அமைப்பது கட்டாயமானதும் கூட. வடக்கு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வடக்கு மக்களின் ஆதரவுடன் இயங்குகின்ற வடமாகாண சபை தொடர்பிலும் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளின் விருப்பம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் அவர்களே வடக்கு மக்களின் குரல்கள். ஆனால் அதை விடுத்து தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழான திணிப்பாகவே கருத வாய்ப்புள்ளது. அவ்வாறான ஒரு நிலையையே வடக்கு பொருளாதார மத்திய நிலைய விவகாரமும் உருவாக்கியுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை நகரில் இருந்து 2- 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் ஆரம்பத்தில் கூறியிருந்தார். அதனடிப்படையில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்குரிய காணியை விடுவிக்குமாறும் மாகாணசபையிடம் கோரப்பட்டிருந்தது.

ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் விவசாய பண்ணைக் காணியை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததுடன், பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் எனவும் கோரினர்.

விவசாய மக்களின் விருப்பம் கூட அதுவே. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க கூடாது என்பதில் இன்று வரை தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் கூட இந்த விடயத்தை சரியாக கையாளவில்லை. அவர்கள் கூட இரண்டுபட்டு நிற்பதையே அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இருக்கின்ற போதும் அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவு சார் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

இந்நநிலையில் மத்திய அரசாங்கத்துடன் வடக்கு முதல்வர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் பேசி பொருத்தமான இடத்தினை தெரிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை சரியான முறையில் செய்ய தவறியதன் விளைவே இன்று தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த பொருளாதார மத்திய நிலைய நிதியை இரண்டாக பிரித்து இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாங்குளத்தில் கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையமும், வவுனியா- மதகுவைத்த குளத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான பொருளாதார மத்திய நிலையமும் அமைக்க உத்தேசித்துள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்படும் 200 மில்லியன் ரூபாய் என்பது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெறுமதியானது. அதனை வீணாக செலவு செய்ய அனுமதிக்க கூடாது. பொருத்தமான திட்டத்திற்காக சரியாக பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறான நிலையில் இரண்டு பொருளாதார மத்தியநிலையம் என்பது சாத்தியமானதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

முதலாவதாக கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்தில் அமைப்பது என்பது எந்தவகையில் என்பது புரியவில்லை. வடக்கைப் பொறுத்தவரை தற்போதும் கடல் உணவுகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. கடற்கரைகளுக்கே செல்லும் கூலர் வாகனங்களும், சம்மாட்டிகளும் கடல் உணவுகளை கொள்வனவு செய்து அதனை தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதனால் வடக்கின் உள்ளூர் சந்தைகளுக்கு வருகின்ற மீன்கள் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கடல் உணவுக்கான பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை மாங்குளத்தில் அமைப்பதால் அங்கு கடல் உணவுப் பொருட்கள் செல்லுமா…?, கடற்கரையில் இருந்து சாதாரண மீனவர்கள் எவ்வாறு மீன்களை கொண்டு செல்வது..? என்ற கேள்வி எழுகின்றது.

அதையும் மீறி கடல் உணவுகள் பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்தால் கூட அவை காலையிலேயே வரும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வர்த்தகம் முடிவடைந்து விடும். அதன்பின் அம் மையம் மூடியே இருக்கப்போகின்றது. அதற்கு தற்போதைய நிலையில் நூறு கோடியை ஒதுக்குவது பொருத்தமானதா..?

இந்தநிலையில், மாங்குளத்தில் கடல்உணவுக்கான பொருளாதார மத்திய நிலையம் என்பது வடக்கு நோக்கி ஒரு மையத்தை அமைத்ததாக காட்டுவதற்கான ஒரு பொறிமுறையாக மட்டுமே இருக்கப் போகின்றது. ஆனால் எந்த நன்மைகளையும் பெற்றுவிட முடியாது.

இரண்டாவதாக விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மதவு வைத்தகுளத்தில் அமைக்க அரசாங்கம் இணங்கியுள்ளது. தாண்டிக்குளத்தை வடக்கு முதலமைச்சர் தரப்பு எதிர்க்க, ஓமந்தையை மத்திய அமைச்சர்களான றிசாட், ஹரிசன், வடக்கு அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் எதிர்க்க தற்போது வவுனியா மதவுவைத்தகுளம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் இருந்து 2-3 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த காணி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் காணியை வடக்கு முதல்வர் கூறிய போது அதனை குத்தகைக்கு கொடுத்ததால் பெற முடியாது என மத்திய அமைச்சர் ஒருவரால் கூறப்பட்டும் இருந்தது. தற்போது அவரே அந்த காணியை விடுவித்து தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆக இங்கு தாம் நினைப்பதையே செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசாங்கம் இருப்பதையே இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

மதவு வைத்த குளத்தில் அமைப்பது என்பது கூட நீண்டகால விஸ்தரிப்புக்கும், வாகன தரிப்பிட மற்றும் திண்ம திரவ கழிவுகளை வெளியேற்றுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியதாகவே சனச்செறிவு மிக்க பகுதியாகவுள்ளது.

விவசாய பெருட்களைப் பொறுத்தவரை வடக்கு மக்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் அது அமைக்கப்படுமாக இருந்தால் மாங்குளமும், வவுனியாவை மையப்படுத்தியதாக அமைப்பதாக இருந்தால் ஓமந்தையுமே பொருத்தமானது.

ஆனால் அதை விடுத்து பெரும்பான்மையான வடக்கு மக்களின் விருப்பதற்கு மாறாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது வேடிக்கையானதே.

வடமாகாணசபை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, பிரதமர் தலையிலான அமைச்சரவை, ஜனாதிபதி என பலரும் இந்த விடயத்தில் தலையிட்டும் கூட ஒரு நிலையான முடிவுக்கு வந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்க முடியாதநிலையே இன்று வரை இருக்கிறது.

இந்நிலையில், சாதாரண ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கே இவ்வளவு முரண்பாடு, குழப்பங்கள் என்கின்ற போது எவ்வாறு இந்தநாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும், நல்லாட்சியையும் ஏற்படுத்துவது என்ற கேள்வி தவிர்க்க முடியாததே.

வவுனியாவின் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பல்டி அடிப்பது ஏன்?

கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதில் குறிப்பிடப்பட்ட ஒருசிலர் தற்பொழுது வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகச் செயற்படுவதில் பல அரசியல் பின்னணிகள் இருக்கின்றது. மான்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம்.

24.04.2016.
வவுனியா.

மான்புமிகு முதலமைச்சர் அவர்கட்கு,
வடமாகாணம்.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கான

காணி ஒதுக்கீடு தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் இன்று 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வன்னித்தேர்தல் மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்படி திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபா 200 மில்லியன் வேறு மாவட்டத்திற்குச் செல்லாது இருப்பது தொடர்பிலும் மிகுந்த கரிசணையுடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ சுகாதார அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மத்திய கிராமிய பொருளாதார அலுவலக அமைச்சர் கௌரவ.ஹரிசன் அது தொடர்பில் கலந்துரையாடியபோது அமைச்சின் இடத்தெரிவு கொள்கைக்கு அமைய ஓமந்தை மாணிக்கவளவினில் இந்த இடத்தை நடைமுறைப்படுத்த மறுப்புத் தெரிவித்ததாகக் கோரப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக பின்வரும் தீர்மானங்கள் எடுத்துள்ளனர்.

1. மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் மத்திய அமைச்சர் கௌரவ ஹரிசன் அவர்களுடன் கௌரவ முதலமைச்சர் கலந்துரையாடி ஓமந்தை மாணிக்கவளவுப் பகுதியில் மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்தல்.
2. ஓமந்தையில் அமைப்பதற்கான அனுமதி மத்திய அரசினால் மறுக்கப்படும் இடத்தில் இத்திட்டத்தை வேறு மாவட்டத்திற்கு கைநழுவ விடாதவகையில் வவுனியா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முகமாக தாண்டிக்குளம் அரச பண்ணையில் மேட்டு நிலத்தை மேற்படித் திட்டத்திற்கு வழங்குவதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்குதல். என்ற தீர்மானமே அங்கு எடுக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், இ.சாள்ஸ், திருமதி.சிறிஸ்கந்தராசா, டெலோ அமைப்பு சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், மயில்வாகனம் தியாகராசா, வடமாகாண சபை அமைச்சரான பா.சத்தியலிங்கம், சி.க.கூ சமாசத் தலைவர் நா.சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்தப் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில், ஆரம்பகட்டத்தில் அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களே இதனை வழுவாக முன்னெடுத்தார். அவர்களுடனான நேரடி நேர்காணலின் பொழுது இந்த வர்த்தகமையம் அமைப்பது தொடர்பிலான ஆரம்பத்திலிருந்து முடிவுவரையான பேச்சுக்கள் தொடர்பிலும், இதனுடைய அரசியல் பின்னணி தொடர்பிலும் தன்மீது பல அரசியல் கட்சிகள் சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் என்றும், இவ் பொருளாதார மத்திய மையம் அரசியல் மயமாக்கப்பட்டதன் பின்னணியினாலேயே கட்டிட நிர்மான வேலைகளை செயற்படுத்த முடியாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் தனக்குமிடையில் பல இலத்திரணியல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் செய்திகளைத் திரிபுபடுத்தி இவ் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் அரசியல்வாதிகளை விமர்சிக்கின்றன. பாராளுமன்ற சிறப்புரிமை, மாகாணசபை சிறப்புரிமை சட்டத்திற்கேற்ப இவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்;. இதைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையேயும் இந்த முகவரியற்ற இலத்திரணியல் ஊடகங்கள் தோற்றுவித்துள்ளன. ‘என்னைப் பொறுத்தவரையில் ஹரிசனுடைய தீர்மானங்களுக்கு அமைய ஓமந்தையில் அவர் விருப்பம் தெரிவித்தால் இப்பொருளாதார மத்திய மையத்தை அங்கு அமைக்கலாம். அல்லது அவரது தெரிவு தாண்டிக்குளமாக இருந்தால் அங்கும் அமைக்கலாம். எப்படி அமைக்கப்பட்டாலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கியதாகவே இவ்பொருளாதார மத்திய மையம் அமையப்பெறும். அதில் எனக்கு ஆட்;சேபனையில்லை. என்னை மக்கள் மத்தில் மூன்றாம் தரப்பாக காட்ட பல அரசியல்வாதிகள் விளக்கமின்றி முனைகின்றனர். றிசாட் பதியூனிடம் கோடிக்காணக்காக பணம் கைமாறியதாகக் கூறுகின்றனர். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் தமிழ் மக்களுடைய தேவைகளை இணங்கண்டு அவர்களுடைய விருப்பு, வெறுப்புக்களை இணங்கண்டு செய்திகளை வெளியிடுதல் வேண்டும். நீங்கள் அரசியல்வாதிகள் பின்னால் கொடிபிடித்து ஒருவரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தி செயற்படுவதன் ஊடாக ஊடகத் தர்மத்தினைக் குழிதோன்றிப் புதைக்கின்றீர்கள்.

அரசியல்வாதிகளினுடைய அரசியல் பயணம் என்பது ஐந்து வருடமோ, பத்துவருடமோ அல்லது சுயநல அரசியலை லாபம் கருதி செய்துவிட்டு, அதன் பின் மக்கள் பற்றி சிந்திக்காது, தமது குடும்ப நல அக்கறையுடன் செயற்பட்டு பாராளுமன்றத்திலிருந்தோ, மாகாணசபையிலிருந்தோ ஒதுங்கி நிம்மதியாக வாழ்வார்கள். நான் தொடர்ந்தும் மக்கள் சேவையிலேயே இருந்து வரும் ஒருவன். அதனையே அரசியலுக்கு வருவதற்கு முன்பும் செய்துகொண்டிருந்தேன். அரசியலுக்கு அப்பால் மக்களது விருப்பு வெறுப்பு என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். இவ் பொருளாதாரம் மத்திய மையம் அமைப்பது தொடர்பில் விமர்சனங்களை விட்டுவிட்டு தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து இதற்கான முடிவினை மேற்கொள்ளவேண்டும். வவுனியாவின் எப்பிரதேசத்தில் இவ்வர்த்தகமையம் அமைந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை. இங்கு பொருளாதார மத்திய மையத்தினை அமைப்பதற்கு யாழ் தலைமைகளோ, தென்னிலங்கை அரசியல்வாதிகளோ தலையிடவேண்டிய அவசியமில்லை. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தீர்மானித்து இரண்டு கிலோமீற்றர் சுற்றளவுக்குள் ஒரு இடத்தைத் தெரிவு செய்து கொடுத்திருந்தால் அவ்விடம் சிபார்சு செய்யப்பட்டு அதில் வர்த்தகமையம் அமைப்பதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

வவுனியா பிரதேத்தில் இவ் வர்த்தக மையம் அமையப்பெறாமல் இருப்பதற்கும், வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வர்த்தக அமைப்புக்களும், விவசாய அமைப்புக்களும் தீர்மானங்களை எடுத்து இவ்வர்த்தக மையத்தை ஓமந்தையிலோ, தாண்டிக்குளத்திலோ அமையுங்கள் என்று ஒற்றுமையாகக் கூறமுடியாத நிலையிலுள்ளனர். யாழ் மாவட்ட அரசியல்த் தலைமைகளும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் இதற்குள் மூக்கை நுழைத்து தமது அரசியலை நடத்துகின்றனர். இதற்கு இடமளித்தது வன்னித் தலைமைகளே. அதிகாரபூர்வமான முடிவை ஏன் உங்களால் ஏன் எடுக்கமுடியாது போனது, நீங்கள் அவர்களைவிட அரசியல் அனுபவம் குறைந்தவர்களா? யாழ் அரசியல் தலைமைகளும், தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் வன்னி அரசியலை மட்டம் தட்டுகின்றார்களா? இதற்குள் பல விடயங்கள் மறைந்திருக்கின்றது. அன்று கையெழுத்திட்ட வன்னித் தலைமைகள் அனைத்தும் இன்று வவுனியாவில் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் ஏன் முரண்பட்டு நிற்கின்றார்கள் என்பது மக்களாகிய உங்களுக்குப் புரியும். ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்பது அல்ல இங்கு பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Wiggi2Sathiyalingam-600x338

625-2 economic-zone-vavuniya vv2viki-samsum

 

SHARE