வானவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது ரியோ ஒலிம்பிக்!

279

 

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் அதிகாலை அமர்க்களமாகத் தொடங்கியது. இதனையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் விழாக்கோலம் பூண்டது.

31-வது ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்கியது.

தொடக்க விழா நடைபெற்ற மரக்காணா மைதானத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார்கள். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒலிம்பிக்கில் எப்போதுமே ஜோதி ஏற்றுபவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும். ஆனால் இந்த முறை பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வெளியே கசிந்தது. எனது பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருப்பதால் அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் ஜோதியை ஏற்ற முடியும் என பீலே தெரிவித்திருந்தார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பிரெஞ்சு சாம்பியனான குஸ்டோவ் குரேடன் தீபத்தை ஏந்தி வந்தார். இந்த தீபத்தை பிரேசில் வீரர் வாண்டா லீமா ஏற்றி வைத்தார்.

அதன்பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க, கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றார்கள். இந்திய அணியின் சார்பில் துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியபடியே இந்திய வீரர் வீராங்கனைகளுடன் மைதானத்தை வலம் வந்தார். இந்த அணிவகுப்பில் 10 பேர் கொண்ட அகதிகள் அணியும் கலந்து கொண்டது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பில் கடைசியாக வந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள்.

வீரர்கள் உறுதிமொழி ஏற்றார்கள். தேசிய கீதம் முழங்க ஒலிம்பிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

பிரேசிலின் பிரபல பாப் பாடகர்களான அனிட்டா, கேட்டனோ வெலாஸ்கோ, கில்பெர்ட்டோ கில் ஆகியோர் தங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இதேபோல் பிரேசிலின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பிரேசிலின் பூர்வகுடி மக்களின் நடனம், பிரேசில் வரலாறு போன்றவற்றை நாடக நடனம் மூலமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. தொடக்க விழாவில் 4800 கலைஞர்கள் பங்கேற்றார்கள். தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ டி ஜெனீரோவை அதிர வைத்தன.

SHARE