விச ஊசி விவகாரம் “சுன்னாகத்து ஒயில் நீர்” போல அடிபட்டுப் போய்விடும் அபாயமும் உண்டு.

525

 

இன்றைய நாளில் இலங்கைத் தமிழர்களிடையே குறிப்பாக வடக்கு – கிழக்கு பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் இந்த “விச ஊசி” விவகாரம் . உண்மையில் நடந்தது என்ன என்று மௌனம் கலையும் முன்னாள் போராளிகள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டில் இருக்கின்ற உண்மைத் தன்மைகள் ஒருபுறமிருக்க, இதனால் இப்போதிருக்கின்ற கள நிலைமைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

news_08-08-2016_49ex
மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகப் பூதாகாரப்பட்டுப் போய் இருக்கிறது இந்த “விச ஊசி” விவகாரம் – ஏற்கனவே வாழ்வாதாரத்துக்கான சவால்களுக்கு முகங்கொடுத்து, சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இப்பொழுது புதியதொரு தலையிடியைத் தந்திருக்கிறது இது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் அண்ணளவாக 108 பேர் சடுதியாக உயிரிழந்தமை தொடர்பாக எழுந்த ஐயம், சர்ச்சையாக மாறி, பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அல்லது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஒரு விதமான “ஊசி” ஏற்றப்பட்டதன் விளைவாகவே முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணங்கள் அமைந்துள்ளது என்று குற்றஞ் சாட்டப்படுகிறது.

வாழ்வாதாரத்துக்கு வழியேதும் இன்றி, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட போதெல்லாம் ஏன் என்று கேட்காத இந்தச் சமூகத்தில் இப்போது இந்த “விச ஊசி” விவகாரம் பேசு பொருளாகி இருக்கின்றது.  யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் வரைக்கும்  அவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்கள் இன்று அவர்களைப் பற்றி நாடாளுமன்றம்  வரை பேசுகின்றனர். அதில்  பொது நலம் இல்லை. தத்தம் சுய நலங்களே மிஞ்சி நின்றன.


இந்த விச ஊசி விவகாரம் பற்றி வாய் கிழியக் கத்துகின்ற எவரொரு அரசியல்வாதியாயினும் இதனைச் சர்வதேச மட்டத்துக்கு முறைப்பாடாக எடுத்துச் சென்று போர்க்குற்ற விசாரணைகளுக்கான ஆதாரங்களில் ஒன்றாகச் சமர்ப்பிக்க முன்வரவில்லையே? அது ஏன்?

அவர்கள் அனைவரும் சர்வதேச மருத்துவப் பரிசோதனை தேவை என்று பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அறிக்கை விட்டு – ஒப்புக்குக் கண்ணீர் விட்டு “ஆடு நனையுதென” அழும் ஓநாய்களே தவிர சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்று தங்கள் பெயரால் முறைப்பாட்டைப் பதிவு செய்து இலங்கையின் “நல்லாட்சியை”ப் பகைத்துக் கொள்ளும் திரணியற்றவர்கள்

முன்னாள் புலிகள் என்ற காரணத்துக்காக முன்னுக்கும், பின்னுக்கும் தொடர்கின்ற புலனாய்வு அழுத்தங்களும், வேலை தேடிப் போகும் இடமெங்கும் “புலி முத்திரை” குத்தி திறமை மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் வந்த போதெல்லாம் அவர்களோடு கூடவே இருந்த மன ஓர்மம் சுய தொழில் செய்து சொந்தக் காலில் நிற்கச் செய்தது. குடும்பத் தலைவனைப் பறிகொடுத்த பல இளம் பெண்கள் கூட எதையும் தாங்கும் இதயத்துடன் மீள உயிர்ப்புப் பெற்று மறு வாழ்வு வாழத் தலைப்பட்டனர் : வாழ்ந்தும் காட்டினர்.
ஆனால் இப்போது எழுந்துள்ள இந்த விச ஊசி விவகாரம் மீண்டும் அவர்களை துன்பத்துக்குள் தள்ளி இருக்கின்றது. தடுப்பில் இருந்த போது தங்களுக்கு ஏதோ ஒரு ஊசி நோயெதிர்ப்புத் தடுப்பூசி என்ற தோறணையில் ஏற்றப்பட்டதை நினைவு கூரும் முன்னாள் போரளிகள் பலருக்கு அவ்வாறு ஏற்றப்பட்டது “மெல்லக் கொல்லும் விச ஊசி” யாக இருக்கலாமோ என்ற அச்சம் இப்போது தோன்றியிருக்கிறது. அதனால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் வேறெந்தக் காரணமுமின்றி அவர்களை மெல்லக் கொல்லத் தலைப்படுகின்றது.

உண்மையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒன்றாகக் கூடிப் பராமரிக்கப்படுகின்ற பகுதிகளில் – ஆயிரக் கணக்கானவர்கள் ஒன்றாக வாழ்கின்ற ஓரிடத்தில் தொற்று நோய் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக பொதுவானதொரு மருத்துவப் பொறிமுறை கையாளப்பட்டிருந்தாலும் இப்போது எழுந்துள்ள அந்த சர்ச்சையினால் சமூகத்தில் முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் – புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பதனால் அவர்கள் ஒருவித “பச்சாதாபத்துடனே” பார்க்கப்படுகிறார்கள்.  இவர்களில் இருந்து திருமணத்துக்குப் பெண் கொடுக்கவோ மாப்பிள்ளை எடுக்கவோ தயங்குகின்ற நிலை கூடத் தோன்றியிருக்கின்றது. இதனால் முன்னாள் போராளிகள் என்ற சமூக அடையாளம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது.


புனர்வாழ்வு முகாம்களில் – புனர்வாழ்வு பெற்ற அனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஆகக் குறைந்தது ஒரு தடவையாவது இந்த ஊசி ஏற்றப்பட்டிருக்கின்றது. ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூட இந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பிடிபட்ட  அல்லது சரணடைந்தவுடன் தடுத்து வைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாமில் ஏற்கனவே ஊசி ஏற்றப்பட்ட ஒரு சிலர் மேலதிக விசாரணைகளுக்காக வெவ்வேறு முகாம்களுக்கும், சிறைகளுக்கும் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்தந்த இடங்களில் ஊசி மருந்து தவறாமல் ஏற்றப்பட்டிருக்கிறது.

ஆகவே இது திட்டமிட்டு ஒருவர் கூட மருந்தேற்றப்படாமல் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏற்றப்பட்டிருப்பதனால்  ஒரு நோக்கத்துக்காக ஏற்றப்பட்டது என்பதாக நோக்கத்தான் வேண்டும். அது தவிர கிளர்ச்சியாளர்கள் மற்றும் “குளப்படி காரச்” சிறைக் கைதிகளின் வீரியத்தினைக் குறைப்பதற்காக – காலப் போக்கில் கடும் போக்குடன் அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக சர்வதேச நாடுகள் சிலவற்றில் மிக இரகசியமாக ஓரிரண்டு பேருக்கு இத்தகைய மருந்தேற்றல்கள் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே முன்னாள் போராட்டக்காரர்கள் எவரும் மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்திப் போராடத் தலைப்படா வண்ணம் அவர்களின் வீரியத்தைக் காலப்போக்கில் கரைக்கச் செய்யும் நோக்கோடு இலங்கைப் புனர்வாழ்வு முகாம்களிலும் இவை பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் சர்வதேச நாடுகளில் ஓரிருவருக்குச் செய்கின்ற இந்தப் பொறிமுறையை இங்கு பல்லாயிரக் கணக்கானவர்களுக்குச் செய்யப் போய் விடயம் பூதாகரமானதாகப் போயும் இருக்கலாம்.

வீரியம் குறைப்பதற்காக ஏற்றப்பட்டதாயினும், அவரவர் உடல் வாகுக் கேற்ப அதன் செயற்றிறன் மாறுபட்டதனால் பதினோராயிரம் பேரில் திடீரென மறைந்த 108 முன்னாள் போரளிகளுக்கும் அது மரணத்தைத் தந்திருக்கலாம். அல்லது மெல்ல மெல்ல அத்தனை பேரையும் அழிப்பதற்காகக் கூட ஏற்றப்பட்டிருக்கலாம்.

எது எப்படியிருப்பினும் – இதன் உண்மை நிலை பக்கச் சார்பற்ற, சர்வதேச நிபுணத்துவப் பரிசோதனை ஒன்றின் மூலமே உறுதிப் படுத்தப்படமுடியும்.

இது விடயத்தில் அனைவரதும் கவனமும் செலுத்தப்பட வேண்டும். அனைத்து முன்னாள் போராளிகளின் மருத்துவ செலவுகளையும் ஏற்று அவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ளுதல் வேண்டும். அது தவிர இந்தச் சர்சையினால் மன உளைச்சலுக்கு உள்ளாகிப் போயிருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு உளவளத் துணை ஆலோசனை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியதுடன், அவர்களுக்குத் தொடர்ச்சியான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.  தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய போராளிகளின் கனவுகளை மதித்து மீதமுள்ள முன்னாள் போராளிகளை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை வழங்கி அவர்களும் சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக வாழ்வதற்கு அவர்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர் சமூகத்தில் உள்ளவர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

இது விடயத்தில் இருக்கின்ற உண்மை என்ன என்பது மிக நேர்த்தியான – இதய சுத்தியுடனான தரம் மிக்க மருத்துவப் பரிசோதனை ஒன்றின் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும். அரசியல் சாயங்கலந்த எவரொருவர் எடுக்கின்ற முயற்சியும் வெறுமையாயே முடியும். முன்னாள் போராளிகளை மருத்துவப் பரிசோதனை செய்வதற்கென்று அழைத்து ஒரு முகப்படுத்தும் “போராளிகளின் அரசியல்” முனைப்பு அனைவரும் அறிந்ததொன்று. அதன் மூலம் நன்மை எதுவும் ஏற்படப்போவதில்லை. அது தவிர தமிழ் அரசியல்வாதிகளின் ஒழுங்குபடுத்துதலில் உள்ளுரில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவு “சுன்னாகத்து ஒயில் நீர்” போல அடிபட்டுப் போய்விடும் அபாயமும் உண்டு.

SHARE