விமானத்தை மலையின் மீது மோதிய துணை விமானி  

351
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது கருப்பு பெட்டியில் பல அதிர்ச்சி தகவல்கள் பதிவாகி உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 24ம் திகதி ஜேர்மன் விங்ஸ் விமானம், பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப் மலையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர்.

மீட்புக்குழுவினர் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது, விமானத்தின் முதல் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. அதில் பதிவாகி இருந்த தகவல்களை ஆய்வு செய்ததிலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது துணை விமானி ஆன்டிரிஸ் லுபிட்ஸ்(Andreas Lubitz) விமானம் பறக்கும் உயரத்தை திடீரென்று குறைத்து அதை மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியது தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில், அந்த விமானத்தின் காக்பிட் பகுதியில் உள்ள 2வது கருப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்த விமானத்தை துணை விமானி, தானியங்கி விமானி(Automatic Pilot) மூலம் 100 அடி உயரத்திற்கு மாற்றி அமைத்துள்ளார்.

100 அடி உயரத்திற்கு விமானம் இறங்கியவுடன், திடீரென தானியங்கி விமானி செட்டிங்கை(Setting) மாற்றிய துணை விமானி, விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விமானத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார்.

அதாவது, ஆல்ப்ஸ் மலையில் மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விமானம் மணிக்கு சுமார் 700 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்து சென்று மலையில் அதிபயங்கரமாக மோதி சுக்கு நூறாகியது வரை இரண்டாவது கருப்பு பெட்டியில் தகவல்கள் பதிவாகியுள்ளது.

கடந்த 10 நாட்களாக இரண்டாவது கருப்பு பெட்டியை தேடிய 43 குழுவினரில், நேற்றைய முன் தினம் Alice Coldefy(32) என்ற பெண் பொலிசார் விபத்து நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரே நாளில் அவர் மண்ணில் புதைந்திருந்த இரண்டாவது கருப்பு பெட்டியை கண்டுபிடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

விமானம் தீப்பற்றி எரிந்ததால், இரண்டாவது கருப்பு பெட்டியின் நிறம் கருப்பாக மாறியிருந்தது. ஆனால், அது முழுவதுமாக பழுதாகவில்லை.

இரண்டாவது கருப்பு பெட்டியை உடனடியாக பாரிஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE