விழாக்கோலம் பூண்டது ரியோ

262

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி மரக்காணா மைதானத்தில் சனிக்கிழமை அதிகாலையில் தொடங்குவதையொட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரம் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தது.

206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், அவர்களுடைய பயிற்சியாளர், அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் என ரியோவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 34 மைதானங்களில் நடத்தப்படுகின்றன. பிரேசிலில் மலிந்து கிடக்கும் ஊழல், கடுமையான பொருளாதார நெருக்கடி, பெரும் போராட்டங்கள், ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்பு:

 ஒலிம்பிக் போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர ரியோ டி ஜெனீரோ, அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய ஒரு நகரமாகும். இதனால் போட்டியின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 85 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாக்கி அணி பங்கேற்கவில்லை:

இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்காது என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. “பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்துடன் மோதும் தொடக்க ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆகையால், போட்டிக்கு முன்பாக தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்து வீரர்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லை. எனவே, அணிவகுப்பில் பங்கேற்கப்போவதில்லை’ என்று ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.

இதனிடையே, அணிவகுப்பில் பங்கேற்க ஆடவர் ஹாக்கி அணிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட உடை உள்ளிட்ட உடைமைகள் சரியாகப் பொருந்தாத காரணத்தாலேயே அணிவகுப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, தொடக்க விழாவின் அணிவகுப்பில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது.

271 ரஷியர்களுக்கு அனுமதி:

 ரஷியாவில் இருந்து 271 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 389 பேர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அந்நாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகளே உறுதுணையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு தடகள அணிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டதோடு, மேலும் சில விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது பங்கேற்கும் 271 பேருக்கும் அனைத்து வகையான ஊக்கமருந்து சோதனைகளும் நடத்தப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ரஷிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் அலெக்ஸாண்டர் ஸுகோவ் தெரிவித்துள்ளார்.

SHARE