விஷ ஊசி விவகாரம்- சிறிலங்கா அரசுக்கு சாதகமாக அமையப்போகும் பிரசாரம்- இரா.துரைரத்தினம்

286

 

vadamaradchi east 1முள்ளிவாய்க்காலில் 2009ல் இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு இராணுவத்திடம் சரணடைவது என விடுதலைப்புலிகள் முடிவெடுத்த போது வெளிநாடுகளில் இருந்த தமிழர் தரப்பின் ஒரு பகுதியினர் அதை எதிர்த்தனர். இராணுவத்தினரிடம் சரணடையாது சயனட் அருந்தி உயிர் மாய்த்திருக்க வேண்டும் என வாதிட்டவர்களும் இருக்கிறார்கள்.

ஓவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமையை மறுத்து அவர்கள் மரணிக்க வேண்டும் என எண்ணியவர்கள் மானிட விரோதிகளாகவே கணிக்கப்பட வேண்டியவர்கள்.
இத்தகையவர்கள் தான் இராணுவத்தினரிடம் சரணடைந்து துன்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்து விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் அணுவணுவாக கொல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும் கடந்த சில வாரங்களில் ஊடகங்களில் பேசப்பட்டு வரும் முக்கிய விடயமாகும்.

தங்களுக்கு எதிராக போரிட்டவர்கள் தங்களிடம் சரணடைந்த பின் அவர்களை மீண்டும் போரிடம் மனத்திடமோ உடல்பலமோ கொண்டவர்களாக விடுதலை செய்வார்கள் என எந்த ஒரு இராணுவத்திடமும் எதிர்பார்க்க முடியாது. முக்கியமாக சித்திரவதைகளிலும் மனித உரிமை மீறல்களிலும் கைதேர்ந்த சிறிலங்கா இராணுவத்திடம் இதை எதிர்பார்க்க முடியாது. மீண்டும் ஒரு போருக்கு செல்லமுடியாதவாறான உடல் உள நிலை கொண்டவர்களாக அவர்களை மாற்றும் புனர்வாழ்வை வழங்கியே அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்பது எதிர்பார்க்க கூடிய ஒன்றுதான்.

ஆனால் எடுத்த எடுப்பில் விஷ ஊசிதான் ஏற்றப்பட்டது என்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட விஷ ஊசி விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளின் மீது பரீட்சித்து பார்க்கப்பட்டது என செய்யப்படும் பிரசாரங்கள் சிறிலங்கா இராணுவத்தை போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாகவும் அமைந்து விடலாம்.

சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் இரசாயன உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்திலும் இது பற்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கி;றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் வழமை போல இதனையும் மறுத்திருக்கிறது. போராளிகள் சரணடைந்து புனர்வாழ்வழிக்கப்பட்ட காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோதபாய ராசபக்சவும் தனது பங்கிற்கு மறுப்பை தெரிவித்து தேவையானால் மருத்துவ பரிசோதனையை நடத்துங்கள் என கூறியிருக்கிறார்.

ஜேர்மனி பேர்ளின் நகரில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக எதிர்வரும் 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கும் ஜேர்மனியில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்திருக்கி;றது.

தமிழ் இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் தரப்பு விவாதித்து வருகிறது. புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 107பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் 12ஆயிரம் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்ட பின்னரே விடுதலை செய்யப்பட்டனர் என்றும் கூட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறான ஒரு கொடுமை நடந்திருந்தால் அதனை வெளிப்படுத்துவதில் தவறில்லை, வடமாகாணசபையிலோ தீர்மானம் நிறைவேற்றுவதோ அல்லது வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதோ தவறில்லை. ஆனால்ஆதாரங்களை கையில் வைத்திருக்காது ஆர்ப்ப்பரிப்பது சில வேளைகளில் சிறிலங்கா அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடும்.

பிரசாரங்களில் காலத்தை செலவிடுவதற்கு முதல் உண்மையை கண்டறிவதற்கான காரியங்களில் ஈடுபட வேண்டும்.
உண்மையை கண்டறிவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இப்போது தாராளமான வசதிகளும் வாய்ப்புக்களும் சூழலும் காணப்படுகின்றன.

தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும் என இருக்காது வடமாகாணசபை செயலில் இறங்க வேண்டும். வடமாகாணசபையின் கீழ் இருக்கும் சுகாதார அமைச்சின் ஊடாக இதற்கான நிபுணர்களை நியமித்து ஆரம்பகட்டமாக குறிப்பிட்டளவு போராளிகளுக்கு முழுமையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது வடமாகாணசபைக்கு அப்பாற்பட்ட சக்தி அல்ல.

சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலையான முன்னாள் போராளிகள் பலர் இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர். உதாரணமாக லண்டனில் பல முன்னாள் போராளிகள் அகதி தஞ்சம் கோரியிருக்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான வைத்திய வசதி அந்தந்த நாடுகளில் வழங்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வைத்திய நிபுணர்களிடம் முழுமையான உடல் பரிசோதனை செய்வதற்கு கூட அரசாங்கத்தினால் காப்புறுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானியாவில் பெருந்தொகையான தமிழ் வைத்திய நிபுணர்கள் உள்ளனர். பெரும் பண பலத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உட்பட தமிழர் அமைப்புக்கள் உள்ளன. ஆலயங்கள் உட்பட தமிழர் அமைப்புக்களும் பண பலத்துடன் உள்ளன. இவர்களின் நிதி உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள போராளிகளுக்கு வைத்திய பரிசோதனைகள் மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதனை யாரும் செய்யதாக தெரியவில்லை.

இவ்வாறு செய்யாமல் ஆதாரங்களை பெறாமல் வெறும் பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டிருப்பது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தையும் அரசாங்கத்தையும் சர்வதேச அரங்கில் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாகவே அமையும்.

இறுதிப்போரின் போது தனது படைகளையும் கொண்டு தமிழ் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி இனஅழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம் அந்த போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மிக இலகுவாக மறுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்க கூடிய வகையில் விசாரணையை நடத்துவதற்கு கூட சிறிலங்கா அரசாங்கம் முன்வருவதாக இல்லை.
இப்போது முன்னாள் போராளிகள் மீது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டையும் மிக இலகுவாக மறுத்திருக்கிறது.
முன்னாள் போராளிகள் 107பேர் புற்றுநோயாலும் நச்சு கலந்த உணவுகள் வழங்கப்பட்டதாலும் உயிரிழந்திருப்பதாக பிரசாரம் செய்பவர்களிடம் எத்தனை பேர் புற்றுநோயினால் இறந்தார்கள், எத்தனை பேர் இனங்காணப்படாத நோயினால் இறந்தார்கள் என்ற புள்ளிவிபரங்களோ ஆதாரங்களோ கிடையாது. இத்தகைய பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் அல்லது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஆதாரங்களை திரட்டி அதனை வெளிப்படுத்த வேண்டும்.

புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி உள்நாட்டிலும் சரி இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் ஆதாரங்களை முன்வைக்காது வெறும் உணர்ச்சி வசப்படுத்தும் இலக்கை நோக்கியே பயணிக்கிறது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான 12ஆயிரம் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டது என்றும் நஞ்சு கலந்த இரசாயன உணவு வழங்கப்பட்டது என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான பிரசார ஆயுதமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் அது முன்னாள் போராளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஏன் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விட கூடாது

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என உரிய மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால் சிறிலங்கா படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் சித்திரவதைகள் அனைத்தும் பொய் பிரசாரங்கள் என சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள பேரினவாதிகளும் வாதிடுவதற்கு வாய்ப்பை வழங்கி விடும்.

இறுதிப்போரின் போது கொத்துக்குண்டுகளை வீசியதாகவும், நச்சுக்குண்டுகளை வீசியதாகவும் கூட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை கூட இதனை ஒரு உதாரணமாக வைத்து சிறிலங்கா அரசாங்கம் மறுப்பதற்கு பெரும் சந்தர்ப்பத்தை இது வழங்கி விடும்.
முன்னாள் போராளிகளை சரியான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தாது அதன் உண்மைத்தன்மைகள் வெளிவராத நிலையில் புனர்வாழ்வு காலத்தின் போது 12ஆயிரம் போராளிகளுக்கும் விஷ ஊசி ஏற்றப்பட்டதாகவும் இரசாயன உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் பிரசாரம் செய்வது அந்த போராளிகளை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களையும் பெரிதும் பாதிக்கும்.

தாம் விரைவில் இறந்து விடுவோம் என்ற உணர்வும் அச்சமும் விரக்தியும் ஒவ்வொரு முன்னாள் போராளிகளுக்கும் ஏற்படும். தமது உறவுகளை இழக்கப்போகிறோம் என்ற கவலை அவர்களின் குடும்பங்களை சூழ்ந்து கொள்ளும். போரினால் நொந்து போன அவர்களை மேலும் வேதனை தீயில் தள்ளுவதாக அமைந்து விடும்.

திருமணமாகாத போராளிகளை யாரும் திருமணம் செய்யவோ தொழில்களை வழங்குவதற்கோ யாரும் முன்வரமாட்டார்கள். அவர்களை சமூகத்திலிருந்து புறந்தள்ளும் நிலை ஏற்படும்.
தாம் விஷ ஊசி ஏற்றப்பட்டு மரணத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறோம் என்ற உளரீதியான பாதிப்பு ஏற்பட்டால் தற்கொலைகளை நோக்கியும் அவர்கள் செல்லலாம்.

விஷ ஊசி ஏற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்த பின்னர் காரைதீவை சேர்ந்த முன்னாள் போராளிகள் இருவர் தமக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக தெரிவித்திருக்கி;றார்கள்.

காரைதீவைச்சேர்ந்த முன்னாள் போராளிகளான 45வயதுடைய குடும்பஸ்தரான பெரியதம்பி வசந்தகுமார் மற்றும் இன்னும் திருமணமாகாத 36வயதுடைய சுப்பிரமணியம் தவமணி ஆகியோர் தமது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இவர்களை போன்ற அச்சம் இப்போது விடுதலையான 12ஆயிரம் போராளிகளுக்கும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
2009இல் வன்னியில் இடம்பெயர்ந்து குடும்பத்தோடு இராணுவத்திடம் தாம் சரணடைந்ததாகவும் 2010வரை பூசா முகாமிலும் வெலிக்கட சிறைச்சாலையிலும் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் வெலிக்கந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று விடுதலையானதாக வசந்தகுமார் தெரிவித்திருக்கி;றார்.

அங்கு ஒருவருட பயிற்சியின் பின்னர் 2011இல் விடுதலை செய்யப்பட்டதாகவும் தற்போது கூலி வேலை செய்து மனைவி மற்றும் இருபெண்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.

விஷ ஊசி செய்திகள் வெளியான நிலையில் தனது மனைவி சாத்திரியார் ஒருவரிடம் வெற்றிலை வைத்து சாத்திரம் கேட்ட போது உடலில் விஷம் கலந்திருக்கிறது என கூறியதாகவும் அவர் தெரிவித்திருக்கி;றார்.

தற்போது இரண்டு தினங்களாக படுத்தால் தலை சுற்றுகிறது. உடனே கண்விழிக்கவேண்டும். இன்றேல் உலகம் சுற்றுவதுபோலுள்ளது என அவர் தெரிவித்திருக்கி;றார்.
விஷ ஊசி விவகாரம் உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் இது எவ்வளவு தூரம் உளவியல் ரீதியாக முன்னாள் போராளிகளை பாதித்திருக்கிறது என்பதற்கு வசந்தராசா ஒரு சாட்சியாகும்.

அதேபோன்று திருமணமாகாத முன்னாள் போராளி தவமணி இந்த செய்திகள் வெளிவந்த பின்னர் தனது எதிர்காலம் பற்றி கவலையும் அச்சமும் வெளியிட்டிருக்கிறார்.

வடமாகாணசபை போன்ற பொறுப்பு மிக்க சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல் இந்த விவகாரத்தினை அறிவதற்கு ஒரு போராளிக்காவது முழுமையான உடல் பரிசோதனையை செய்து முழுமையான ஆதாரத்துடன் அறிக்கை வைத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

அது போன்று போர்க்குற்றத்திற்காக ஆதாரம் தேடும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களிடம் மருத்துவ பரிசோதனையை செய்து அறிக்கையை பெற்றிருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள எந்த ஒரு தமிழர் அமைப்பும் இதுவரை இறங்கியதாக தகவல் இல்லை.

சரியான மருத்துவ பரிசோதனைகளை செய்து அவ்வாறான விஷ ஊசி ஏற்றப்படவில்லை என்றால் அதனை வெளிப்படுத்த வேண்டும். அதுவே உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் 12ஆயிரம் போராளிகளையும் காப்பாற்ற உதவும்.

மருத்துவ பரிசோதனைகளில் விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கண்டறியப்பட்டால் விரைவாக 12ஆயிரம் போராளிகளுக்கும் உரிய மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். அந்த ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு செய்யப்படும் பிரசாரமே சிறிலங்காவை போர்க்குற்றவாளி என்பதை நிரூபிக்க உதவும்.

இதனை விடுத்து எந்த ஆதாரமும் இன்றி செய்யப்படும் பிரசாரங்களால் பாதிக்கப்படுவது எமது சமூகத்திற்காக தியாகங்களை புரிந்த இன்று உயிர் தப்பியிருக்கும் 12ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளே ஆகும்.

SHARE