வீட்டிலிருந்தே விண்வெளிக்கு பேசிய முதியவர்: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்

347
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு ஊர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில் பேசும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.சாதாரணமாக விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் மட்டுமே தொடர்பு கொண்டு பேச முடியும். சிக்னல் பலமாக இருந்தால் சில அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களுடனும் பேசலாம்.

ஆனால் தற்போது பிரிட்டனைச் சேர்ந்த அமெச்சூர் ரேடியோ எனப்படும் ‘ஹேம் ரேடியோ’ ஆபரேட்டராக பணியாற்றும் 52 வயது அட்ரியென் லேன் என்பவர் முதல் முயற்சியிலேயே தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு சாதாரண அறையில் இருந்தவாறு, சாதாரண ரேடியோ ஒலிபரப்பு அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள அமெரிக்க வீரர்களுடன் பேசி சாதனை படைத்துள்ளார்.

அவரது அழைப்பை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர் கவனித்து அவருக்கு பதிலளித்தார்.

பூமி எப்படி காட்சியளிக்கிறது என லேன் கேள்வியெழுப்பினார். மேலே இருந்து பார்க்கும்போது இடைப்பட்ட பகுதி அனைத்தும் கும்மிருட்டாகவே உள்ளது. பூமிப்பந்து மட்டும்தான் பலவித வண்ணங்கள் கொண்ட வர்ணஜாலக் கோலமாக ரம்மியமாக தோன்றுகிறது என்று விண்வெளி வீரர் கூறினார்.

இந்த 50 வினாடி உரையாடல் சர்வதேச அளவில் பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.

விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் தற்போது எங்கு சுற்றிக் கொண்டுள்ளது, நமது நகரின் மீது, வெகு துல்லியமாக நமது வீட்டின் மேற்பரப்பை எந்த நேரத்தில் கடக்கும், என பலமுறை நன்கு ஆராய்ந்து முறையாக திட்டமிட்டு அவர் செய்த முதல்முயற்சியிலேயே பெரிய வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நமது வீட்டுக்கு மேல் வரும்போது செய்தால் நம்மாலும் விண்வெளி வீரர்கள் பேச முடியுமாம்.

SHARE