வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி

368

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய வேலர் சின்னக்குளம், மகிழங்குளம், விளக்குவைத்த குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் அத்தியாவசிய உணவு கொள்வனவுக்கான சிறுநிதித்தொகையை கையளித்த பின்னர் அங்குள்ள மக்களின் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியாவில் 5 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நலன்புரி நிலையங்களிலும் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். இதனை நான் நேரில் பார்வையிட்டதன் அடிப்படையிலும் மக்கள் என்னிடம் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் தெரிவிக்கின்றேன்.

இம் மக்கள் யத்தத்தால் பாதிப்படைந்து மீள்குடியேறியவர்கள். வீட்டுத் திட்டம் இவர்களுக்கு கிடைக்காமையால் இயற்கையும் இவர்களை தாக்குகிறது. மழை காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்து பொது கட்டடங்களில் போதிய வசதிகள் இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

நலன்புரி நிலையங்களில் போதுமான வசதிகள் இன்மையால் இடம்பெயாந்த மக்கள் இரவிரவாக நுளம்புக்கடிக்கு மத்தியில் நித்திரையின்றியும் போதிய உணவின்றியும் இருந்து விட்டு காலையில் காலைக் கடனை முடிப்பதற்காக வீடுகளுக்கு சென்ற சமயம் நலன்புரி நிலையங்களுக்கு சென்ற வவுனியா உதவி பிரதேச செயலாளர் அம் மக்களை அச்சுறுத்தும் தொனியில் பேசியுள்ளதுடன் மக்கள் உணவுக்காக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்ததாகவும் மக்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் என மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவருடைய அறிக்கையின் காரணமாக தற்போதும் வவுனியாவில் மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை மூடுமாறு பிரதேச செயலாளர் பணித்துள்ளார். இம் மக்கள் கடந்த மூன்று நாட்களாக முகாமில் தங்கியுள்ள போதும் பிரதேச செயலாளர் இம் மக்களைச் சென்று பார்க்கவில்லை.

இம் மக்கள் சுய முயற்சியில் வாழ்பவர்கள். இவர்கள் உணவுக்கு கையேந்தும் மக்கள் அல்ல. வந்தாரை இன்முகத்தோடு வரவேற்று தமக்கில்லையேனும் உணவளிக்கும் மக்கள். எனவே அதிகாரிகள் மக்களின் இன்னல்களுக்கு ஆவண செய்வதை விடுத்து அவர்களை இழிவாக நடத்துவது வேதனையான விடயமாகும்.

இதேபோலவே, இடம்பெயர்ந்த மக்களுக்காக சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரும் மக்களுக்கு அதட்டும் தொனியில் பேசியுள்ளார். அத்துடன் நடமாடும் சேவை இடம்பெற்ற தினத்தில் வருத்தம் ஏற்பட்டவர்கள் மாத்திரம் சிகிச்சை பெற வருமாறும் கூறியுள்ளார். எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் மக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம்பெறும் அதிகாரிகள் சேவையாற்ற வேண்டும் என்பதனை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்படும் உதவிகளைக் கூட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க இவ் அதிகாரிகள் பின்நிற்கிறார்கள். மனிதாபிமானத்துடன் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை அணுக வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

எனவே, இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை 844 குடும்பங்களை சேர்ந்த 2865 பேர் வவுனியா மாவட்டத்தில் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதுடன் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 617 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்தும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினருடன் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் க.பரமேஸ்வரன் ஆகியோரும் புதிய வேலர் சின்னக்குளம், மகிழங்குளம், விளக்குவைத்த குளம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்ததோடு, மக்களின் தேவைகள் குறித்தும் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜாவுடன் கலந்துரையாடினர்.
SONY DSC    SONY DSC
SHARE