வேதாளம் (த.தே.கூ) மீண்டும் முருங்கை மரத்தில்

883

 

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்தே, இதுவரை அமுங்கிக் கிடந்த உள் முரண்பாடுகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைகளின் அரசியல் அணுகுமுறையை சற்று உற்று நோக்கினால், சிறுவயதில் படித்த அம்புலிமாமாக் கதையில் வரும் வேதாளம் – விக்கிரமாதித்தியன் பாத்திரங்களே நினைவுக்கு வருகின்றன. விக்கிரமாதித்தியன் கதைகளில் திருப்தி கொள்ளாத வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், ஆனால் சற்றும் சளைக்காக விக்கிரமாதித்தனோ மீண்டும் மீண்டும் கதை சொல்லுவதாகவும் அந்தக் கதை நீண்டு செல்லும்.

ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முரண்பாடுகளை பார்க்கும்போது, மேற்படி அம்புலிமாமா கதையே நினைவுக்கு வருகிறது. இன்றைய சூழலில் த.தே.கூட்டமைப்பு தமக்குள் நிலவும் முரண்பாடுகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் – கூட்டமைப்பு ஒரு வலுவான அரசியல் அமைப்பாக செயற்பட வேண்டும் – என்றெல்லாம் எங்களைப் போன்ற கருத்துருவாக்க தரப்பினர்கள் தொடர்சியாக கதை சொல்லிக் கொண்டிருக்க, கூட்டமைப்பின் தலைவர்களோ எங்களது கதையில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்கின்றனர். இப்போது தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கும் ஆய்வாளர்கள், ஊடக தரப்பினர்களின் நிலைமையோ சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியன் நிலைமைக்கு ஒப்பாகிவிட்டது. அவர்களும் சலிக்காமல் கதை சொல்லி வருகின்றனர். ஆனால் முருங்கை மரத் தலைமைகளோ சிறிதும் திருப்தி கொள்ளவில்லை. இதன் விளைவு – இன்றைய தமிழர் அரசியல் முருங்கை மரத்தையும் வேதாளத்தையும் தாண்டிச் செல்ல முடியாத கையறு நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடு ஊடகங்களுக்கு புதியதல்ல. அது நீண்ட நாட்களாகவே இருந்து வரும் ஒன்றுதான். ஆனால் கிழக்கு தேர்தலால் கீழ்நிலைக்கு சென்ற மேற்படி முரண்பாடு, தற்போது தமிழ் சூழலின் மேற்பரப்பிற்கு வந்திருக்கிறது. ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சி பிரதான இடத்தை வகிக்க முடியாது, சகல தரப்பினருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் – என்னும் கருத்தே இந்த உள் முரண்பாட்டின் அடிப்படையாக இருக்கிறது. தற்போது தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’ கூட்டமைப்பின் சின்னமாக பயன்படுத்தப்படும் நிலையில், சட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியே அதன் தலைமை பொறுப்பில் இருக்கிறது. சட்டபூர்வமாக பார்த்தால் தேர்தல் வெற்றியை உரிமை கோருவதற்கான தகுதிப்பாடு தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறதே தவிர, கூட்டமைப்பிற்கு இல்லை. இந்த பின்னணியில்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சட்ட பூர்வமான கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்னும் அபிப்பிராயங்கள் உருவாகின. ஆனால் இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதில் கருத்தொருமிப்பு ஏற்படவில்லை. இதன் விளைவே இன்றைய நிலைமை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், சித்தார்த்தன் தலைமையில் இருக்கும் புளொட், ஆனந்தசங்கரி தலைமையில் இருக்கும் ரி.யு.எல்.எப் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இருக்கும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டமைப்பாக பதிவு செய்யப் போவதான செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் சில ஆரம்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் உண்டு. இந்த பின்புலத்தில் இரா.சம்பந்தன் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்கும் ஆணையை தமிழர்கள் யாருக்கும் வழங்கவில்லை’ என்று தெவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் இரா.சம்பந்தனையும், தமிழரசுக் கட்சியையும் தாக்கி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பில் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடு வெளித்தெரியாத போதும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் அறிக்கை கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஓர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றன என்பதையே நிரூபிக்கின்றது. இதன் முடிவு, ஒன்றில் பதிவு அல்லது உடைவு என்னும் நிலைமையை தோற்றுவிக்கலாம்.

இந்த முரண்பாட்டின் பின்புலத்தை ஆராய்ந்தால் ஒரு விடயத்தை கண்டு கொள்ளலாம். இந்த முரண்பாட்டின் அடிப்படையாக இருப்பது பரஸ்பர அச்சமாகும். கூட்டமைப்பு சட்டபூர்வமாக பதிவு செய்யப்படுமிடத்து தமது இடம் கேள்விக்குள்ளாகிவிடலாம் என்று தமிழரசுக் கட்சியினரும், ஒரு சட்டபூர்வ அந்தஸ்தற்று தொடர்ந்தும் தமிழரசுக் கட்சின் கீழ் தங்கியிருக்கும் நிலையில் தங்களுக்குரிய இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாதென்று ஏனைய கட்சியினரும் கருதுகின்றனர். இந்த பரஸ்பர அச்சமே, சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உள்ளரங்க சங்கதியை பொது அரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இதிலுள்ள சுவாரஸ்சியமான தகவல் – இரு தரப்பினருமே மக்கள் நலனை முன்னிறுத்தி கூட்டமைப்பு ஏன் பதிவு செய்யப்பட வேண்டும் – ஏன் பதிவு செய்யப்படக் கூடாது என்று வாதிடவில்லை. இதனை பிறிதொரு வகையில் நோக்கினால் – முன்னர் எத்தகைய அச்சம் தமிழர் அரசியலை அலைக்கழித்ததோ – அதே பழைய அச்சமே, இப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அலைக்கழிக்கிறது.

மக்களின் நலனை முன்னிறுத்தி சிந்தித்தால் இந்த அச்சம் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒவ்வொரு சூழலிலும் குறிப்பிட்ட ஒருவர் பல்வேறு காரணங்களால் தலைமைப் பொறுப்பிற்கு வருகிறார். அவர் இந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதெல்லாம் கட்சிப் பிரச்சனையே தவிர, அது மக்களுக்குரிய ஒன்றல்ல. கடந்த அறுபது வருடகால அரசியலை எடுத்து நோக்கினால், மக்கள் பலரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு மக்கள் பலரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்கு குறிப்பிட்ட சூழலில் அர்த்தம் உண்டு. எனவே மக்கள் ஒருவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வதை யாரும் வலிந்து பெற்றுவிடவும் முடியாது, அதே வேளை பிறிதொருவர் மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுவதை யாராலும் தடுத்து விடவும் முடியாது. இந்த அடிப்படை உண்மையை மனம் கொண்டு சிந்தித்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட வேண்டியதில்லை. இந்த உண்மையை முன்னிறுத்தி கூட்டமைப்பினர் சிந்தித்திருந்தால், மேற்படி உள் முரண்பாடு இந்தளவு தூரம் தீவிரமடைந்திருக்கவும் மாட்டாது.

இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் இந்த பத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறது – கடந்த அறுபது வருடகால அரசியல் மிதவாத தலைமைகளாலும் ஆயுத விடுதலை இயக்கங்களாலும் வழிநடத்தப்பட்டிருக்கிறது. எனவே இந்த அரசியல் போக்கின் நன்மை தீமை அனைத்திலும் இரு தரப்பினருக்கும் பங்குண்டு. அதனை எவருமே மறுக்க முடியாது. இரு தரப்பினரில் ஒருவரது பங்களிப்பு அல்லது இடம் உயர்வாக மதிப்பிடப்படும் போது முரண்பாடுகள் எழுவதை தவிர்க்க முடியாமல் போகும். ஏனெனில் அது நியாயமல்ல. இந்த விடயத்தை மனதில் இருத்தி கூட்டமைப்பின் தலைவர்கள் சிந்தித்தால் மட்டுமே கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை பிரதிபலிக்கும் ஓர் அரசியல் கூட்டு முன்னணியாக நிலைபெற முடியும். அவ்வாறு இல்லாதவிடத்து கூட்டமைப்பில் உடைவு நிச்சயம் ஏற்படும். அந்த உடைவு எவ்வாறு அமையும் என்பதை இப்போது திட்டவட்டமாக குறித்துரைக்க முடியாவிட்டாலும், அந்த உடைவு அதிக தூரத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில் பரபஸ்பர அச்சத்துடனும், சந்தேகங்களுடனும் ஓர் அரசியல் கூட்டு முன்னணி தொடர்ந்தும் உயிர்வாழ முடியாது.

யதீந்திரா -இன்போ தமிழ்

Edit

SHARE