வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்த வங்கதேச வீரர் சஸ்பெண்ட்

340
வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹொசைன்(வயது 29), இதுவரை 38 டெஸ்ட், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.இவர் தனது மனைவி நிரிட்டோ ஷகாதத்துடன் சேர்ந்து டாக்காவில் உள்ள இவரது வீட்டில் வேலை செய்து வந்த 11 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த சிறுமி காயத்துடன் அவரது வீட்டின் வெளியில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொலிசார் விசாரித்ததில் ஷகாதத் அவருடைய மனைவியுடன் சேர்ந்து கொண்டு தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

இதனையடுத்து அந்த சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்துடன் நேற்று பொலிசார் அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்த போது அவர்கள் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவரை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் இவரை சஸ்பெண்ட் செய்துள்ளது, எனவே உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில். ஷகாதத் ஹொசைன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இவரை தற்காலிகமாக நீக்கம் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

SHARE