ஹாக்கி உலக லீக் அரையிறுதி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் அசத்தல்: கிரேட் பிரிட்டனை வென்றது

333
ஹாக்கி பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி இன்று கிரேட் பிரிட்டன் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் உலக லீக் அரையிறுதியில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ஹாக்கி உலக லீக் அரையிறுதி போட்டி பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் வரும் 20-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விளையாடுவதற்காக இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பெல்ஜியம் சென்றுள்ளன.

அரையிறுதி போட்டிகளுக்கு முன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வரும் இந்திய ஆண்கள் அணி, முதல் பயிற்சி ஆட்டத்தில் பிரான்சை வென்றது. 2-வது பயிற்சி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது. நேற்று நடந்த 3-வது பயிற்சி ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.

இந்நிலையில் 4-வது பயிற்சி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் தேவேந்தர் வால்மீகி, குர்பஜ் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் உலக லீக் அரையிறுதியில் இந்திய அணியின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று வீரர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

SHARE