‘100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்’- மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொய்

417

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

‘100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்’: மைத்திரிபால

10382978_10152530577865060_1786260201502959407_n

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

‘குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே’ தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

‘100 நாட்களுக்குள் சீர்திருத்தம்’

‘இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். பொது மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கு சிர்குலைந்துள்ளன’ என்ற சிறிசேன, இந்த அழிவில் இருந்து நாட்டை காப்பதற்காகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகக் கூறினார்.

‘மைத்திரிபால அரசாங்கம் அமைத்தால் ரணில் விக்ரமசிங்க பிரதமராவார்’

தான் வெற்றிபெறும் நாள் முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும் என்றும் கூறிய மைத்திரிபால, தான் அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.

தனது புதிய ஆட்சின் கீழ், அரசியல்யாப்பின் 18 வது திருத்தம் இரத்துச் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் 18 வது திருத்தம் காரணமாகவே நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்று உருவாகியுள்ளதாக கூறிய அவர், காவல்துறை, அரசசேவை, நீதித்துறை, ஊடக சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

தன்னை பொது ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்காக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் உள்ளிட்ட தரப்பினருக்கு நன்றி கூறுவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவை கொண்ட நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாவும் சிறிசேன கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே தான் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

இன்னும் பெரும் எண்ணிக்கையிலான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் தினங்களில் தம்முடன் இணையவுள்ளதாகவும் அமைச்சர் சேனாரத்ன கூறினார்.

 

SHARE