12 வயதில் மனைவி.. 54 வயதில் கூட கிரிக்கெட்: பிராட்மேன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

335
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 107வது பிறந்த தினம் இன்று…கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கும் பிராட்மேன், 1908ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி பிறந்தார்.20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்த பிராட்மேன், 1948ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார்.

இவர் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் குவித்துள்ளார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார்.

பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும்.

இவரது சராசரி 99.94 ஆக உள்ளது. இவருக்குப் பிறகு 50 போட்டிகளுக்கு மேல் விளையாடி எந்த வீரரும் 70 சராசரிக்கு மேல் வைத்ததில்லை.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழும் பிராட்மேன் பற்றிய சில சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி பார்க்கலாம்.

1) பிராட்மேன் தனது 12 வயதிலே பள்ளிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வியக்க வைத்துள்ளார்.

2) தனது 12 வயதிலே தனது மனைவி ஜெசியை பிராட்மேன் சந்தித்துள்ளார். அதுமட்டுமல்ல இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்துள்ளனர்.

3) பிராட்மேன் படிப்பில் கெட்டிக்காரர். அதிலும் கணிதத்தில் அவர் புலி. அவருக்கு பிடித்த விடயங்கள் இசை, கிரிக்கெட் மற்றும் கணிதம்.

4) இசை மீதான காதலால் அவர் பியானோ கற்றுக் கொண்டார். 7 வயதிலே மேடையில் பாடி அசத்தினார். பின்னர் ‘Every Day is a Rainbow Day for Me’ என்ற ஒரு பாடலை அவரே வெளியிட்டார். அதுமட்டுமல்ல தனது பியானோவிலே உருவான பட பாடல்களையும் அவர் வெளியிட்டார்.

5) கிரிக்கெட் தவிர டென்னிஸ், கோல்ஃப், ரக்பி, தடகளம் என அனைத்து விளையாட்டிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் பிராட்மேன்.

6) 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் விளையாடும் லெவனில் இருந்து ஒருமுறை தான் நீக்கப்பட்டுள்ளார். அதுவும் முதல் தொடரில் தனது 20 வயதில் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இல்லாமல் அவுஸ்திரேலியா களமிறங்கியது இல்லை.

7) பதற்றத்தால் 90 ஓட்டங்களில் ஆட்டமிழக்கும் வீரர்கள் அதிகம். ஆனால் பிராட்மேன் 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது கிடையாது.

8) அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பிராட்மேனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது தபால் பெட்டி எண்ணை 9994 என வைத்துள்ளது. 99.94 அவரது டெஸ்ட் சராசரி ஆகும்.

9) இவ்வளவு ஓட்டங்கள் அடித்த பிராட்மேன் 6 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். ஐந்து இங்கிலாந்திற்கும் எதிராகவும், ஒன்று இந்தியாவிற்கு எதிராகவும் அடித்தார்.

10) கடைசியாக பிராட்மேன் தனது 54 வயதில் கிரிக்கெட் விளையாடினார். எம்சிசி மற்றும் பிரதமர் லெவன் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் விளையாடிய பிராட்மேன் 4 ஓட்டங்கள் எடுத்தார்.

11) 2001ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி உடல்நல குறைவால் சாதனை நாயகன் பிராட்மேன் காலமானார்.

SHARE