138 வருடங்கள் தாமதமாக கிடைத்த  தபால் கடிதம்

292
பிரான்ஸ் நாட்டில் 138 வருடங்களுக்கு முன் தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தை சில தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்ற மூதாட்டி ஒருவர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Trelon என்ற நகரில் Therese Pailla என்ற 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் தபால் துறையினரிடமிருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. Sains-du-Nord என்ற நகரிலிருந்து வந்துள்ள அந்த கடிதத்தை பிரித்து பார்த்த மூதாட்டி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.

மூதாட்டியின் பாட்டனாரால் எழுதப்பட்ட அந்த கடிதமானது கடந்த 1877ம் ஆண்டு சனவரி மாதம் 27ம் திகதி அனுப்பப்பட்டது. அதாவது, சுமார் 138 வருடங்கள் அந்த கடிதம் தாமதமாக அந்த மூதாட்டிக்கு கிடைத்துள்ளது.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், Sains-du-Nord நகருக்கும் மூதாட்டி குடியிருந்த Trelon நகருக்கும் இடைப்பட்ட தூரமானது வெறும் 10 கிலோ மீற்றர் தான்.

10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நபருக்கு 138 வருடங்கள் தாமதமாக வந்த கடிதத்தை பிரித்து படித்து பார்த்ததில், அவரது பாட்டனார் தனது நூற்பாலைக்கு நூல்கண்டுகள் தேவை என குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இத்தனை வருடங்கள் தாமதமாக கிடைத்துள்ள அந்த கடிதம் தொடர்பாக La Poste தபால் துறை அதிகாரிகளிடம் அந்த மூதாட்டி விளக்கம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சில நேரங்களில் கடிதங்கள் வைக்கப்படும் இரும்பு லொக்கர்கள் துருப்பிடித்து சேதம் அடைந்தால், அந்த கடிதங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் கடிதத்தை தவறுதலான இடத்தில் வைக்கப்பட்டால், அவற்றை கண்டிபிடிக்க வருடக்கணக்கில் ஆகலாம் என கூறிய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய உள்ளதாக மூதாட்டியிடம் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த தாமதத்திற்கு தபால் துறை காரணமா அல்லது காணாமல் போன கடிதத்தை மீண்டும் கண்டுபிடித்து தபால் மூலம் அனுப்பியுள்ளனரா என்பது தெரியவில்லை.

இது குறித்து மூதாட்டி பேசுகையில், ஒரு கடிதமானது ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் கூட தாமதமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக் அறிந்துள்ளேன். ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தாமதமாக கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

SHARE