2–வது ஒருநாள் போட்டியில் இந்தியா–இங்கிலாந்து இன்று மோதல்

420
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பிரிஸ்டலில் நடக்க இருந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டெஸ்டில் சோடை போன இந்திய வீரர்கள், அதற்கு ஒரு நாள் தொடரில் பரிகாரம் தேட வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணித் தேர்வுக்கு இந்த தொடரின் செயல்பாடு நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும். எனவே அணியில் இடத்தை தக்க வைக்க ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் இது முக்கியமான தொடர் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் மிகப்பெரிய நெருக்கடியில் தவிக்கிறார்கள். இவர்கள் தொடக்கத்தை நல்லவிதமாக ஏற்படுத்தி தருவதை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும்.

டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றிப்பயணத்தை ஒரு நாள் தொடரிலும் நீடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் இங்கிலாந்து வலுவாக திகழ்வதால் இந்திய வீரர்கள் கடும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

கார்டிப் மைதானத்தில் இங்கிலாந்து அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி அதில் 4–ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று ஆட்டத்தில் முடிவில்லை.

இந்திய அணி இங்கு 3 ஆட்டத்தில் விளையாடி 2–ல் வெற்றியும் (தென்ஆப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது. இந்த மைதானத்தில் இந்திய வீரர்களில் ஷிகர் தவான், விராட் கோலி சதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கும் மழை ஆபத்து உள்ளது. ஆனால் முதல் நாள் ஆட்டத்தை போன்று பெருத்த மழை இருக்காது. இங்கு இன்று மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை வைத்து பார்க்கும் போது, அவ்வப்போது மழை குறுக்கீடு இருக்கலாம். ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடர்ந்து நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே அல்லது அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது முகமது ஷமி.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலஸ், இயான் பெல், ஜோ ரூட், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் அல்லது கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் ஜோர்டான், ஹாரி குர்னே, டிரெட்வெல் அல்லது மொயீன் அலி.

SHARE