2,000 பன்றிகள், 500 ஆடுகளை தொடர்ந்து 90 பசுமாடுகள் தீவிபத்தில் பலி

269
கனடாவில் உள்ள கால்நடை பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 90 பசுமாடுகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Elgin என்ற பகுதியில் கால்நடை பண்ணை ஒன்று அமைந்துள்ளது.

இந்த பண்ணையில் 100க்கும் அதிகமான பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் பண்ணையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக விபத்து நிகழ்ந்துள்ள இடத்திற்கு வீரர்கள் சென்றபோது, பண்ணையை சுற்றி தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தண்ணீரை பீய்ச்சி அடித்த வீரர்கள் சில மணி நேரங்களுக்கு பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது குறித்து பேசிய தீயணைப்பு அதிகாரி ஒருவர், பண்ணையில் தீ வேகமாக பரவியதால், அதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வீரர்கள் திணறியுள்ளனர்.

துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் பண்ணையில் இருந்து 15 பசுமாடுகள் வரை காப்பாற்றியுள்ளனர்.

ஆனால், இந்த தீவிபத்தால் பண்ணையை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிய சுமார் 90 பசுமாடுகள் தீக்கு இரையாகியுள்ளன.

தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகததால் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பண்ணையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தில் சுமார் 1.5 மில்லியன் டொலர் மதிப்பு சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதே ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணைகளில் ஏற்பட்ட தீவிபத்தில், இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2,000 பன்றிகள், 500 ஆடுகள், 50 குதிரைகள் மற்றும் தற்போது 90 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE