2005ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் 3 மில்லியன் குழந்தைகள் தங்களுடைய 15 வயது கடக்கும்வரை உயிருடன் இருப்பதில்லை.

401

 

 

மண்ணில் இயற்கையின் விதியால் இருபால் இனமாக மனித இனம் உருவெடுத்துள்ளது. இதில், தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் உயர்வென்றும், பெண் பிள்ளைகள் தாழ்வென்றும் நினைக்கின்ற மனோபாவம் பல்வேறு காலகட்டமாக நம் மத்தியில் நிலவி வருகிறது. நம் சமூகத்தில் ஆணுக்கென்று ஒரு காலாச்சாரமும், கற்பிதமும், பெண்ணுக்கென்று ஒரு கலாச்சாரமும், கற்பிதமும் பகுத்து வைக்கப்பட்டுள்ளது.

34

அன்றைய காலகட்டம் முதல் இன்றைய காலகட்டம் வரை ஏதோ ஒரு வகையில் பெண் என்பவள் போகப்பொருளாகவும், தனக்கு கீழ்ப்பட்டவளாகவும் ஆண் சமூகத்தில் கருதப்பட்டும், கடைபிடிக்கப்பட்டும் வருவதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த வகையில் வளர்ந்த நம் சமூகமானது ஒரு பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கற்பனைப் பிம்பத்தை தனக்குள் வைத்துக் கொண்டுள்ளது. ஆகையால் பெண் மீதான கற்பனை மற்றும் அதன் உண்மை நிலையை ஆராயும் நோக்கிலே உருவானதே இக்கட்டுரை.

கற்பிதம் :1

எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு ஆண் குழந்தைதான் அதை எப்படியும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். அப்படி இருக்கும்போது அதற்குமுன் எதற்காக 4-5 பெண் குழந்தைகள்? பெண் குழந்தையை வளர்ப்பது என்பது, பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதைப் போல. அவர்களை வளர்க்கிறோம். பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறோம். அவர்களுடையத் திருமணத்திற்குத் தர வேண்டிய வரதட்சணைக்கு என்று பலவிதத் திட்டங்களைப் போடுகிறோம் கடைசியில் அவர்களும் குடும்பத்தை விட்டு வெளியே போகிறார்கள். ஆண் பிள்ளைகள் அப்படி அல்ல அவர்களால் பரம்பரை வளர்கிறது. தங்களது பெற்றோரைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் இறந்தபின் இறுதிக் கடன்களைச் செய்கிறார்கள். பெண் குழந்தைகளைப் படிக்க வைத்தால் எந்தப் பலனும் இல்லை. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதையெல்லாம் செய்ய அனுமதித்துவிட்டு, அவர்கள் திருமணம் செய்துகொண்டு போகும்வரை, கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இதனால் குடும்பத்தின் பாரம்தான் கூடுகிறது.

உண்மை நிலை: இம்மாதிரியான வாதங்கள் நம்பிக்கைகள் ஆகியவை ஆணாதிக்கம் கொண்ட சமூகத்திலிருந்து எழுபவை. இவற்றைச் எதிர்கொண்டு பதில் கூறியே ஆக வேண்டும். பொதுவாக எந்தக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்களுடைய பெண்ணுக்குத் திருமணத்தின்போது எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அதே அளவுக்கு பையனின் கல்யாணத்திற்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை. புத்திசாலித்தனமாகச் செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நாம் செய்யும் இன்னொரு விசயம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பது. இதன் மூலம் நாம் அந்தப் பெண்ணுக்கு மறைமுகமாக உணர்த்துவது என்னவெனில் “உனக்கு சேர வேண்டியதைக் கொடுத்தாகிவிட்டது. இனி சொத்தில் பங்கு கேட்காதே” என்பதுதான்.

ஆனால் எப்போதும் ஒரு விடயத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அதேபோல பெற்றோர்களின் சொத்தில், பெண்களுக்குப் பங்கில்லை என்று தட்டிக் கழிப்பதும் சட்டத்தை மீறுவதாகும். எது எப்படி இருந்தாலும் வாழ்க்கையின் உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். வயதானவர்கள் வாழும் விடுதிகளில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று பார்த்தாலே போதும், நமது மகன்கள், எப்படித் தங்களது பெற்றோர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவரும். இன்னும் சொல்லப் போனால், இவ்வாறு மகன்களால் தவிக்கவிடப்பட்ட வயதான பெற்றோர்களை, அவர்களுடைய பெண்கள் பொறுப்புடன் பார்த்துக்கொள்வதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

உயிர் வாழ்வதற்கு, முன்னேற்றம் காண்பதற்கு, சமூகத்தில் ஒன்றிணைந்து இருப்பதற்கு, பாதுகாக்கப்படுவதற்குப் பையன்களுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்குப் பெண்களுக்கும் இருக்கிறது. இம்மாதிரியான உரிமைகள் எதையாவது பெண்களுக்குத் தர மறுப்பது, ஆண்-பெண் பாரபட்ச நிலைமை நீட்டிப்பதற்கும் வறுமை நிலை உண்டாவதற்கும் வழிவகுக்கும்.

பல நூற்றாண்டுகளாக பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பாலினப் பாரபட்சத்தை அனுபவித்துவருகிறார்கள். இதில் கல்வி ஒரு அம்சம். தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியிருப்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். “ஒரு ஆணுக்குக் கல்வியளித்தால் நீங்கள் ஒரு நபருக்கு கல்வி அறிவு புகட்டுகிறீர்கள் ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு அளிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கே கல்வி அளிப்பதற்குச் சமம்.”

தங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைப் புரிந்துகொண்டு பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய விதத்தில் பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இப்படிச் செய்தால், ‘அதிக சுதந்திரம் ஆபத்து’ என்ற பயத்திற்குத் தானாகவே தீர்வு கிடைக்கும். பெண் குழந்தையும், மற்ற மனிதர்களைப் போல மனித உரிமைகள் உள்ளவள்தான் என்ற உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே இது நடக்கும். பெண்களின் பாதுகாப்பு என்பது தேசத்தின் கவலை என்றால் பெண்கள் அதிகாரத்தில் பங்குபெறும் சூழலை உருவாக்காவிட்டால், அவர்களுடைய நிலை மேலும் பலவீனமாகத்தான் இருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

2005ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் 3 மில்லியன் குழந்தைகள் தங்களுடைய 15 வயது கடக்கும்வரை உயிருடன் இருப்பதில்லை. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் அவர்கள் பிறந்து ஒரு வருடத்திற்குள் நிகழ்கிறது. இத்தகைய மரணங்களில் ஆறில் ஒரு மரணம், பாலினப் பாரபட்சத்தின் விளைவாக நிகழ்கிறது. 2001ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 933 பெண்கள் இருக்கிறார்கள். 1991லிருந்து குழந்தைகள் விசயத்தில் இந்த வித்தியாசம் மேலும் அதிகம். 1991இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2001இல் இது 927 பெண்களாகக் குறைந்தது. இந்தச் சூழ்நிலை அபாயகரமான நிலையை எட்டியிருக்கும் மாநிலங்கள், பஞ்சாப் (798) ஹரியானா (819) இமாச்சலப் பிரதேசம் (896) தில்லியில், ஒவ்வொரு 1000 பையன்களுக்கும் 900-த்திற்கும் குறைவான பெண்கள்தாம் இருக்கிறார்கள். இந்த மாநிலங்களிலுள்ள பையன்கள், திருமணத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து பெண்களைத் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

கற்பிதமும் & உண்மை நிலையும்: பால்ய விவாகம்:           

கற்பனை: பால்ய விவாகம் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. திருமணம் ஆகாத பெண்கள் கற்பழிப்பு, பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சீக்கிரமாகத் திருமணம் முடித்துவிடுவது நல்லது. பெண்ணுக்கு வயதாக ஆக அவளுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணை அதிகரிக்கிறது. அதே போல நல்ல மணமகன் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது.
உண்மை நிலை: எந்த விதமான தவறான நடைமுறைகளையும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் கலாச்சாரத்தின் பெயரால் நியாயப்படுத்தக் கூடாது. பால்ய விவாகம் என்பது நமது கலாச்சாரம் என்றால், அடிமைத்தனமாக நடத்துவது சாதிமுறைகள், வரதட்சணை மற்றும் சதி என்கிற உடன்கட்டை ஏறுவதும் நமது கலாச்சாரத்தின் பகுதிகளாகவே இருந்துவந்தன. தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற பழக்கங்களைத் தடை செய்யும் சட்டங்கள் இப்போது இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சமூகத்தில் அவை தேவை என்று கருதப்பட்டபோது உருவாக்கப்பட்டவைதான். கலாச்சாரம் என்பது தேங்கி நிற்கும் குட்டை போன்றது அல்ல.

எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் பல்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ஆகவே, இந்தியாவின் கலாச்சாரம் என்பது, பல்வேறு விதமான கலாச்சாரத்தின் கலவைதான். அதனாலேயே பன்னெடுங்காலமாக இக்கலாச்சாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் காப்பாற்றப்பட, பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று நாம் அனைவரும் நினைத்தால், நமது கலாச்சாரம் இந்த உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். உண்மையாகச் சொல்லப்போனால், சமூகம் குழந்தைகளை விரும்புதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அப்படிப்பட்ட சமூகமாகவே நம் சமூகம் கலாச்சார ரீதியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

பால்ய விவாகம் என்பது பல உரிமை மீறல்களின் தொடக்கம். பால்ய விவாகம் என்பது சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. இதனால், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவர்களது வயதையும் திறனையும் மீறிய குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைகளின் நிலைதான் மிகவும் மோசம். சந்தேகம் இல்லை.

சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட பெண்களில் பலர் நிறைய குழந்தைகளுடன், விதவைகளாகவே காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?                                                             

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 15வயதுக்கு உட்பட்ட சுமார் 3 லட்சம் சிறுமிகள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
20-24 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரசவ காலத்தில் இறப்பதைவிட, ஐந்து மடங்கு அதிகமாக 10-14 வயதிற்கு உட்பட்டவர்கள், பிரசவ காலங்களில் இறந்துபோகிறார்கள்
மிகச் சிறிய வயதில் கர்ப்பம் அடைவதும், அதிகமான கருச்சிதைவுகளுக்குக் காரணம். விடலைப் பருவத்துத் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கிறார்கள். குறைந்த வயதுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒரு வயது கடப்பதற்குள் இறந்துபோவது அதிகமாக உள்ளது.

இளம் பெண்களின் நிலை:

(குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்தல் )

உள்நாட்டிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள வயதான ஆண்களுக்குத் திருமணம் என்ற பெயரால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் விபச்சாரம் உள்படப் பல விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

திருமணம் என்பது, இளம்பெண்களைக் கடுமையான பணிகளைச் செய்யவைப்பதற்கும் விபச்சாரத்தில் தள்ளுவதற்கும் ஒரு வழிமுறையாகப் பயன்படுகிறது.

சிறு வயதுத் திருமணங்கள் என்பது பெண்களைக் காப்பதற்கும், கொடுமைப்படுத்தப்படுவதில் இருந்து தடுப்பதற்கும் உதவுகிறது என்பது தவறு. உண்மை என்னவென்றால், அந்தச் சிறுமியின் மேல் அனைத்து விதமான வன்முறை நிகழ்த்தப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் அவளுடைய குடும்பத்தினர், மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து கூறுவது என்னவெனில் புகுந்த வீட்டாரை நம்பு, கீழ்ப்படிந்து நட என்பதுதான். பால்யத் திருமணத்தின் மற்றொரு விளைவு குழந்தைக் கற்பழிப்பு. ஏனெனில், குழந்தைகளுக்குத் தங்களது செயல் அல்லது செயலின்மை ஆகிய இரண்டிற்கும் காரணம் தெரிந்துகொள்ளும் முதிர்ச்சி கிடையாது.

திருமணம் ஆனவரானாலும், ஆகாதவராக இருந்தாலும், எந்தப் பெண்ணுக்கும், வெளியாட்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர்கள், இளம்வயதினர், வயதானவர்கள், முகத்திரை அணிந்தவர்கள், முகத்திரை அணியாதவர்கள் என்று எந்த வகைப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலை இதை நிரூபிக்கிறது.

நமது கிராமங்களில், முகத்திரை அணிந்தவர்கள் மற்றும் திருமணம் ஆன படிப்பறிவற்ற பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இம்மாதிரி நடப்பதற்குக் காரணம் அவர்கள் கல்வி அறிவு அற்றவர்கள் என்பதால் அல்ல. அவர்கள் குறிப்பிட்ட சாதி, இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதாலோ, குழுக்களிடையே ஏற்படும் தகராறுகளுக்குப் பழி தீர்க்கும் விதமாகவோ இவை நிகழ்கின்றன.

கடைசியாக, பால்ய விவாகம், வரதட்சணைக் கொடுமைக்கு முடிவு கட்டும் என்று நினைப்பது தவறானது. பாரம்பரியமாக ஆணாதிக்கம் கொண்ட நமது சமூகத்தில் உள்ள மணமகனின் குடும்பத்தினர் எப்போதுமே மணமகளின் குடும்பத்தினரைக் காட்டிலும் மேலான நிலையிலேயே இருக்கிறார்கள். ஆகவே, பெண்ணின் குடும்பத்தினர் பையனின் குடும்பத்தினரின் கோரிக்கை என்னவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திருமணத்தின்போது, வரதட்சணை என்று எதுவும் பெறப்படாவிட்டால், அதன் பிறகு பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

கற்பிதங்களும் உண்மைகளும்: குழந்தைத் தொழிலாளர்:

கற்பிதம்: குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் இல்லை. வறுமையில் இருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வேலை செய்ய அனுப்பி அதன் மூலம் வருமானம் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்க்கும் நிலையில் உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு வேலை செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. அப்படி இல்லையென்றால், அவர்களுடைய குடும்பங்கள் பட்டினி கிடக்கும். மேலும், சிறு வயதில் ஏதாவது தொழில் கற்றுக்கொண்டால் அவர்கள் எதிர்காலத்திற்கே நல்லது.

உண்மை நிலை: இப்படிப்பட்ட வாதங்களைக் கேட்கும்போது ஒரே ஒரு விஷயத்தை நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. ஒரே மாதிரியான வறுமை நிலையில் இருக்கும் பலரில், ஒரு சிலர் மட்டும் என்ன வந்தாலும் என் மகனைப் படிக்கவைப்பேன் என்ற உறுதிப்பாட்டோடு எப்படி படிக்க வைக்க முடிகிறது? உண்மை என்னவென்றால் வறுமை என்பது ஒரு சாக்குதான். இப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து வேலைக்கு அனுப்புவதற்குக் குழந்தைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள். சமூகக் காரணங்களும் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரக் காரணிகளாக இருக்கின்றன. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், சமூகப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமூகத்தின் வள ஆதாரங்களில் பெரும்பாலானவை இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களது குடும்பத்தில் குழந்தைகள் உட்பட அனைவரும் வேலை செய்தாலும் பட்டினி என்பது தீராது. ஏனென்றால் பட்டினிக்குக் காரணம் நியாயமற்ற சமூக, பொருளாதார நிலவரம்தான்.

அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்வியறிவற்ற பெற்றோர்களுக்குப் பள்ளிகளில் சேர்க்கும் முறைகள் பெரும் சிக்கலாகத் தோன்றுகின்றன. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்குப் பெரும் தடைகளாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பாடத்திட்டம் புரிந்துகொள்ளக் கடினமானவையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இவ்வாறு படிக்க வரும் குழந்தைகள், அவர்கள் தலைமுறையிலேயே கல்வி பயிலும் முதல் தலைமுறையினராக இருந்தால், அவர்கள் பெற்றோர்களால் வீட்டில் தேவைப்படும் உதவிகளை செய்ய முடிவதில்லை.

உடல் ரீதியிலான தண்டனை, ஜாதியின் அடிப்படையில் பாரபட்சம், அடிப்படைத் தேவைகளான கழிப்பிட வசதி, குடிநீர் போன்றவைகூட பள்ளிகளில் இல்லாதது குழந்தைகள் பள்ளிகளை விட்டு விலகி நிற்பதற்கு முக்கியமான பிற காரணங்கள்.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களது உடன் பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்வதே அவர்களது முக்கியமான பணியாக இருக்கிறது. குழந்தைகள் காப்பகம் போன்ற வசதிகள் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் ஆண்-பெண் அடிப்படையில் வேறுபாடுகள் பார்ப்பது வேரூன்றிப்போயிருக்கிறது.

பள்ளிகளுக்கும் போகாமல், வேலை மட்டும் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள், தங்களது வாழ்நாள் முழுவதும், எந்தத் திறனையும் கற்றுக்கொள்ளாமலும் படிப்பறிவற்றும் இருக்கின்றனர். இது எதனால் என்றால் குழந்தைகள் எப்போதுமே தற்காலிக ஊழியர்களாகத்தான் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் வேதியியல் மற்றும் பிற பொருள்களுடன் அவர்கள் புழங்குகிறார்கள். நீண்ட நேர வேலை, வேலை செய்யும்போது உட்காரும் அல்லது நிற்கும் விதம் போன்றவையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. உடல் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு21-ஏ) கூறியுள்ள படி, 5-14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. குழந்தைப் பணியாளர் முறை இந்தச் சட்டத்திற்கு விரோதமானதாக இருக்கிறது.

இதில் குறிப்பிட்ட வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு குழந்தைத் தொழிலாளி பணியிலிருந்து விலகினால், அந்த இடத்தில் ஒரு பெரிய ஆளுக்கு வேலை கிடைக்கும். இந்தியாவில் வேலைவாய்ப்பில்லாத மக்கள் தொகை, அதுவும் வாலிபப் பருவத்தினர். அதிகமாக உள்ளனர். அவர்கள் இந்தக் குழந்தைகளின் இடத்தை இட்டு நிரப்ப முடியும். இந்தக் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க முடியும்.

உலகத்திலேயே இந்தியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 2001இல் எடுத்த புள்ளிவிவரக் கணக்கின்படி, 5-14வயது வரையிலான, 1.25 கோடிக் குழந்தைகள் பல்வேறு பணிகளில் தொழிலாளிகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும்கூட அரசு சாராத் தொண்டு அமைப்பினர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளனர். ஏனெனில், முறைப்படுத்தப்படாத தொழில்துறையிலும், வீடுகள் அளவுக்கு இயங்கும் சிறு தொழில்களும், அதில் வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கையும், கணக்கெடுக்கப்படுவதே கிடையாது.

இவ்வாறு அகில இந்திய அளவில் நம் நாட்டுக் குழந்தைகளுக்குப் பல்வேறு துறையில், பல்வேறு வகையில் ரத்த உறவுகளாலும், மற்ற உறவுகளாலும் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்துவிட்டோம் என நாம் ஒருபுறம் பெருமை பேசிக்கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு இன்னும் நடக்கின்ற கொடுமைகளைக் காணும் பொது மெய்ஞானத்தில் இன்னும் நாம் போதிய வளர்ச்சி அடையவில்லை என நினைக்கின்ற பொது மனசு கணக்கத்தான் செய்கிறது.

ஒன்றே செய் ஒன்றும் நன்றே செய் நன்றும் இன்றே செய் என்னும் முன்னோர் வாக்கிற்கு இணங்க வரும் தலைமுறையை நாம் வாழவைக்க இனியாவது நாம் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழ் இனம் நாளை தறிகெட்ட இனமாய் மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

SHARE