239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடலில் கண்டெடுப்பு?

302

 கடந்த ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ரி யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்கை நோக்கி, மலேசிய விமானம் ஒன்று, கடந்த ஆண்டு மார்ச் 8ல் சென்றது. எம்.எச் 370 என்கிற அந்த விமானத்தில், பயணிகள், பணியாளர்கள் உட்பட மொத்தம் 239 பேர் இருந்தனர். இந்நிலையில், புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரத்தில், திடீரென அந்த விமானம் மாயமானது. அதனை, கண்டுபிடிக்கும் பணியில், சர்வதேச நாடுகள் ஈடுபட்டன. இருப்பினும், விமானத்தின் எந்த ஒரு பாகமும், கிடைக்கவில்லை. இதற்கிடையே, விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது என்றும், அதில் இருந்த எவரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனவும், மலேசிய அரசு அறிவித்தது.

இருந்த போதிலும், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் (ரி யூனியன் தீவு) விமானத்தின் முக்கிய பாகம் ஒன்று, நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அது, மாயமான மலேசிய விமானத்தின் பாகம்தானா என்பது குறித்து, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மலேசிய போக்குவரத்து துணை அமைச்சர் அப்துல் அஜிஸ் கூறும்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகம், மாயமான விமானத்தின் பாகம் போல்  தெரிகிறது என்றார்.  இதனை உறுதி செய்வதற்காக, கண்ெடடுக்கப்பட்ட விமான பாகத்தின் புகைப்படங்களை, பிரான்ஸ் நாட்டின் விமான பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் வாரன் டிரஸ் கூறும்போது, தேடுதல் வேட்டையில் இந்த நிகழ்வு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம், ஆய்வுக்காக பிரான்சுக்கு அனுப்பப்பட்டு உள்ளது

SHARE