மீனவர்கள் வலையில் அபூர்வ மயில் மீன் சிக்கியது.

334

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது.

இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றன. அவர்கள் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு அப்பால் சென்று வலையை விரித்து மீன்பிடித்தனர்.

அவர்களது வலையில் உயர்ரக மீன்களான நெய்மீன், விளமீன், பாறைமீன், நெடுவா, மயில் மீன், வாவல் உள்பட பலவகையான உயர்ரக மீன்கள் சிக்கின.

அதிகபட்சமாக 50 கிலோ எடையுள்ள மயில்மீனும் 20 கிலோ எடையுள்ள பாறைமீனும் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த மீன்கள் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்த மீன்களை கேரள வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி சென்றனர். இதனால் சின்னமுட்டம் துறைமுகம் களைகட்டியது.

Fish 01 Fish

 

SHARE