தினப்புயல் பத்திரிகைக்கான செய்திகள்
பல்வேறு தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக வன்னி மண்ணில் இருந்து கடந்த
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தினப்புயல்’ வார இதழானது
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளுக்கமைவாக பிரசுரிக்கப்படுகின்றன.
2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி இப்பத்திரிகை வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ்
‘தினப்புயல்’ வாரப் பத்திரிகையின் இயக்குனர் ஆவார். இதன் உள்ளடக்கங்களாக அரசியல், ஆய்வுக்
கட்டுரைகள் அறிவியல், உலகம், சினிமா, விளையாட்டு, பிராந்தியம், சிறுகதை, கவிதை, விந்தை
உலகம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய அம்சங்களினைக்கொண்ட
இப்பத்திரிகையின் அனைத்து வெளியீடுகளையும் இலங்கைத்தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம
ஆவணக்காப்பகமான நூலக நிறுவனம் ஆவணப்படுத்தி உலகளாவிய ரீதியில் திறந்த
அணுக்கத்தில் அனைவருக்கும் பகிரவுள்ளது.
நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் மரபுரிமைகள், கலை,
கலாச்சாரங்கள், எழுத்தாவணங்கள், வரலாறுகள், அடையாளங்கள் என அனைத்தையும் எண்ணிம
வடிவமாக்கி noolaham.org எனும் எண்ணிம நூலக வலைத்தளத்தின் ஊடாக திறந்த அணுக்கத்தில்
அனைவருக்கும் பகிர்ந்து வரும் அளப் பெரிய வரலாற்றுப் பணியினை உலகலாவிய ரீதியில் கடந்த
பதினொரு ஆண்டுகளாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதுவரை 15,500க்கும் அதிகமான
எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி இணையத் தளத்தின் ஊடாக அனைவருக்கும்
பகிர்ந்துள்ளது.
இவ் ஆவணக்காப்பகத்தில் உலகின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் தமிழ் பேசும் சமூகங்களின்
ஊடாக வெளிவரும் 2135 பத்திரிகை இதழ்கள் (33 தலைப்புகள்) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுள் திசை, சரிநிகர், வைகறை, தினமுரசு முதலியனவும் எண்ணிம
ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல வலம்புரி, தினக்கதிர், தீபம் முதலிய பத்திரிகைகளும்
விரைவில் ஆவணப்படுத்தப்பட உள்ளன. இந்த வரிசையில் ‘தினப்புயல்’ பத்திரிகைகளையும்
ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை 20/11/2015 அன்று இல 154, கண்டி வீதி, தேக்கவத்தை,
வவுனியா என்கின்ற முகவரியில் அமைந்துள்ள தினப்புயல் பத்திகை அலுவலகத்தில் வைத்து
அதன் இயக்குனர் திரு. சக்திவேல்பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல்
அலுவலகரிடம் கையளித்ததுடன், தினப்புயல் பத்திரிகையில் இதுவரையான வெளியீட்டில் ஒரு
தொகுதியினையும் வழங்கியிருந்தார்.
இதுவரை வெளியான தினப்புயல் பத்திரிகைமுதல் தொடர்ச்சியாக வெளிவரும் தினப்புயல்
பத்திரிகைகளும் இனிவரும் காலத்தில் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்
ஆவணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிரப்படும்.