6 ஆயிரம் தியேட்டர்கள்…! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு

553

கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
வெளியீட்டில் சாதனையை நிகழ்த்துகிறது கோச்சடையான்!
‘கோச்சடையான்’ திரைப்படத்தை சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தீர்மானித்துள்ளனர். இவற்றில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகிறது. சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.
கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள சென்னையின் புறநகர் பகுதியான காணாத்துர் என் இடத்தில் உள்ள மாயாஜால் வளாகத்தில் 16 தியேட்டர்கள் உள்ளன. இங்கு அனைத்து திரையரங்குகளிலும் ‘கோச்சடையான்’ படம் மட்டுமே வெளியாகிறது. அதாவது இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 100 காட்சிகள் நடைபெறவிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் மொத்தம் 300 காட்சிகள். இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத மிகப் பெரிய சாதனை இது என திரையுலகினர் கூறுகின்றனர்.
SHARE