முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அகில இந்திய பாஜ தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

254

 

முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அகில இந்திய பாஜ தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். முதல் வரின் உடல்நிலை குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்தனர். முன்னதாக, மாநில பாஜ தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22ம்தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

daily_news_744243860245

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.  அதன் பின்னர் அவருக்கு சுவாச கோளாறுக்கான சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சை, பிசியோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை மூலம் அவரது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அப்போலோ மருத்துவமனை சார்பில் தினமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய பிரபல டாக்டர் ரிச்சர்ட் பீலே லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டார்.

அவரும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களுடன் ஆலோசித்து, அவரது உடல் நிலைக்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டார். பின்னர் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்மானி மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார். நேற்றுடன் 21வது நாளாக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி முதல்வரை சந்திக்க சென்னை வருவதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார். ஆனால், இதுவரை அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக அகில இந்திய பாஜ தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் முதல்வரை பார்க்க நேற்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர்கள் சரியாக மதியம் 2.18 மணி அளவில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.  அங்கு மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து பேசினர். தொடர்ந்து மருத்துவக் குழுவினரிடம் இருவரும் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கேட்டனர். சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து மருத்துவ குழு அவர்களுக்கு விளக்கியது. பின்னர் 2.35 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். ஆனால், அவர்கள், முதல்வர் உடல் நலம் குறித்து விசாரித்தது பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக சென்னை விமான நிலையத்திலிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்துக்கு பிற்பகல் 12.15 மணிக்கு அமித் ஷா, அருண் ஜெட்லி ஆகியோர் வந்தனர். அங்கு தமிழக பாஜ நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்பி, எச்.ராஜா ஆகியோருடன்  தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டனர். அப்போலோ செல்லும் முன் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய பாஜ தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்துள்ளனர்.

இவர்களின் வருகையில் அரசியல் விஷயங்கள் எதுவும் இல்லை. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே பாஜ சார்பில் டெல்லி சென்று பேசியுள்ளோம். இவர்களின் இன்றைய வருகை, சிகிச்சை பெற்றுவரும் முதல்வரை பார்ப்பதற்கானது. இதில் அரசியல் எதுவும் இல்லை’’ என்றார்.

SHARE