848

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம்.

தலைமை நீதிபதி ப.சதாசிவத்தின் பதவிக்காலம் அடுத்தவாரம் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதையடுத்து 27ஆம் தேதி அன்று நீதிபதி ஆர்.எம்.லோதா, இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்துவரும் ஆர்.எம்.லோதா, தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.

வழக்கின் பின்னணி

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வெவ்வேறு வழக்குகளில், மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 15 குற்றவாளிகளுக்கு, அவர்களது கருணை மனு மீது மத்திய அரசு முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டதையும், அதனால் அந்த குற்றவாளிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கபட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்

 

அதையடுத்து, ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதே காரணங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று மனு தொடுக்கப்பட்டது. அதனை அடுத்து ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்ததாலும், அந்த விசாரணை என்பது சிறப்பு சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்பதாலும், அதில் தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனையை குறைப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர், தமிழக அரசு மத்திய அரசிடம் கலந்துபேசியிருக்கவேண்டும் என்றும், தமிழக அரசு அப்படி செய்யவில்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

இவர்கள் ஏழுபேரின் விடுதலையை எதிர்த்து ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்கள். இந்த மூன்று மனுக்களையும் ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் அதன் மீதான விசாரணைகளை நடத்தி முடித்திருந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி ப.சதாசிவம் இன்று தெரிவித்துள்ளார்.

SHARE