ஆனையிறவு பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு

527
aanaiiravu_protest_001

கிளிநொச்சி ஆனையிறவில் தமிழ்மக்களின் பூர்வீக நிலத்தை இராணுப்படைத்தளம் அமைப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட நிலம் சுவீகரித்தல் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய இன்று காலை நிலஅளவை திணைக்களம் அளக்க முயன்றபோது பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த இடத்திற்கு காணிக்கான உரிமை ஆவணங்களுடன் வந்த காணி உரிமையாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரநிதிகளும் அளவீடு செய்வதை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியன பிரசன்னமாகின.

இந்த நிலையில் இந்தக்காணிகள் காலம்காலமாக தமிழ்மக்கள் வாழ்ந்த நிலம் என்பதை அங்கு வந்த நிலஅளவை அதிகாரிகளுக்கும் இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுக்கு வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் நாவை.குகராஜா உபதவிசாளர் நகுலேஸ்வரன் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன் உட்பட காணி உரிமையாளர்கள் எடுத்து விளக்கியிருந்தனர்.

எனினும் இது மேலிடத்து உத்தரவு என சொல்லி பொலிசாரின் உதவியுடன் அளக்க முற்பட்டபோது காணி உரிமையாளர்கள் மக்கள் மற்றும் பிரதிநிதிகள், நிலஅளவையாளர்களையும் அவர்ளுடைய கருவிகளையும் முற்றுகையிட்ட நிலையில் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட காணிகள் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய அரசாங்க அதிபர் மற்றும் கண்டாவளை பிரதேசசெயலர் ஆகியோர் மாவட்டத்தில் இல்லா நிலையில் அவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போது கண்டாவளை பிரதேசசெயலரின் தொலை அழைப்பில் பதில் இல்லாத நிலை இருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியபோது அவர் அது பற்றி தனக்கு தெரியாது என்றும் இது கண்டாவளை பிரதேசசெயலர் முகுந்தனோடு தொடர்புபட்ட விடயம் எனவும் பதில் அளித்திருந்தார்.

ஆயினும் தான் வரும்வரை இந்த காணி அளவிடும் விடயத்தை நிறுத்தி பின்பு காணி உரிமையாளர்களுடன் பேச்சுக்களை நடாத்திய பின்பு முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

இந்த நிலையின் காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை ஆனையிறவில் இராணுவத்துக்காக காணி அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்திருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதிபொலிஸ்மா அதிபர், பொலிஸ் உயர்அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் என பெருமளவில் பாதுகாப்பு தரப்பினர் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் முரண்பாடுகள் ஏதுமற்ற நிலையில் தற்போது காணி அளவிடும் விடயம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இருப்பினும் இன்று காலை 9 மணிமுதல் மக்களுக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பதில் இராணுவம் மக்களுக்கு பசப்பு வார்த்தைகளையும், சிறுபிள்ளைத்தனமான வாக்குறுதிகளை கொடுத்து மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் அங்கிருந்து அகலச்செய்துவிட்டு பின் காணியை அளந்துவிட பகீரத பிரயத்தனங்கள் மேற்கொண்டது.

காணி உரிமையாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய இந்த காணி அபகரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே தவிர இது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு எந்த வித உறுதிப்பாடும் இல்லை என்பது மக்களால் தெரிவிக்கப்படுகின்ற விடயமாக காணப்படுகின்றது.

 

SHARE