எந்த பயங்கரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்க தயார்!- இராணுவத் தளபதி

450
   water-crow-20
கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 3ம் திகதி ஆரம்பமான நீர்க்காகம் போர் பயிற்சிகளில் எதிரிகளின் இறுதி முகாம்களை அழிக்கும் பயிற்சிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன.

இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் விசேட அதிரடிப்படையில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள எதிரிகளின் முகாம்களை அழிக்கும் இறுதித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனடிப்படையில், கொமாண்டோ படையினர் நேற்று மாலை மட்டக்களப்பு புன்னக்குடாவில் எதிரியின் இறுதி முகாமை அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் இன்று புல்மோட்டை தல்அராவ பிரதேசத்தில் இன்று காலை எதிரியின் இறுதி முகாமை அழிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இராணுவம், விமானப்படை, கடற்படையினர் இணைந்து கடந்த 3ம் திகதி ஆரம்பித்த நீர்க்காகம் போர் பயிற்சியில் முப்படைகளை சேர்ந்த 4 ஆயிரத்து 300 படையினர் பங்கேற்றதுடன், வெளிநாட்டு படையினர் பலரும் அதில் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் எதிரிகளின் 21 முகாம்களை அழிக்கும் பயிற்சி இலக்கை படையினர் வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.

எந்த பயங்கரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்க தயார் – இராணுவத் தளபதி

எந்த பயங்கரவாத அச்சுறுத்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் இராணுவம் இலங்கையில் இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

நீர்க்காகம் இராணுவ கூட்டுப் பயிற்சிகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் இராணுவத்தின் மீது தொடர்ந்தும் நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

நாட்டுக்கு எப்படியான அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதில் இருந்து நாட்டை காப்பற்ற இராணுவம் இருக்கின்றது என்பதை மக்களுக்குள் கொண்டு செல்லும் நோக்கில் முப்படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த போர் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வருடத்திற்கு வருடம் இந்த பயிற்சியில் வெளிநாட்டு படையினர் சிறந்த முறையில் இந்த பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

7 நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் உட்பட 41 பேர் நீர்க்காகம் பயிற்சி பங்கேற்றனர். இது இலங்கை படையினருக்கு மிகவும் முக்கியமான சந்தர்ப்பம்.

இலங்கையின் முப்படையினரும், வெளிநாட்டு படையினரும் இணைந்து மேற்கொள்ளும் போர் பயிற்சி இது. இதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE