இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது

531

கொஸ்லாந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு உதவிக் கரம் நீட்டுவதற்கும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

கொஸ்லாந்த மண்சரிவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை: அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்கு நிவாரண உதவிகளை வழங்க தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஐ.நா அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஸ்டோஃபன் டுஜிரிக் இன்று காலை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் உதவியை கோர வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.  இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நாணயக்கார, நான் அறிந்த வரையில் தற்போதைக்கு உதவிகள் அவசியமில்லை.

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கத்திற்கு முடியும். சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டால் மாத்திரமே வெளிநாட்டு உதவிகள் தேவைப்படும்.

தற்போது அப்படியான உதவிகள் தேவைப்படாது. இதனை இலங்கையால் சமாளித்து கொள்ள முடியும் என்றார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ஜனாதிபதி பரிவாரங்களுடன் விஜயம்- மகிந்த இனவாதி: நந்தன குணதிலக்க

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், விமல் வீரவன்ச உள்பட முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போது ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களின் வருகையை எதிர்பார்த்து காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு அமைச்சின் புற்தரையில் இரண்டு வான்படை ஹெலிகெப்டர்கள் வந்து காத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கொஸ்லாந்தை விஜயத்தின்போது மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஜனசெவண வீடமைப்புத்திட்டம் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹெலிகெப்டர் மூலம் நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பதுளை கொஸ்லந்த ஹல்துமுல்ல –மீரியபெத்த பிரதேசத்தை சென்றடைந்துள்ளார்.

நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து தேடிப்பார்த்து அவர்களுக்கு தேவையான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மீரியபெத்த பிரதேசத்தில் உள்ள 120 தோட்ட லயன் வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மகிந்த இனவாதி – நந்தன குணதிலக்க

எங்கோ ஓரிடத்தில் இருந்த மகிந்த ராஜபக்ஷவை கொண்டு வந்த அவரை தேசிய தலைவராக்கி ஜனாதிபதி பதவியில் அமர்த்தினாலும் அவர் தேசிய தலைவர் அல்ல என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாணந்துறை நகர சபையின் தலைவர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ஷ இன்று வீண்விரயமாக்கும் இனவாதத்தை கையில் எடுத்துள்ள ஆட்சியாளர் எனவும் அவர் கூறியுள்ளார். ஜே.வி.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான நந்தன குணதிலக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர். அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஸ்தாப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ள நந்தன குணதிலக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அவர் அதனை மறுத்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை அவர் மறுத்த போதிலும் நந்தன குணதிலக்க மாத்திரமல்லாது, முதலாம் முன்னணி என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ள ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர்களான அச்சல ஜாகொட, சந்திரசேன விஜேசிங்க, வருண ராஜபக்ஷ ஆகியோர் அடுத்த சில தினங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 182 சிறார்கள்: பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளின் பொறுப்பை ஏற்ற அரசாங்கம்

ஹல்துமுல்லை, மீரியபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 12 வயதுக்கும் குறைந்த 182 சிறுவர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் கொஸ்லாந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

12 வயதுக்கு குறைந்த 82 சிறுமிகள்,100 சிறுவர்கள், 179 பெண்கள், 157 ஆண்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தவிர பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீரியபெத்த நிலச்சரிவில் பெற்றோரை இழந்த 75 பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது.

இவர்களின் எதிர்காலம் சம்பந்தமான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszAQUKXku6.html#sthash.Km3TgqJI.dpuf

SHARE