பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

437

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பதவிகளை எதிர்பார்த்து அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலையை கைவிட கட்சி முடிவெடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளது என்றும் அமைச்சர் ரவூப் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் சார்பில் ஒருவரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் வாக்குகள் எதிரணிக்குச் சென்று விடுவதைத் தடுக்கும் நோக்கில், அரசின் ஆலோசனை மற்றும் அனுசரணையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

SHARE