வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களை சீண்டத் தயாராகவே இருக்கின்றோம்-வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன்

455

downloadவட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களை சீண்டத் தயாராகவே இருக்கின்றோம். இத்துடன் இத்தகைய சீண்டும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தள்ளார்.

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் யாழ். ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – அண்மையில் வட மாகாண சபையில் நான் உரையாற்றிய விடயம் சம்பந்தமாக நாரந்தனையில் மர நடுகை திட்டத்தின்போது ஐங்கரநேசனினால் விமர்சிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை அமர்வில் நான் உரையாற்றிய வேளையில் அதற்கு ஏதும் எதிர்ப்பு இருந்தால் தெரிவித்திருக்கவேண்டும்.

antony 465454d

இதனை விடுத்து நாரந்தனையில் மரம் நடுகையின்போது முதலமைச்சரும் இருந்த மேடையில் இதனை விமர்சிக்கவும் என்னைப் பற்றி கதைக்கவும் வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சரும் கூட இருந்த நிலையில் இத்தகைய விமர்சனம் இடம்பெற்றமை கவலைக்குரியதாகும். முதலமைச்சர் என்றாலும் இதனைத் தடுத்திருக்கவேண்டும். இன்று நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக சிலர் கூறுகின்றார்கள். பிரதேச வாதம் செய்வதாக கூறுகின்றார்கள்.

யார் அரசாங்கத்துடன் இணைந்து இருந்தவர்கள், செயற்பட்டவர்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். நாம் இதனை கதைக்க வெளிக்கிட்டால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவில் நடந்த யுத்தத்தில் நாம் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்தவர்கள். மக்களின் துன்ப துயரங்களை நேரில் கண்டவர்கள்; அனுபவித்தவர்கள். இந்த வகையில் ஒரு சிலரே இருக்கின்றோம்.

கொழும்பில் இருந்துவிட்டு வந்து யாரும் எமக்கு ஆலோசனைகள் கூறத்தேவையில்லை வட மாகாண சபை கலைக்கப்படுமாக இருந்தால் அவர்கள் மீண்டும் கொழும்புக்கு சென்றுவிட முடியும் எம்மைப் பொறுத்தவரையில் அந்த நிலைமை இல்லை. நாம் மக்களுடன் இருக்கப்போகின்றோம்; வாழப்போகின்றோம். அதனால்தான் நான் அன்று குறிப்பிட்டேன் வட மாகாண விவசாய அமைச்சர் ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் கொடுத்த விதை நெல்லை முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பங்கிடவேண்டும் என்றும் அதேபோன்று ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதீனிய அழிப்பை எமது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மேற்கொள்ளவேண்டும் என்று. இதற்கு உள்ளுக்குள் கதைக்காமல் வெளியால் வந்து விமர்சனம் செய்வது நல்லதல்ல.

நானும் எதற்கும் முகம்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் முதலமைச்சருக்கு எதிராகவோ அன்றி அமைச்சர்களுக்கு எதிராகவோ நடந்துகொண்டவன் அல்ல. நடக்கப்போவனும் அல்ல. ஆனால் மக்களுடைய தேவைகளைது குறைநிறைகளை – கூறவேண்டியது எமது கடமையாகும். இதற்குத்தான் என்னையும் மக்கள் தெரிவுசெய்து வட மாகாண சபைக்கு அனுப்பியுள்ளார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில வட மாகாண சபை நல்லமுறையில் இயங்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இதனால்தான் நாம் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம். இதனை யாரும் பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். நான் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொருளாளர் ஆவேன். என்னை யாரும் கட்சியில் இருந்து நீக்கமுடிந்தால் நீக்கட்டும். – எனவும் குறிப்பிட்டார்.

SHARE