நூறுவருடங்களுக்கும் மேலான தமிழர் உரித்துக்காணிகள் ரவிகரன் தலையீட்டில் மீட்பு! வனஇலாகாவின் எல்லைகள் பின்சென்றன!!!

412
நூறுவருடங்களுக்கும் மேலாக தமிழரின் காணிகளாக இருந்துவந்த பல ஏக்கர் நிலப்பரப்பானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலையீட்டில் மீள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு, கரிப்பட்ட முறிப்பு போன்ற கிராமங்களிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வறுமைநிலையில், ஒட்டுசுட்டான் வாழ் தமிழ் மக்கள் தமது சொந்த காணிகளை துப்பரவு செய்யாத நிலையில், அவற்றை வன இலாகவினர் எல்லையிட்டு தம் எல்லைக்குள் கொண்டுவர முயன்ற நிலையே நேற்று ரவிகரன் தலையீட்டில் செயலிழந்து போயிருக்கிறது.
உங்களின் காணிகளை துப்பரவு செய்து, எல்லைகளை இட்டு அடையாளப்படுத்துவதை தீவிரப்படுத்துங்கள் என்றும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள், தனக்கு முறையிட்ட அக்கிராம மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், நேற்று காலை ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு கிராமங்களில் இருந்து காணி அபகரிப்புகள் தொடர்பான முறைப்பாடுகள் ரவிகரன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.
தமது காணிகளில் எல்லைகளை இடுவதற்கான வேலைகளை வனஇலாகாவினர் தீவிரப்படுத்துவதாகவும் தம் காணிகளை மீட்டுத்தருமாறும் மக்கள் ரவிகரனிடம் கோரியுள்ளனர். முறைப்பாடுகளை அடுத்து அப்பிரதேசத்திற்கு விரைந்த ரவிகரன், குறித்த இடங்களை பார்வையிட்டு எல்லைக்கற்கள் நாட்டப்பட்டிருப்பதையும் சில இடங்களில் எல்லைக்கற்கள் நாட்டப்படுவதற்கு குவிக்கப்பட்டிருப்பதையும் சில இடங்களில் எல்லைக்கற்கள் நாட்டப்படுவதற்கான குழிகள் தோண்டப்பட்டிருப்பதையும் அவதானித்திருந்தார்.
மக்களோடு முறைப்பாட்டு பகுதிகளை பார்வையிட்ட ரவிகரன், அவர்கள் வசமிருந்த காணிப்பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு ஓரிரு மக்கள் பிரதிநிதிகளுடன் வனஇலாகா பிரிவினரின் அலுவலகத்திற்கு புறப்பட்டுச்சென்றார்.
மாங்குளத்தில் அமைந்திருந்த அவர்களது அலுவலகத்தில் தலைமை அதிகாரி விடுமுறையில் இருப்பதாகவும் கள அதிகாரி மணவாளன் பட்ட முறிப்பு கரிப்பட்ட முறிப்பு பகுதிகளில் எல்லைகளை நாட்டும் களப்பணிகளில் இருப்பதையும் உறுதிப்படுத்தியதையடுத்து கள அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணிநேரத்தின் பின்னர் மணவாளன்பட்ட முறிப்பில் அவருடனான சந்திப்பொன்றை ஏற்படுத்தியிருந்தார்.
மக்களின் காணிகளில் எல்லைக்கற்களுக்கான குழிகள் தோண்டப்பட்டிருப்பதையும் சில இடங்களில் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய ரவிகரன் மக்களின் காணிகள் துப்பரவாக்கப்படாததை வைத்து இவ்வாறு எல்லைகளை அதிகரிப்பது முறையல்ல என்பதை தெளிவு படுத்தினார். மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமுன்னர் மக்களுக்கு இது தொடர்பில் அறிவித்து மக்களோடு இணைந்தே இவ்வாறான எல்லைகளை இடும் பணி நடாத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
மக்களின் உறுதிகளை பார்வையிட்ட வனஇலாகா கள அதிகாரி, மக்களோடும் வடமாகாணசபை உறுப்பினரோடும் பற்றைகள் முற்றியிருந்த மக்களின் எல்லைகளை பார்வையிட்டு தம் எல்லைகளை தாம் மீள மாற்றம் செய்வதாகவும் மக்கள் தமது காணிகளை எல்லைப்படுத்தி, வன இலாகா எல்லையிடலில் ஒத்துழைக்குமாறும் கேட்டிருந்தார்.
வறுமைநிலையோடு நாளாந்த இருப்பை தக்கவைக்க போராடும் நிலையில் எமது காணிகளை துப்பரவாக்கி எல்லைப்படுத்த இயலாத நிலையிலேயே இவை இன்று பற்றைகளாகி உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய மக்கள், சந்ததி சந்ததியாக தமிழர் இருப்பை நிலைநாட்டி வயல் விதைத்து அறுவடை செய்த தம் பாரம்பரிய காணிகள் மீண்டும் தங்களுக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியடைந்து உடனடி நடவடிக்கை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினருக்கு நன்றிகளை தெரிவித்திருந்தனர்.
image01   image03
image06   image09
image013   image015
SHARE