ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

429

ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்காக தேர்தல் திணைக்களம் 300 கோடி ரூபா பணத்தை நிதி அமைச்சிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தேசிய ரீதியான தேர்தல் ஒன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு நிதி கோரியுள்ளார்.

தேர்தலை நடாத்துவதற்கு தேவையான அதிகாரிகளை அணிதிரட்டுதல், தேர்தலுக்கான ஆரம்ப கட்டப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஒன்றும் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை வாக்கெடுப்பின் போது 2014ம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பின் அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை கோடி பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளதுடன், சுமார் பத்து லட்சம் பேர் வரையில் தபால் மூலம் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் திணைக்களத்திலும் சில புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஜனாதிபதி தேர்தல் அல்லது தேசிய ரீதியான தேர்தல் ஒன்று தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிப்புக்கள் எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 2ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு?

எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிடக் கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 2ம் திகதி ஒர் வெள்ளிக்கிழமை என்பதனால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்படலாம் என அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் 2, 3 அல்லது 7ம் திகதி தேர்தலை நடாத்த முடியும் என ஜனாதிபதியின் குடும்ப ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர்.

முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளியிடக் கூடும் என்ற காரணத்தினால் 2ம் திகதியை தவிர்த்து 3ம் திகதி அல்லது 7ம் திகதியில் தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மூன்று தினங்களை விடவும் ஜனவரி மாதம் 15 மற்றும் 21ம் திகதிகளிலும் தேர்தலை நடத்த வாய்ப்பு உண்டு என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை நாளில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் தீர்மானித்த போது முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் விசேட தொழுகையில் ஈடுபடும் தினம் என்பதனால் அந்த தினத்தில் தேர்தலை நடத்தினால் முஸ்லிம் அதிகாரிகளும் வாக்காளர்களும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மறுபுறத்தில் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் தேர்தல்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE