இன்னும் எத்தனை பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டால் முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிகளைத் துறந்து முஸ்லீம் காங்கிரசைப் பலப்படுத்துவார்கள்?

454

 

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் காலகட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் இன்னும் உணர்வடையாது அரசாங்கத்தின் அடிவருடிகளாகவும், ஊதுகுழலாகவும் செயற்படுவதனை மௌலவிகள் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மறைந்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்கள் உண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை வளர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் மட்டுமல்லாது தமிழ், சிங்கள, முஸ்லீம் ஒற்றுமையை வலுப்படுத்தியே பல மேடைகளில் அவருடைய பேச்சுக்கள் இடம்பெற்றது. அதனாலேயே அஷ்ரப் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியினால் சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டார்.
இதனை அனைத்து முஸ்லீம்களும் நாடுகளும் அறிந்த விடயம் தான். இதனை இருட்டடிப்புச் செய்துவிட்டு, அதேயரசு தாங்கள் அதனை செய்யவில்லை என மறுப்பும் தெரிவித்திருந்தது. அக்காலகட்டத்தின் பொழுது அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்த நிலையில் காணப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ், ஏனைய முஸ்லீம் அமைப்புக்கள் மீண்டும் அதே அரசுடன் கைகோர்த்து நிற்பது என்பது வேடிக்கைக்குரிய விடயமாகும். தமிழ் மற்றும் முஸ்லீம் இரு இனங்களும் இணைந்து எதிர்க்கட்சியை அமைக்குமளவிற்கு பலத்தை பேணிக்கொள்ள முடியும். ஆனால் அதனை விடுத்து அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதனூடாகவே மீண்டும் முஸ்லீம் மதத்திற்கு ஆபத்தினை தோற்றுவிக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது எனலாம்.
அநுராதபுர மற்றும் தம்புள்ளை, திருகோணமலை இவ்வாறு பழைமை வாய்ந்த பள்ளிவாசல்கள் அரசினால் திட்டமிட்டு உடைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறுதுணையாக பொதுபலசேனா என்ற அமைப்பு செயற்பட்டது. அது மட்டுமல்லாது தர்கா பிரச்சினையிலும் கூட அரசாங்கத்தினுடைய ஒரு தலைப்பட்சமான முடிவுகள் அமையப்பெற்றன. வௌ;வேறு சந்தர்ப்பங்களிலும் முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக தற்பொழுது இருக்கக்கூடிய அரசு வேண்டுமென்று சதித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. அப்போதெல்லாம் அரச தரப்பில் அங்கம் வகிக்கக்கூடிய முஸ்லீம் தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் அரசாங்கத்தினரை விட்டு வெளியேறுவதற்கு இன்னமும் தயக்கம் காட்டிவருகின்றனர். கிழக்கு மாகாண சபையில் வெற்றிபெற்றால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் கைகோர்க்கவும், ஆட்சியமைக்கவும் போவதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் இறுதியில் அரசுக்கு சார்பாக பெல்டி அடித்துவிட்டார்.

அக்காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபொழுது ஹக்கீம் அவர்கள் வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். தம்மோடு இணைந்து செயற்படப்போவதாக தெரிவித்திருந்தார். இறுதியில் ஏன் இந்த துரோகத்தினை விளைவித்தார் என்பது புரியாமல் போய்விட்டது. இன்னும் எமது மதத்திற்கெதிரான நடவடிக்கைகள் சதித்திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்துக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை. எதிர்காலத்தில் முஸ்லீம் காங்கிரசினை பலப்படுத்தினாலேயே மத வழிபாட்டுத்தலங்களைக் தக்கவைத்துக்கொள்ளமுடியுமே தவிர, அரசாங்கத்துடன் ஒத்துப்பாடி எமது தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது. அதற்கு சிங்கள இனவாதிகள் ஒருபோதும் உடன்படவும் மாட்டார்கள்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக காணப்படுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படுவதனூடாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் வடபகுதியிலிருந்து முஸ்லீம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். நாம் எமது தமிழ்பேசும் இனத்திலிருந்து ஒதுங்கியிருக்கக்கூடாது. அதன் விளைவே இன்று எமது மதத்திற்கு சிங்கள இனவாதிகளால் பிரச்சினைகளாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறுவது என்னவென்றால், மதத்திற்கு எதிராக யார் எழும்புகின்றார்களோ அவன் ஒரு சாத்தான் என்கிறது. ஜிகாத் புனிதப்போரை ஆரம்பிக்கவேண்டும். ஜிகாத் என்பது மதத்திற்கெதிராக செயற்படுகின்றபொழுது இறுதி யுத்தம் என்பதுபோலாகும். முஸ்லீம் காங்கிரஸ் ஒட்டுமொத்த முடிவுகளை எடுக்கின்றபொழுது அதிலிருக்கக்கூடிய அமைச்சர்கள் முகஸ்துதிக்காக ஆம் என்று கூறிவிட்டு அரசாங்கத்துடன் தனியே கைகோர்த்து நிற்பது என்பது கவலைக்குரிய விடயமாகும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போன்று ஒற்றுமையாக செயற்பட்டால் எமது முஸ்லீம் காங்கிரஸ் ஒன்பது அல்லது பத்து ஆசனங்களை கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
களத்தில் நின்றுகொண்டுதான் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். பலவீனமாக இருந்தால் எதிரி எம்மை இலகுவில் வீழ்த்துவதற்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். இத்தருணத்தில் முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரச தரப்பில் கைகோர்த்துக்கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டியது கட்டாயமாகும்.

SHARE